விரும்பும் பதிவைத் தேடுக !

Wednesday, 22 December 2021

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை)(204) ஈ என இரத்தல் இழிந்தன்று !


” தருக” எனக்கேட்டல் மிக இழிவு; “தரமாட்டேன்” எனல் அதைவிட இழிவு !

 ------------------------------------------------------------------------------------------------                               

புலவர் கழைதின் யானையார் அரசன் வல்வில் ஓரியிடம் பரிசில் பெறச் சென்றார். வள்ளலாகிய அவன் ஏனோ உடனே வழங்கவில்லை. அதனால் புலவர் தான் வந்த வேளை சரியில்லை என்று நொந்துகொண்டு வேறு உத்தியைக் கையாளுகிறார். அவன் கொடைத் திறத்தைப் பாராட்டுகிறார் !


---------------------------------------------------------------------------------------------

 

ஐயா ! தருமம் செய்யுங்கள்’ என்று கேட்டு  இரத்தல் இழிவான செயல்அப்படி இரப்பவனுக்கு ”இல்லை” என்று சொல்லி ஏதும் கொடுக்காமல் விரட்டியடிப்பது  இரப்பதைக் காட்டிலும்  மிகவும் பண்பாடற்ற  இழிவான செயல்  !

 

இதனைப் பெற்றுக்கொள்” என்று ஒருவனுக்கு வழங்குவது உயர்ந்த செயல். அவ்வாறு வழங்குவதை ”எனக்கு வேண்டாம்என்னை மன்னித்து விடுங்கள்’”என்று ஏற்றுக்கொள்ளாமல் தவிர்ப்பது  கொடுப்பதைக் காட்டிலும் மிகவும் மேலான செயல் !

 

கடலில் செல்வோர், நீர் வேட்கை ஏற்படும் போது, தெளிந்த நீராயினும் கூட, அந்த உவர் நீரை அருந்த மாட்டார்கள். ஆடு மாடுகளும் காட்டு விலங்குகளும் சென்று உண்பதால், அவற்றின் கால்கள் பட்டுக் குளத்து நீர் கலங்கி இருந்தாலும், தம் நீர்வேட்கையைத் தீர்த்துக் கொள்ள, அந்தக் கலங்கிய நீரையே மக்கள் நாடிச் செல்வர் !


வல்வில் ஓரியே ! மன்னவா ! கரிய மேகம் வானத்திலிருந்து சுரக்கும் மழை போல் வழங்கும் வள்ளல் அல்லவோ நீ ! உன்னிடம் பரிசில் கிடைக்காவிட்டால், தான் புறப்பட்டு வந்த நேரம் சரியில்லை என்று தான் உன்னை நாடி வந்தவர்கள் நொந்துகொள்வார்களே அல்லாமல் வள்ளல்களைப் பழிக்கும் வழக்கம் இல்லை !


அதனால் உன்னை நான் வெறுக்க மாட்டேன்; நொந்துகொள்ளவும் மாட்டேன். நீ நீடூழி வாழ்க ! என்று சொல்லி, ஒரு பாடல் மூலம் தன் எண்ணத்தைப் பதிவு செய்கிறார் ! இதோ அந்தப் பாடல் !

--------------------------------------------------------------------------------------------

புறநானூறு – பாடல்  எண் (204)

--------------------------------------------------

’ என இரத்தல் இழிந்தன்றுஅதனெதிர்

ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று !

கொள்’ எனக் கொடுத்தல் உயர்ந்தன்றுஅதனெதிர்

கொள்ளேன் என்றல்’ அதனினும் உயர்ந்தன்று !

தெண்ணீர்ப் பரப்பின்  இமிழ்திரைப்  பெருங்கடல்

உண்ணார் ஆகுபநீர் வேட்டோரே !

ஆவும்  மாவும் சென்றுண்  கலங்கி

சேற்றொடு பட்ட சிறுமைத்  தாயினும்

உண்ணீர்  மருங்கின்  அதர்பல  வாகும் !

புள்ளும்  பொழுதும்  பழித்தல்  அல்லதை

உள்ளிச் சென்றோர்  பழியலர்அதனால்

புலவேன்  வாழியர்,  ஓரி !  விசும்பில்

கருவி  வானம் போல

வரையாது சுரக்கும்  வள்ளியோய்  நீயே !

