விரும்பும் பதிவைத் தேடுக !

Monday, 31 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (95) இவ்வே பீலி அணிந்து !

 

புறநானூறு ( 95) இவ்வே பீலி அணிந்து !

 

=============================

 பாடியவர் :

 =============================

 

ஔவையார். ஔவையார் என்னும் பெயரில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59  எண் உள்ளன. அவற்றில்  புறத்திணைப் பாடல்கள் 33.  ஏனைய  26 அகத்திணைப் பாடல்கள். அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார் !

 

 

============================

 பாடப்பட்டோன் :

 ============================

 

அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமான் நெடுமான் அஞ்சி  தகடூரை (இப்பொழுது தர்மபுரி என வழங்கப்படுகிறது) ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவன். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூஉ பெயர். 'அதியமான்' என்பது 'அதியர் கோமான்' என்பதன் மரூஉ பெயர்.  அஞ்சி என்பது இவனது இயற்பெயர்.[1] இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு  தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர் !

 

==========================================

 திணை: பாடாண்.

 

துறை : வாள்மங்கலம்.ள் மங்கலம்

===========================================

 


=============================

 பாடலின் பின்னணி:

 =============================

 

தொண்டை நாட்டை ஆண்டு வந்த குறுநில மன்னன், தொண்டைமான்.  இவன் தகடூரை ஆண்ட அதியமான் மீது பகைமை கொண்டான்.  அதன் விளைவாக அதியமானோடு போர் புரிய எண்ணினான். அதை அறிந்த அதியமான் ஔவையாரை அவனிடம் தூதுவராக அனுப்பினான். தொண்டைமான் தன் படைப் பெருமையை ஒளவையாருக்குக் காட்ட விரும்பித் தன் படைக்கலக் கிடங்குக்கு அவரை அழைத்துச் சென்றான்.  அவன் உள்நோக்கத்தை அறிந்த ஔவையார் தொண்டைமானிடம் என்ன சொன்னார் என்பதே இப்பாடலின் உட்பொருள் !

 

===================================================

புறநானூறு ( 95) இவ்வே பீலி அணிந்து !

===================================================

 

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண் திரள் நோன் காழ்  திருத்தி நெய் அணிந்து
கடி உடை வியன் நகர், அவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து
கொல் துறைக் குற்றில மாதோ ---என்றும் 
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந்நுதி வேலே.

 

=============================

 சொற்பொருள்:  

 =============================

 

இவ்வே = இவை ;  (வேல்கள், போர்க்கருவிகள்) , பீலி அணிந்து = மயில் இறகு போர்த்தப்பட்டு ; மாலை சூட்டி = பூமாலை சூடப்பட்டு; கண் திரள் = உடல் பகுதி திரண்ட ; நோன்காழ் = வலிமையான காம்பு ; திருத்தி = அழகு செய்து; நெய் அணிந்து = நெய் பூசப்பட்டு;  கடி உடை=   காவல் உடைய ; வியன் நகர் =   பெரிய வீடு ; (அரண்மனை,)

 

அவ்வே அவ்வே = அவையே அவையே ;  பகைவர் குத்தி = பகைவரைக் குத்தி ; கோடு =  வேலின் பக்கம் ; நுதி சிதைந்து =  நுனி சிதைந்து ; கொல் துறை =  கொல்லனின் பட்டறை ; குற்றில =  சிறிய இடத்தில் ; மாதோ  = மாது, ஓ அசைநிலைகள் ; என்றும்  = எப்பொழுதும் ; உண்டாயின் =  உண்டு என்றால் ; பதம் கொடுத்து =  உணவு கொடுத்து ;

 

இல்லாயின் =  இல்லை என்றால் ;  உடன் உண்ணும்  = உடன் சேர்ந்து உண்ணும் ; இல்லோர் =  இல்லாதவர்களின் ; ஒக்கல் ; சுற்றம் ; தலைவன் =  தலைவன் ; அண்ணல் = தலைமையுடையவன்;  எம் கோமான் =   எங்கள் மன்னன் ; வைந்நுதி  = கூர்மையான நுனி ; வேலே = வேற்படை ; (வேல்கள்)

=============================

 பொருளுரை:   

 =============================

 

இங்கே இருக்கும் போர்க்கருவிகள் அனைத்தும் மயில் இறகு போர்த்தப்பட்டு, பூமாலை சூடப்பட்டுத் திரண்ட வலிமையான கைப்பிடிகள் அழகுற செய்யப்பட்டு,  நெய் பூசப்பட்டு,  பயன்படுத்தப் படாமல், அரண்மனையில் ஓரு பகுதியான  கருவிகள் கிடங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன !

