விரும்பும் பதிவைத் தேடுக !

Saturday, 22 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (02) மண் திணிந்த நிலனும் !

 

மண்  செறிந்து  விளங்குவது நிலம்; அந்நிலத்தை ஏந்திக் கொண்டிருப்பது போல்   உயரத்தில் இருப்பது வானம்;

===============================

பாடலின் பின்னணி

===============================

சேரநாட்டை ஆண்டு வருகிறான்  மன்னன் உதியஞ்சேரலாதன்.  வன் நிலம், வானம், காற்று, தீ, நீர் என்னும் ஐம்பெரும் பூதங்களைப் போல் பொறுமை, ஆராய்ச்சி, வலிமை, அழிக்கும் ஆற்றல், அருள் ஆகியவை உடையவன் என்று கூறப்படுகிறது. பாரதப்போர் நடந்த போது பாண்டவர்களுக்கும் கௌவரவர்களுக்கும் பெருமளவில் உணவளித்து உதவியவன் என்றும், இமயமும் பொதியமும் போல் இவன் சோர்வின்றி நிலைபெற்று வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார் புலவர் !

==============================

பாடியோர்

==============================


பாடலை இயற்றியவர் முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் பெரும்புலவர். இவர் பெயர் முரஞ்சியூர் முடிநாகனார் என்பது அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை, அவர்களின் கருத்து;  ஆனால் முரஞ்சியூர் முடிநாகராயர் என்று டாக்டர் உ. வே. சுவாமிநாத ஐயர் அவரது உரையில் குறிப்பிடுகிறார். இவ்வாறு இருவேறு கருத்துகள் உரையாசிரியர்களிடம்  நிலவி  வருகிறது !

===============================

பாடப்பட்டோன்

===============================

இப்பாடல் மூலம் விதந்து பாடப்பட்டோன், சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். இவன் உதியன் என்றும், உதியஞ்சேரல் என்றும், உதியஞ்சேரலன் என்றும் அழைக்கப்பட்டான். வன் வாழ்ந்த காலத்தின் தொடக்கம் கி.பி. 27 என்றும் கி.பி. 131 என்றும் வரலாற்று ஆசிரியர்கள் திரு.என்.சுப்ரமணியன், திரு K.A. நீலகண்ட சாத்திரி போன்றோர். கூறுகிறார்கள். இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தை என்பதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது !

================================

முரண்பட்ட செய்திகள்
=================================

பாரதப் போர் கி.மு.10-ஆம் நூற்றாண்டுக்கு  முற்பட்டக் காலத்தில் வடநாட்டிலுள்ள குருச்சேத்திரம் என்னும் இடத்தில் நடைபெற்றதாக  சில நிலைச் சான்றுகளைக் காண்பிக்கின்றனர் வடநாட்டு வல்லுநர்கள். ஆனால் சேரமான் பெருஞ்சோற்று உதியன் கி.பி ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பதாகக் கருகின்றனர்  தமிழ்நாட்டு ஆய்வாளர்கள்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பாரதப் போரில் கவுரவ, பாண்டவர் சேனைகளுக்கு உணவளித்தவன் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிந்திய சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை. ஓலைச் சுவடியிலிருந்து எடுத்தெழுதி நூலாக அச்சிட்டவர்களின் கருத்து இடைச்செருகல் இது என்பது மறுக்கமுடியாத உண்மை ! இனிப் பாடலைப் பார்ப்போம் !

=====================================

புறநானூறு – பாடல் (02) மண் திணிந்த நிலனும் !

=====================================

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே.

========================================

சந்தி பிரித்து எழுதிய பாடல்

=========================================

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு,
ஐம் பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ பெரும!
அலங்கு  உளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலம் தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை
ர்  ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
சிறு தலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே

============================

பொருளுரை

============================

மண் செறிந்து  விளங்குவது நிலம்; அந்நிலத்தை ஏந்திக்கொண்டிருப்பது வானம்;  அவ்வானத்தை வருடிக் கொடுக்கும் காற்று; அக்காற்றினால் தூண்டப்பெற்று வளர்வது  தீ; அத்தீயிலிருந்து மாறுபட்ட இயல்புடையது நீர். ஐம்பெரும் பூதங்கள் என்று சொல்லப்படுபவை மண், வானம், காற்று, தீ, நீர் ஆகிய ஐந்தும். அவற்றுள் நிலத்தைப் போன்ற நிறைந்த பொறுமையும், வானத்தைப் போன்ற அகன்ற ஆய்வுக் குணமும், காற்றைப் போன்ற பெரும் வலிமையும், தீயைப் போன்ற அழிப்பு ஆற்றலும், நீரைப் போன்ற அருளும் உடையவனே!

 

உன்னுடைய கீழ்த்திசைக் கடலில் எழுந்த கதிரவன் உன்னுடைய மேற்றிசைக் கடலிலேயே மறையும் அழகிய நிலப்பரப்பை உடையவன் நீ !  அரசே! தும்பைப்பூ சூடி ஐவரை எதிர்த்த நூற்றுவர் மாண்ட போர்க்களத்தில்   இரு பெருஞ் சேனைகளுக்கும் பெருமளவில்  உணவளித்தவன் நீ அல்லவோ!

பாலின் இனிப்புச் சுவை மாறி  புளித்தாலும், பகலின் வெளிச்சம் மறைந்து  இருண்டாலும், நான்கு வேதங்களில் கூறப்படும் ஒழுக்க நெறிகள் நிலைகுலைந்து மாறினாலும்,  மாறாத சுற்றத்தாரோடு நீண்ட நாள்  நிலைத்து வாழ்வாயாக!   இமயம் பொதியம் ஆகிய மலையடிவாரங்களில்  அந்தணர் வளர்க்கும்  வேள்வித் தீ  ஒளியில் மான்கள் தம் குட்டிகளுடன் ஆழ்ந்து உறங்குவது போல், அச்சமின்றி உன் நாட்டு மக்கள் வாழ்வார்களாக !

===================================

அருஞ்சொற்பொருள்

===================================

திணிந்த = செறிந்த ;  நிலன் = நிலம்; ஏந்திய = ஏந்திக்கொண்டு ; விசும்பு = வானம்;  தைவரல் = வருடிச் செல்லல்;  வளி = காற்று;  தலைஇய = சொரிந்த ;  முரணிய = மாறுபட்ட குணமுடைய;    போற்றார் = பகைவர்; சூழ்ச்சி = ஆராய்வு ; (நுண்ணறிவு); அகலம் = விரிந்த.  வலி = வலிமை; தெறல் = அழித்தல்; அளி = அருள்.  புணரி = பொருந்தி; குடகடல்  = மேற்றிசையிலுள்ள  கடல்;  யாணர் = அழகிய ; வைப்பு = நிலப் பகுதி. பொருநன் = அரசன்.  பெருமன் = தலைவன்; அலங்கல் = அசைதல்; உளை = பிடரி மயிர்; புரவி = குதிரை; சினைஇ = சினந்து.  தலைக்கொள்ளுதல் = கொடுத்தல்; பொலம் = பொன்.  பொருதல் = போர் செய்தல். பதம் = உணவு; வரையாது = குறையாது.  சேண் = நீண்டகாலம். நடுக்கு = சோர்வு; நிலியர் = நிற்பாயாக; அடுக்கம் = மலைச்சரிவு.  நவ்வி = மான்குட்டி; மாப்பிணை = பெண்மான்.  இறுத்தல் = செலுத்தல்.  துஞ்சுதல் = உறங்குதல்.  கோடு = மலைமுடி.

===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)05]

(22-08-2026)

===============================================

 


No comments:

Post a Comment