 

----------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

--------------------------------------

 

ஈ என = தருக என ; இரத்தல் = யாசித்தல் ; இழிந்தன்று = இழிந்தது ; ஈயேன் என்றல் = (அப்படிக் கேட்டவருக்கு) தருவதற்கு இயலாது என்று சொல்வது ; அதனினும் = இரப்பதைக் காட்டிலும் ; இழிந்தன்று = மிகவும் இழிவான செயல்; கொள் எனக் கொடுத்தல் = பெற்றுக்கொள் எனக் கொடுத்தல் ; உயர்ந்தன்று = உயர்ந்த செயல் ; கொள்லேன் என்றல் = கொடுப்பதை வேண்டாம் என்று மறுப்பது ; அதனினும் உயர்ந்தன்று = அதைவிட உயர்ந்த செயல். தெண்ணீர் = தெளிந்த நீர் ; இமிழ் திரை = ஒலி எழுப்பும் அலை ; பெருங்கடல் உண்ணார் ஆகுப = பெரிதாயினும் கடல்நீரினை உண்ணமாட்டார்கள் ; நீர் வேட்டோரே = நீர் வேட்கையால் அருந்த விரும்புவோர் !


ஆவும்  மாவும் = ஆடுமாடுகளும் காட்டு விலங்குகளும்;  சென்று உண் = சென்று நீரை அருந்துவதால்சேற்றொடு பட்ட = சேறு கலந்த ; சிறுமைத்து  ஆயினும் = சிறுமை உடையது என்றாலும்;  உண்ணீர் மருங்கின் = உண்ணும் நீர் தரும் குளத்தருகேஅதர் பல ஆகும் = செல்கின்ற வழிகள் பல உளவாகும்புள்ளும் = புறப்பட்டு வருகையில் கானப்பட்ட புள் நிமித்தமும்பொழுதும் = நேரத்தையும்;  பழித்தல் அல்லதை = குறை சொல்வார்களேயன்றி ; உள்ளிச் சென்றோர் = நாடிச் சென்றோர்;  பழியலர் = வள்ளல்களைக் குறை சொல்ல மாட்டார்கள்புலவேன் = வெறுக்க மாட்டேன் ; வாழியர் ஓரி = ஓரி ! நீ நீடு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.; கருவி வானம் = கரிய மேகம்;  வரையாது சுரக்கும் = அளவின்றிக் கொடுக்கும்வள்ளியோய் = வள்ளலே !


ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”புறநானூறு” வலைப்பூ

[தி.பி:2052, சிலை (மார்கழி) 07]

(22-12-2021)
 

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை)(195) பல்சான்றீரே ! பல்சான்றீரே !


நரை திரை பரவிய  நுண்மாண் நுழைபுலச் சான்றோர்களே !

------------------------------------------------------------------------------------------------

 

இப் பாடலைப் புனைந்த நரிவெரூஉத் தலையார் காலத்துச் சான்றோர் சிலர் பரிசில் பெற வேண்டி, மன்னர்களை வீணாகப் புகழ்ந்தும், போர் புரிய ஊக்குவித்தும் தங்கள் புலமை வளத்தைத் தவறாகப் பயன்படுத்தி வந்தனர். அதைக்கண்டு வருந்திய இவர், தங்கள் சிந்தனையையும் அறிவையும் நல்வழியில் பயன்படுத்துமாறு அவர்களை அறிவுறுத்தி இயற்றிய பாடல் இது !


-----------------------------------------------------------------------------------------------

புறநானூறு - பாடல்.195.

-----------------------------------------------------------------------------------------------

பல்சான்  றீரே  பல்சான்  றீரே !

கயன்முள்  ளன்ன  நரைமுதிர்  திரைகவுட்

பயனின்  மூப்பிற்  பல்சான்  றீரே !