 

ஆனால் அதியமான்  அரண்மனைக் கிடங்கில்  இருந்த வேலும், வாள் போன்ற ஏனைய போர்க்கருவிகளும் பகைவருடன் அடிக்கடிப் போரிட்டு வெல்லப் பயன்படுத்தப் படுபவதால்,  அவற்றின் தலையும், நுனியும், முகமும் மழுங்கிச் சிதைந்து, சீர் செய்வதற்காக   அவ்வப்போது கொல்லனின் பணிக் களரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்குக் கொட்டிக் கிடக்கின்றன !

 

செல்வமும், உணவும் நிறைந்திருக்கும் பொழுது எல்லோருக்கும் உணவளித்த பின் உணவு உண்பவன் எங்கள் மன்னன். நாட்டின்  செல்வ நிலை தளர்ச்சி அடையும் போது அரண்மனை உணவை அனைவருக்கும் பங்கிட்டுத் தந்து  அவர்களுடன் சேர்ந்து உண்பவனும் எங்கள் மன்னன் தான், வறியவர்களின் சுற்றத்திற்குத் உதவுகின்ற தலைவனும் எங்கள் மன்னன்தான் !

 

எம்    மன்னனே     எம்  அன்பிற்குரிய        தலைவன்.     கூரிய    

வேலும்   அவனே !

 

  ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)14]

(31-08-2026)

================================================ 

அதியமானின் வேல்களைத் திருத்தும் கொல்லுப் பட்டறை


 

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (94) ஊர்க் குறுமாக்கள் வெண் !

புறநானூறு (94) ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு !

 

=============================

பாடியவர்

=============================

 

ஔவையார். ஔவையார் என்னும் பெயரில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59  எண் உள்ளன. அவற்றில்  புறத்திணைப் பாடல்கள் 33.  ஏனைய  26 அகத்திணைப் பாடல்கள். அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார் !

 

=============================

 பாடப்பட்டோன் 

=============================

 

அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமான் நெடுமான் அஞ்சி  தகடூரை (இப்பொழுது தர்மபுரி என வழங்கப்படுகிறது) ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவன். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூஉ பெயர். 'அதியமான்' என்பது 'அதியர் கோமான்' என்பதன் மரூஉ பெயர்.  அஞ்சி என்பது இவனது இயற்பெயர்.[1] இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு  தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர் !

 

======================================

 திணை : வாகை

துறை : அரச வாகை

=======================================

 

 

=============================

பாடலின் பின்னணி:  

=============================

 

பெருஞ்சபையில் அரசர்கள் சூழ இருப்பினும், போர்க்களத்தில் படைகள் சூழ இருப்பினும், ஔவையாருக்கும் மற்ற புலவர்களுக்கும் இன்முகமும், இன்சொல்லும் உடையவனாய் இருக்கும் அதியமான் நெடுமான் அஞ்சியின் பண்பைக் குறித்து ஔவையார் இந்தப் பாடலில் விதந்து பேசுகிறார் !

 

================================================

புறநானூறு (94) ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு !

================================================

 

ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின்,
நீர்த் துறை படியும் பெருங்களிறு போல,
இனியை  பெரும  எமக்கே, மற்று அதன்
துன் அருங் கடாஅம் போல
இன்னாய் பெரும, நின்  ஒன்னாதோர்க்கே.
 

 

=============================

 சொற்பொருள்:  

=============================

 

ஊர் = ஊரில் உள்ள; குறு மாக்கள் = சிறுவர்கள்; வெண்கோடு = யானையின் வெண்மையான மருப்பு (தந்தம்); கழாஅலின் = கழுவுவதால் ; நீர்த்துறை = நீர் நிரம்பிய (குளம் / ஆற்றுத் ) துறைக்குள் சென்று ;  படியும் = அமைதியாகப் படுத்திருக்கும் ; பெருங்களிறு  = பெரிய ஆண் யானை;  போல = போல ;

 

இனியை பெரும எமக்கே = அரசே ! எங்களுக்கு நீ இனியவனாக இருக்கிறாய்! நின்   ஒன்னாதோர்க்கே = ஆனால் உன் பகைவர்களுக்கு, மற்று அதன்  =   அதனுடைய ;  துன் அரும் கடாஅம் போல =  நெருங்க முடியாத மதம்பட்ட நிலைமை (மதம் கொண்ட நிலை) போல ; இன்னாய் – துன்பத்தை அளித்துவிடுகிறாய் ; பெரும =  மன்னவனே !

