விரும்பும் பதிவைத் தேடுக !

Wednesday 4 May 2022

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (86) சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன் !

தாயே ! தங்கள் மகன் எங்கு சென்றிருக்கிறான் ?

------------------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி:

------------------------------------

தாய் ஒருத்தியிடம் உன் மகன் எங்கே என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அந்தத் தாய், கேட்டவர் திகைக்கும் வண்ணம் மறுமொழி கூறுகிறாள் ! காவற்பெண்டு என்னும் பெண்பாற் புலவர் இயற்றிய அந்தப் பாடலைக் காணுங்கள் !

--------------------------------------------------------------------------------------

புறநானூறு பாடல் எண்: (86)

--------------------------------------------------------------------------------------

சிற்றில் நற்றூண் பற்றிநின் மகன்

யாண்டு ளனோவென வினவுதி; என்மகன்

யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும்

புலிசேர்ந் துபோகிய கல்லளை போல,

ஈன்ற வயிறோ விதுவே;

தோன்றுவான் மாதோ போர்க்களத் தானே !

--------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------------------------------------------

சிற்றில் நல் தூண் பற்றிநின் மகன்

யாண்டு உளன்என வினவுதி; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவான் மாதோ போர்க் களத்தானே !

--------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------

வரி.(01). சிற்றில் = இந்தச் சிறிய வீட்டின் ; நல் தூண் பற்றி = வலிமையான தூணைக் கைகளால் பற்றிக் கொண்டு நிற்கும் தாங்கள் ; நின் மகன் = உன்னுடைய மகன்;

வரி.(02). யாண்டு உளனோ = எங்கிருக்கிறான் ; என வினவுதி = எனக் கேட்கிறீர்கள் ; என் மகன் = என்னுடைய மகன் ;

வரி.(03). யாண்டு உளன் = எங்கு இருக்கிறான் ; ஆயினும் அறியேன் = என்பதை நான் அறியேன் ; ஓரும் = இது ஒரு அசைச் சொல், இதற்குப் பொருள் பார்க்க வேண்டியதில்லை.

வரி.(04). புலி சேர்ந்து போகிய = புலி தங்கியிருந்துவிட்டுச் செல்லும் ; கல் அளை போல ; மலைக் குகையைப் போல ;

வரி.(5). ஈன்ற வயிறோ இதுவே =  மகனைப் பெற்ற வயிறு இங்கே இருக்கிறது ;

வரி.(06). தோன்றுவான் மாதோ போர்க்களத்தானே = (ஆனால்) அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும் !

--------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

இந்தச் சிறிய வீட்டின் வலிமையான தூணைப் பற்றிக் கொண்டு , “உன் மகன் எங்கே இருக்கிறான்எனக் கேட்கிறீர்கள். என் மகன் எங்கே இருக்கிறான் என்பதை யான் அறியேன். புலி குகையை விட்டுக் கிளம்பிய பின் அது எங்கு சென்றுள்ளது என்பதை யாரும் அறிய முடிவதில்லை !

அதுபோல அவனை ஈன்ற வயிறோ இங்கே இருக்கிறது; அவன் எங்கு சென்றுள்ளான் என்பதை யான் அறியேன். ஆனால் அவன் போர்க்களத்தில் தான் இருப்பான். அவனைக் காண விரும்பின் போர்க்களத்திற்குச் சென்று காண்பீராக !

-------------------------------------------------------------------------------------

 காலக் கண்ணாடி:

 ------------------------------

இப்பாடலிலிருந்து நாம் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது !

(01)பண்டைத் தமிழகத்தில் தூண்களுடன் கூடிய குடியிருப்பு இல்லங்கள் கட்டப்பட்டு இருந்திருக்கின்றன என்பது இப்பாடல் மூலம் தெரியவருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கட்டடக் கலையில் சிறந்து விளங்கியிருக்கிறான் !

(02)தம் பிள்ளைகளை போர்க்களத்துக்கு அனுப்புவதற்கு பண்டைய தமிழகத் தாய்மார்கள் அச்சப்பட்டதில்லை என்பதும் வீரம் மிக்கவர்களாக அவர்கள் விளங்கியிருக்கிறார்கள் என்பதும் இப்பாடல் மூலம் விளங்குகிறது !

புறநானூறு என்பது பண்டைய தமிழகத்தின் வளத்தையும் மாண்பையும் உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது இப்பாடல் மூலம் உறுதிப்படுகிறது ! 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

”புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை)21]

{04-05-2022}

-------------------------------------------------------------------------------------

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (218) பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய !

எங்கோ பிறக்கும் ஒளிமணிகள் தங்கத்துடன் சேர்ந்து அணிகலனாக மாறும் போது பெரும் மதிப்பைப் பெறுகிறது !