கணிச்சிக்  கூர்ம்படைக்  கடுந்திற  லொருவன்

பிணிக்குங்  காலை  யிரங்குவிர்  மாதோ;

நல்லது  செய்த  லாற்றீ  ராயினும்

அல்லது  செய்த  லோம்புமி  னதுதான்

எல்லாரு  முவப்ப  தன்றியும்

நல்லாற்றுப்  படூஉ  நெறியுமா  ரதுவே.

 

------------------------------------------------------------------------------------------------

 சந்தி பிரித்து எழுதப்பட்ட பாடல்:

------------------------------------------------------------------------------------------------

 

பல் சான்றீரேபல் சான்றீரே!

கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்

பயன்இல் மூப்பின் பல் சான்றீரே!

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்,

பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ!

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின் ! அதுதான்

எல்லாரும் உவப்பதுஅன்றியும்

நல்ஆற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

 

------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------

நூல்கள் பலவும் கற்று நுண்மாண் நுழை புலம் மிக்கவர்களாகத் திகழ்வதாக ஊரார் மெச்சும் சான்றோர்களே !கெண்டை மீனின் முள் போல விறைத்து நிற்கும் நரை முடியும்முதுமை எய்தியதால் கன்னங்களில் வரி வரியாகச் சுருக்கமும் ஏற்பட்டு. பயன் இல்லாத முதுமையை அடைந்துவிட்ட சான்றோர்களே ! உங்களுக்கு  ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் !

 

இறப்பு உங்களைத் தழுவும் தருணத்தில்ஐயகோ ! தவறு செய்து விட்டோமே ! என்று வருத்தப்படுவதால் பயனில்லை ! நீங்கள் பிறருக்கு நன்மை தரும் செயல்களைச் செய்யாவிட்டாலும் கூடப் பாதகமில்லைதீமை விளைவிக்கும் செயல்களைச்  செய்யாமல் தவிர்த்திட வேண்டும்.. அதைத்தான் இந்த உலகமே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறதுஅதுமட்டுமன்றி,  உங்களது பிறவிப் பயனை அடைவதற்கு இட்டுச் செல்லும் நன்னெறியும் அதுவொன்றேதான் !

 

------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

------------------------------------------------------------------------------------------------

 

பல்சான்றீரே = பல குணங்கள் அமைந்த ; சான்றீரே = சான்றோர்களே ; கயல் = கெண்டை மீன் ; முள் = முள் ; அன்ன = போல (உவம உருபு) ; நரை = நரைத்த தலைமுடி ; முதிர் = முதிர்ந்த ; திரை கவுள் = முதுமையால் ஏற்படும் தோற் சுருக்கம் ; (கவுள் = கன்னம்) ; பயன் இல் = பயன் இல்லாத ; மூப்பின் = முதுமையின் ; பல் சான்றீரே = பல குணங்கள் அமைந்த சான்றோர்களே !


கணிச்சி = மழு (கோடரி) ; கூர் = கூர்மையான ; படை = படைக்கலன் ; கடுந்திறல் = கடுமையான வலிமை கொண்ட ; ஒருவன் = கூற்றுவன் ; பிணிக்கும் கயிற்றால் பிணைத்து இழுத்துச் செல்லும் ; காலை = நேரத்தில் ; இரங்குவிர்  = வருந்துவீர் ; (மாதோ - அசைச்சொல்) ; நல்லது செய்தல் = நன்மை செய்தல் ; ஆற்றீர் = தளர்ந்து விலகுவீர் ; ஆயினும் = ஆனாலும் ; அல்லது செய்தல் = தீமை செய்தல் ; ஓம்புமின் = தவிர்த்திடுக ; அது தான் = அந்தச் செயல் தான் ; எல்லாரும் = அனைவரும் ; உவப்பது = மகிழ்வது ; அன்றியும் = மட்டுமல்லாமல் ; நல் ஆற்று = நல்ல வழி ; படூஉம் = படுவதும் ; நெறியும் =  நீதி, அறம், ஒழுக்கம்  ; (ஆர் - அசைச்சொல்) ; அதுவே = அது தான்.


  ஆக்கம் + இடுகை:

 வை.வேதரெத்தினம்,

 ஆட்சியர்,

 தமிழ்ப் பணி மன்றம்

 [தி.: 2050,மடங்கல்(ஆவணி,19]

 {05-09-2019}