விரும்பும் பதிவைத் தேடுக !

Sunday, 5 December 2021

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (45) ஒருவீர் தோற்பினும் தோற்பது !

'இந்தப் போரில் நீங்கள் இருவரும் வெல்ல முடியுமா?'

-------------------------------------------------------------------------------------

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்று இரண்டு மன்னர்கள். இருவருமே சோழர்கள்தான். ஆனால், அவர்களுக்குள் ஏதோ ஒரு பகை. இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதுவதற்குத் தயாராக நின்றார்கள். அந்த நேரத்தில், கோவூர்கிழார் என்னும் புலவர் அவர்களைச் சந்திக்கச் சென்றார். இருவரிடமும் சமாதானம் பேசி, போரை நிறுத்த முயன்றார். அப்போது அவர் பாடிய பாடல் இப்படித் தொடங்குகிறது:

-------------------------------------------------------------------------------------

பாடல்.45

-------------------------------------------------------------------------------------

இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்,

கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்,

நின்ன கண்ணியும் ஆர் மிடைந்துஅன்றே, நின்னொடு

பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்துஅன்றே,

ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே.'

-------------------------------------------------------------------------------------

பொருளுரை;

-------------------------------------------------------------------------------------

'மன்னா, எதிரே நிற்பது யார் என்று பார். அவன் கழுத்தில் என்ன மாலை இருக்கிறது என்று கவனி.'

'அவன் கழுத்தில் பனம்பூ மாலை இருக்கிறதா? இல்லை!'

'அப்படியானால், உன்னை எதிர்த்து நிற்பவன் பனம்பூ அணிந்த சேரன் இல்லை!'

'அவன் கழுத்தில் வேப்பம்பூ மாலை இருக்கிறதா? இல்லை!'

'அப்படியானால், உன்னை எதிர்த்து நிற்பவன் வேப்பம்பூ அணிந்த பாண்டியன் இல்லை!'

'அவன் கழுத்தில் உள்ளது, ஆத்திப்பூ.'

'இப்போது, உன் கழுத்தைப் பார். அங்கேயும் ஆத்திப்பூ.'

'ஆக, நீயும் சோழன், அவனும் சோழன். ஆத்திப்பூ அணிந்த ஒரு சோழனும் இன்னொரு சோழனும் மோதுகிறீர்கள்.'

'இந்தப் போரில் நீங்கள் இருவரும் வெல்லமுடியுமா?'

'வாய்ப்பில்லை. இருவரில் ஒருவர்தான் வெல்லமுடியும்.'

'அப்படியானால், தோற்கப்போவது ஒரு சோழன், இல்லையா?'

'நீயும் சோழன், அவனும் சோழன், ஒரு சோழன் தோற்பதற்கு

இன்னொரு சோழன் காரணமாகலாமா? இந்தப் போரை

விட்டுவிடுங்களேன். இருவரும் நண்பர்களாகி விடுங்களேன் !'

------------------------------------------------------------------------------------- 

இப்படிச் சிறப்பாகப் பேசி, ஒரு போரையே நிறுத்திவிட்டார் கோவூர்கிழார். அதன்மூலம் பல உயிர்கள் காக்கப்பட்டன !

இதை படிக்கும் போது, அன்றைக்குத் தமிழ்ப் புலவர்கள் மீது, அரசர்கள் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். மன்னர்களாகவே இருந்தாலும், அவர்கள் செய்த பிழையைச் சுட்டிக்காட்டும் துணிவு புலவர்களுக்கு இருந்தது என்பதை உணர்கிறோம் !

--------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

-------------------------------------

இரும் பனை = கரிய பனைமரம் ; வெண் தோடு = வெண்மையான பூ; மலைந்தோன் = அணிந்தவன் ; கருஞ் சினை = கருமையான கிளைகளை உடைய  வேம்பின் = வேப்பம் பூ; தெரியலோன் = தொடுக்கப்பெற்ற மாலை ; நின்ன = நீ அணிந்திருக்கும்  ; கண்ணியும் = மாலையும் ; ஆர் = ஆத்திப் பூ ; மிடைந்தது = தொடுக்கப் பெற்றது ; அன்றே = அல்லவா ; நின்னொடு = உன்னுடன் ; பொருவோன் = போரிட இருப்பவன் ;   கண்ணியும் = அணிந்துள்ள மாலையும்  ; ஆர் =  ஆத்திப்பூ  ; மிடைந்து  =  தொடுக்கப் பெற்றது; அன்றே = அல்லவா ; ஒருவீர் = உங்கள் இருவரில் யார் ஒருவர் தோற்பினும் போரில் தோற்றாலும் ; தோற்பது = தோற்று துன்பத்தை எதிர்கொள்ளப் போவது ; உம் குடியே  =  உங்கள் இருவரது முன்னோர்களான   சோழர்களின்   குலமல்லவா ?

--------------------------------------------------------------------------------------

மூவேந்தர்களும் தங்களுக்கிடையே வேறுபாடு தெரிவதற்காக, இந்த மலர்களைச் சூடிக்கொண்டார்கள்:

--------------------------------------------------------------------------------------

சேரர்கள்: பனம்பூ (போந்தை) 

பாண்டியர்கள்: வேப்பம்பூ (வேம்பு)

சோழர்கள்: ஆத்திப்பூ (ஆர்)

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

புறநானூறு வலைப்பூ,

[தி.:2052, நளி (கார்த்திகை)19]

{05-12-2021}

------------------------------------------------------------------------------------