=============================

பொருளுரை:   

==================================

 

 

மன்னவனே ! தன்னுடைய வெண்மையான மருப்பு களையும் (தந்தங்களை) பெரிய கரிய உடலையும் நீர்த்துறையில் வைத்து, ஊரில் உள்ள சிறுவர்கள் கழுவுவதால், நீருக்குள் படுத்திருக்கும் பெரிய யானை அவர்களுடன் நட்பாக இருப்பது போல், நீ எங்களுக்கு இனிமையானவனாக இருக்கிறாய் ! ஆனால் அதன் நெருங்க முடியாத மதம்பட்ட நிலைமை எவ்வாறு மனிதர்களுக்குக் கொடுந் துன்பம் தருமோ, அது போல, மன்னவனே, நீ உன் பகைவர்களுக்கு பெருந்துன்பத்தை  அளிப்பவனாகவும் இருக்கிறாய் !.

 

  ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)14]

(31-08-2026)

================================================ 

நீர்த்துறையில் யானைகளைக் குளிப்பாட்டல்


புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (92) யாழொடும் கொள்ளா !

 

புறநானூறு (92) யாழொடும் கொள்ளா, பொழுதொடும் !

 

=============================

பாடியவர்

=============================

 

ஔவையார். ஔவையார். ஔவையார் என்னும் பெயரில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59  எண் உள்ளன. அவற்றில்  புறத்திணைப் பாடல்கள் 33.  ஏனைய  26 அகத்திணைப் பாடல்கள். அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார் !

 

 

=============================

பாடப்பட்டோன்

=============================

 

அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமான் நெடுமான் அஞ்சி  தகடூரை (இப்பொழுது தர்மபுரி என வழங்கப்படுகிறது)  ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவர். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூஉ பெயர். 'அதியமான்' என்பது 'அதியர் கோமான்' என்பதன் மரூஉ பெயர்.  அஞ்சி என்பது இவரது இயற்பெயர்.[1] இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு  தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர் !

 

==================================

திணை : பாடாண்

 

துறை : இயன் மொழி

===================================

 

 

=========================

பாடல் பின்னணி:

=========================

 

 

நீண்ட காலம் உயிர்வாழச் செய்யும் அரிய நெல்லிக் கனியைப் பெற்ற அதியமான், அதை ஒளவைக்கு வழங்க, அவனது உயர்ந்த பண்பைக் கண்டு வியந்த ஒளவையார், அதியமானைப் புகழ்ந்து இயற்றிய பாடல் இது.

 

===============================================

புறநானூறு (92) யாழொடும் கொள்ளா, பொழுதொடும் !

===============================================

 

 

யாழொடும் கொள்ளா, பொழுதொடும் புணரா,
பொருள் அறிவாரா, ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை,
என் வாய்ச் சொல்லும் அன்ன, ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்து
நெடுமான் அஞ்சி நீ அருளல்மாறே.

 

 

=============================

சொற்பொருள்: 

=============================

 

புதல்வர் தம் மழலை = தம் குழந்தையின் மழலைக் சொல் ; யாழொடும் கொள்ளா = யாழிசையுடன் ஒத்து வராது ; பொழுதொடும்  புணரா = காலத்தோடும் பொருந்தாது ; பொருள் அறிவாரா =  பொருளை அறிய இயலாது ; ஆயினும் = ஆனாலும் ; தந்தையர்க்கு = தந்தைகளுக்கு ; அருள் வந்தனவால் =  அன்பை வரவழைக்கின்றன ;  

 

 

என்  வாய்ச் சொல்லும் =  என் வாயிலிருந்து வரும் சொற்களும் ; அன்ன = அதைப் போல இருக்கும் ;  ஒன்னார் = பகைவர் ; கடி = காவல் ; மதில் = கோட்டையைச் சுற்றி இருக்கும் மதில் சுவர் ;  அரண் = கோட்டை ;  பல = பலவற்றை ; கடந்து –=  வென்று ; நெடுமான் அஞ்சி = அதியமான் நெடுமான் அஞ்சியே ;  நீ அருளல்மாறே = நீ எனக்கு அன்பு காட்டி அருள்வாயாக !

 

=============================

பொருளுரை:  

=============================

 

குழந்தைகளின் மழலைமொழி, யாழ் இசையோடு பொருந்தாது; காலத்தோடும் பொருந்தாது;  பொருளை அறிவதற்கும் இயலாது.   அவ்வாறு இருப்பினும், தந்தையர்க்கு அம்மழலைச் சொற்கள் குழந்தைகள் மீது அன்பை வரவழைக்கின்றன.

 

காவல் மிகுந்த மதில்களைக் கொண்ட கோட்டைகள் பலவற்றை வென்ற அதியமான் நெடுமான் அஞ்சியே!  என் சொற்களும் குழந்தையின் மழலைச் சொற்களைப் போன்றவையே; ஆகையால் (ஒரு தந்தையைப் போல் இருப்பதால்) நீ என் மீதும் பரிவு கொண்டு அன்பு காட்டுவாயாக !

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)14]

(31-08-2026)

================================================   


மழலை மொழி கேட்பதில்தான் தந்தைக்கு எத்துணை இன்பம் !