-------------------------------------------------------------------------------------

பாடலின் பின்னணி:

-----------------------------------

கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் இருவரும் ஒருவரையொருவர் நேரில் பாராமலேயே நட்புப் பூண்டிருந்தனர். தான் பெற்ற  மக்களால் ஏற்பட்ட மனவருத்தத்தில் உயிரை மாய்த்துகொள்ள  எண்ணி உண்ணாமல் உறங்காமல் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தான் கோப்பெருஞ் சோழன். அவனைக் காண பிசிராந்தையார் வந்தார். சோழனின் நிலையை எண்ணி வருந்தி அவரும் வடக்கிருந்து மன்னனுடனேயே உயிரைத் துறந்தார். நட்பால் இணைந்தவர்கள் இறப்பிலும் ஒன்றிணைந்தார்கள் !

இந்த நிகழ்வு தூண்டு கோலாக அமைய புலவர் கண்ணகனார் ஒரு பாடலைப் படைக்கிறார். இதோ அந்தப் பாடல்:--

-------------------------------------------------------------------------------------

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

மாமலை பயந்த காமரு மணியும்

இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்(து)

அருவிலை நன்கலம் அமைக்கும் காலை

ஒருவழித் தோன்றியாங்(கு) என்றும் சான்றோர்

சான்றோர் பாலர் ஆப

சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

-------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

வரி.(01) பொன்னும் = தங்கமும் ; துகிரும் = பவளமும்

முத்தும்சிப்பி விளை நன் முத்தும்;

வரி.(02) மாமலை = உயர்ந்த மலை ; பயந்த = தருகின்ற

காமரு மணியும் = அழகிய மாணிக்கமும்

வரி.(03) இடைபட = தோன்றுகின்ற இடங்கள் ; சேய 

ஆயினும் = ஒன்றுக்கொன்று மிகத் தொலைவாயினும்

தொடை புணர்ந்துஇவற்றையெல்லாம் பதித்து;

வரி.(04) அருவிலை நன்கலம் = விலையுயர்ந்த அணிகலன்

செய்கையில் ;

வரி.(05) ஒருவழித் தோன்றியாங்கு = அனைத்தும் ஓரிடத்தில்

சேர்ந்திருப்பது போல ; என்றும் சான்றோர் = சான்றோர்கள்

எப்போதும் ;

வரி.(06) சான்றோர் பாலர் ஆகுப ; ஒருவரையொருவர் நாடிச்

சென்று ஒன்றிணைவார்கள்

வரி.(07) சாலார் சாலார் = சான்றோர் அல்லாதவர்களும்

பாலர் ஆகுபவே = ஒருவரையொருவர் நாடி 

ஒன்றிணைவார்கள்.

--------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

தங்கம் மண்ணிற்கு அடியிலிருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. கடலில்  உருவாகும் பவளப் பாறைகளிலிருந்து பவளம் பெறப் படுகிறது. மக்கள் விரும்பும் மாணிக்கக் கற்கள் , உயர்ந்த மலைகளில் பிறக்கின்றன. இவ்வாறாக இவை ஒவ்வொன்றும் பிறக்குமிடங்கள் மாறுபட்டவை; ஒன்றுக்கொன்று இடைவெளியும் தொலைவும் உடையவை !

ஆனால், வற்றைக்கொண்டு விலையுயர்ந்த ணிகலன்கள் செய்யும்போது, அவை அவ்வணிகலனில் பதியப்பெற்று ஒரே இடத்தில் ஒன்றாகத் தோன்றுகின்றன. அதுபோல், நல்லியல்புகள் அமைந்த  சான்றோர் தொலைவிலிருந்தாலும், ஒருவரையொருவர் நாடி ஒன்றுசேர்வர். (இதனால் பயனுண்டு). நல்லியல்புகளற்ற கீழோரும் எங்கிருந்தாலும் ஒருவரையொருவர் நாடிச் சென்று இணைந்து கொள்வார்கள். (இதனால் பயனேதுமில்லை) !

எனவே, நாம் முதலில் நம்மை மதிப்புமிக்க பண்புடையவர்களாக ஆக்கிக் கொண்டால், அச்சான்றாண்மை தன் இனமான சான்றோரிடம் நம்மைக்கொண்டு சேர்க்கும் என்பதே இப்பாடல் சொல்லும் கருத்து !

நம் வாழ்க்கைக்கு வேண்டிய மணியான ஒழுக்கங்களை, விலையுயர்ந்த மணிகளை உவமைகளாகச் சொல்லி , நமக்கு நல்வழி காட்டுகிறார் கண்ணகனார் என்னும் நல்லிசைப்புலவர் !

-------------------------------------------------------------------------------------------

 காலக் கண்ணாடி:

----------------------------------

இப்பாடலிலிருந்து நாம் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது !

(01)பண்டைத் தமிழர்கள்  ஒன்பான்  (ஒன்பது) மணிகளையும் அவற்றைக் கொண்டு தங்கத்தினாலான அணிகலன்களையும் செய்வதில் வல்லவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் !

(02)சான்றோர்கள் தம்மையொத்த சான்றோர்களை நாடிச் சென்று அவர்களிடம் நல்லுறவு பூண்டு மக்களுக்கு நல்வழி காட்டியிருக்கிறார்கள் ! கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் !

புறநானூறு என்பது பண்டைய தமிழகத்தின் வளத்தையும் மாண்பையும் உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது எவரும் மறுக்கமுடியாத  உண்மையாகும்!

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறுவலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 21]

{04-05-2022}

-------------------------------------------------------------------------------------