புறநானூறு (10) வழிபடு வோரை வல்லறி தீயே !
-------------------
பாடியோர்:
-------------------
இப்பாடலைப் பாடியவர் ஊன்பொதி பசுங்குடையார். இவரது நான்கு பாடல்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. (10, 203, 370, 378). இப்புலவரின் உண்மையான பெயர் தெரியவில்லை. பெயருக்கான காரணமும் தெரியவில்லை !
----------------------------------
பாடலின் பின்னணி:
----------------------------------
இப்பாடலில் ஊன்பொதி பசுங்குடையார் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியின் குணநலன்களைப் புகழ்ந்து பாடுகிறார் !
---------------------------
பாடப்பட்டோன்:
----------------------------
பாடப்பட்டோன் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி. நெய்தலங்கானல் என்பது அவன் பிறந்த ஊராக இருக்கக் கூடும். அவன் பரதவரையும், வடுகரையும் வென்று புகழ் கொண்டவன். பாமுளூர் என்னுமிடத்தும் செருப்பாழி என்னுமிடத்தும் பகைவரை வென்றதால் முறையே பாமுளூர் எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் அழைக்கப்பட்டான்.
----------------------------------------------------------------------------------------
புறநானூறு- பாடல் எண்: (10) வழிபடுவோரை வல்லறி
தீயே!
----------------------------------------------------------------------------------------
வழிபடு வோரை வல்லறி
தீயே;
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப;
செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே.
------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-------------------------------------------------
வழிபடுவோரை வல் அறிதீயே;
பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே;
நீ மெய்கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதி நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசை
இல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்
தார்மார்ப;
செய்து இரங்கா வினைச் சேண் விளங்கும் புகழ்
நெய்தல் அங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பலவே.
-------------------------------
பாடலின் பொருள்:
-------------------------------
“நெய்தலங்கானல்” இளஞ்சேட்சென்னியே ! உன்னிடம் பணிவு காட்டுபவர்களை நீ விரைந்து அறிந்து கொள்கிறாய். பிறர்மீது புறம் கூறுவோர் சொல்லை நீ ஏற்றுக் கொள்வது இல்லை.
ஒருவர் செய்தது தவறு (தீமை) என்று கண்டால் அறவழி நின்று ஆராய்ந்து அவரைத் தண்டிக்கிறாய். தவறு செய்தவர்கள், உன் முன் அடிபணிந்து நின்றால் அவர்கள்
தவறைப் பொறுத்தருளி, முன்பு
அளித்த தண்டனையைப் பெரிதும் குறைத்து விடுகின்றாய் !
அமுதத்தையும் தன் சுவையால் வென்று உண்ண உண்ணத் தெவிட்டாத மணங்கமழும் உணவை வருவோர்க்குக் குறைவின்றி வழங்குகிறார் உன் தேவியார். மாசு மறுவற்ற இல்வாழ்க்கை நடத்தும் அவர் தழுவுவதை அல்லாது பகைநாட்டு வேந்தர் உன்னோடு போர் செய்வதற்கு அஞ்சும் மார்பை உடையவனே ! வருந்தத்தக்க செயலெதுவும் செய்யாத தன்மையும், பரந்த புகழும் உடையவனே ! நெய்தலங்கானம் என்னும் ஊரைச் சார்ந்த பெரியோனே! யாம் உன்னை அணுகி வந்தோம். உன் பெருமைகளைப் பாடிப் போற்றுகிறோம். எமக்கும் அருள்வாயாக !
------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------------
வல் அறிதி = விரைந்து அறிந்து கொள்கிறாய்; தேறல் = தெளிதல்;
அத்தக ஒறுத்தி = தீமைக்குத் தக்கவாறு தண்டிக்கிறாய்; அடுதல் = சமைத்தல்; ஆனாமை = தணியாமை; கமழ்தல் = மணத்தல்; குய் = தாளிதம்; அடிசில் = சோறு, உணவு; வரை = அளவு; வரையா =
குறையாத; அளவில்லாத; வசை = பழி;
மலைத்தல் = போர்செய்தல்; பகை கொள்ளல்; மள்ளர் =
வலிமையுடையவர்; சிலை = வானவில்; தார் =
மாலை; இரங்கல் =
உள்ளம் உருகுதல் (வருந்துதல்); சேண் = சேய்மை (தூரம்); நெடியோன் = பெரியோன்; எய்துதல்
= அணுகுதல், அடைதல்; ஏத்துதல் =
புகழ்தல்.
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, மேழம் (சித்திரை)11]
(24-04-2026)
-----------------------------------------------------------------------------------
