விரும்பும் பதிவைத் தேடுக !

Monday 13 December 2021

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (76) ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும் !

புதுவது அன்று, இவ்வுலகத்து இயற்கை !

 ------------------------------------------------------------------------------------                

 

தலையாலங்கானம் என்னும் இடத்தில்   நடைபெற்ற போரில் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தன்னை எதிர்த்துப் போரிட்ட சேர சோழ மன்னர்களையும் குறுநில மன்னர் ஐவரையும், மற்ற அரசர்களின் துணையின்றித்  தான் ஒருவனே எதிர்கொண்டு பெரிய வெற்றியை அடைகிறான்.

 

அவனது வெற்றியைப் புகழ்ந்து மதுரை நக்கீரர், குட புலவியனார், ஆலம்பேரி சாத்தனார், மாங்குடி மருதனார், கல்லாடனார், இடைக்குன்றூர் கிழார் முதலிய புலவர்கள் பலர்  பாடியிருக்கின்றனர்.

 

இவர்களுள் இடைக்குன்றூர்க் கிழார் தனது செவ்விய  பாடல் திறன் மூலம் தனித்து விளங்குகிறார். போரைத் தாமே நேரில் பார்த்தது போல் இவர் பாடலை  வடித்திருப்பதிலிருந்து இவர் போர் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறது !

 

இடைக்குன்றூர்க் கிழார் இயற்றிய நான்கு பாடல்கள் ( 76, 77, 78, 79) புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கு பாடல்களும் தலையாலங்கானப் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் தன்னை எதிர்த்து நின்ற  சேர சோழ மன்னர்களையும் குறுநில மன்னர் ஐவரையும் வென்றதைப் பாராட்டிப் புகழ்ந்து பாடப்பட்டவையாகும்.

-------------------------------------------------------------------------------------

 பாடல் எண்; (76) 

-------------------------------------------------------------------------------------

 

ஒருவனை  ஒருவன்  அடுதலும்,  தொலைதலும்,

புதுவது  அன்று;  இவ்வுலகத்து  இயற்கை;

இன்றின்  ஊங்கோ  கேளலம்  திரள் அரை

மன்ற   வேம்பின்  மாச்சினை  ஓண்தளிர்

நெடுங்கொடி  உழிஞைப் பவரொடு  மிடைந்து,

செறியத்  தொடுத்த  தேம்பாய்  கண்ணி,

ஒலியல்  மாலையொடு,  பொலியச்  சூடி,

பாடுஇன்  தெண்கிணை  கறங்க, காண்தக,

நாடுகெழு  திருவின்,  பசும்பூண்,  செழியன்

பீடும்  செம்மலும்  அறியார்  கூடி,

பொருதும்  என்று  தன்தலை  வந்த

புனைகழல்  எழுவர்  நல்வலம்  அடங்க,

ஒருதான்  ஆகிப்  பொருது,  களத்தடலே .

-----------------------------------------------------------------------------------

பாடலின் பொருள்:

--------------------------------

 

ஒருவனை ஒருவன் அழித்தலும், ஒருவனிடம்  ஒருவன்  தோற்பதும்  புது நிகழ்வுகள் அல்ல !  இவ்வுலகத்து இயற்கை அது !”

 

வேப்ப மரத்தில்  உள்ள  பசிய  தளிர்களைப் பறித்து, உழிஞைக் கொடியுடன் கலந்து தொடுத்த மாலையுடன், பொன்னாலான அணிகலன்களையும்  அணிந்து கொண்டு போருக்குப் புறப்பட்டுச் சென்றான்  பாண்டியன் நெடுஞ்செழியன் !

 

அவனது செல்வ வளம் மிக்க நாட்டையும் , அவனது பெருமைகளையும் அறியாது,   போர்ப் பறை  ஒலிக்கக்  களத்திற்கு வந்தனர்  சேர, சோழர்களுடன்  குறுநில மன்னர்கள் ஐவர் !


அவர்கள் எழுவரையும் தான் ஒருவனாகவே தனித்து எதிர்கொண்டு வென்றிருக்கிறான் பாண்டியன் !

 

இத்தகைய வீரமிக்க ஒரு நிகழ்வை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை !

 

-------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

 

அடுதல் = அழித்தல்; தொலைதல் = கெடுதல் (தோற்றல்). புதுவது அன்று = புதியவை  அல்ல;  இன்றின் = அல்லாமல் ; ஊங்கு = முன்னர்; கேளலம் = கேள்விப்பட்டதில்லை; திரள் அரை = மரத்தின் பருத்த அடிப்பக்கம் ; மன்றம் = மரத்தடிப் பொதுவிடம் ; வேம்பின்= வேப்ப மரத்தின்; மாச் சினை = பெரிய கிளை (மரக்கொம்பு.);  பவர் = நெருக்கம் ,  அடர்ந்த கொடி ; பாய்தல் = பரவுதல் ;  ஒலியல் = தழைத்தல் , வளைய மாலை ;  பாடு = ஓசை;  கிணை = பறை;  கறங்கல் = ஒலித்தல்

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ: 2052, நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

-------------------------------------------------------------------------------------