விரும்பும் பதிவைத் தேடுக !

Friday, 28 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (74) குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் !

 

புறநானூறு (74). குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்


=============================
பாடியவர்: 

=============================

 

சேரமான் கணைக்கால் இரும்பொறை. இம்மன்னன் இரும்பொறை மரபைச் சார்ந்தவன். கணைய மரத்தைப் போன்ற வலிய கால்களை உடையவன் என்ற காரணத்தால் இவன் இப்பெயரைப் பெற்றதாகச் சிலர் கருதுகின்றனர். இரும்பொறைப் பரம்பரையில் கடைசியாக ஆட்சி புரிந்த சேர மன்னர்களுள் இவனும் ஒருவன் என்றும் இவன் ஆட்சிக் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள்  கூறுகின்றனர் !

=============================
பாடப்பட்டவர்:

=============================

எவருமிலர் !


==============================

பாடலின் பின்னணி: 

==============================

 

சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் பகை மூண்டது. அப்பகையின் காரணத்தால் அவர்களுக்கிடையே போர் தொடங்கியது. இருவரும் பெரும்படையுடன் கழுமலம் என்னுமிடத்தே போர் செய்யத் தொடங்கினர். போரில் சேரன் கணைக்கால் இரும்பொறை தோல்வியுற்றுச் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான். ஒரு நாள், சேரமான் பசியின் கொடுமை தாங்காமல், சிறைக் காவலர்களிடம் உணவு அளிக்குமாறு கேட்டான்.  அவர்கள் காலம் தாழ்த்திச் சிறிது உணவைக் கொண்டு வந்து தந்தனர்.  அதனால் வெட்கமும் மனத் துன்பமும்  அடைந்த சேரமான் தன்னிரக்கத்தோடு இப்பாடலை எழுதிவைத்துவிட்டு உயிர் துறந்ததாகச் சொல்லப்படுகிறது !

 

======================================
குழந்தை இறந்து பிறந்தாலும் அல்லது பிறந்து இறந்தாலும், உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும், அதை மார்பில் வாளால் வெட்டிப் புதைப்பது மறக்குல மரபாகப் பழந்தமிழ் நாட்டில் இருந்ததாக இப்பாடலில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அரசர்களிடத்தில் இந்த வழக்கம் இருந்ததாகப் புறநானூற்றுப் பாடல் 93-இல் ஒளவையார் பாடியிருப்பதும் இப்பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கது.
======================================

======================================

திணை: பொதுவியல். (எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது)
துறை: முதுமொழிக் காஞ்சி . (அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது)

 =======================================


===============================================

புறநானூறு .பாடல் (74) குழவி இறப்பினும் ஊன்தடி!

===============================================

 

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே?


===============================================

 

==============================
அருஞ்சொற்பொருள் 

==============================

 

குழவி இறப்பினும் = பிறந்த குழந்தை இறந்துவிட்டாலும் ; ஊன்தடி பிறப்பினும் = உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் ; ஆள் அன்று' என்று வாளின் தப்பார் = அது ஒரு “உயிருள்ள ஆள்” அன்று என்று, புதைப்பதற்கு முன் மார்பில் வாளால் வெட்டுவது எம் குல வழக்கம் : அதிலிருந்து எம்மவர் பின்வாங்க மாட்டார்கள் ; தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய = சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் நாய்போல இந்தச் சிறையில் இருக்கிறேன் ; கேளல் (கேள் + அல்) கேளிர் = பகையுணர்வு மிக்க இவர்கள்  ; வேளாண் சிறுபதம் = தந்திருக்கும் தண்ணீர் உணவு ; மதுகை = மனவலிமையின்றி ;  வயிற்றுத் தீத் தணிய = கொடிய வயிற்றுப் பசி தீர ;  தாம் இரந்து உண்ணும் அளவை  = கேட்டு வாங்கி உண்ணும்  அளவுக்கு நான் இருக்கிறேனே ; ஈன்மரோ இவ் வுலகத் தானே? = இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?

 

=============================
பொருளுரை:

==============================

 

எங்கள் குடியில் ஒரு குழந்தை இறந்து பிறந்தாலும் அல்லது பிறந்து இறந்தாலும்,  உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அது ஒரு உயிருள்ள பிறவி அன்று என்று புதைப்பதற்கு முன் மார்பில் வாளால் வெட்டுவது எங்கள் குல வழக்கம். அதில் தவற மாட்டார்கள். ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாக இருந்தாலும், போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல் சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு, இச்சிறையில் வாடுகிறேன். என் பசியைப்பொறுத்துக்கொள்ளும் மன வலிமையின்றி, பகைவர்களிடம் உணவு வேண்டுமென்று கேட்டதால் அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் இழிநிலையில் உள்ளேனே ! இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?

  ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)11]

(28-08-2026)

================================================

                                                     



புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) -(12) -பாணர் தாமரை மலையவும் !

 

புறநானூறு .(12) பாணர் தாமரை மலையவும் !

 

==============================

பாடியவர்.

==============================

நெட்டிமையார். நெட்டிமையார்  சங்க காலப் பெண் புலவர்களில் ஒருவர். நீண்ட இமைகளை உடையவர் என்ற ‌காரணத்தால் நெட்டிமையார் எனும் பெயர் அமைந்திருக்கலாம். இவர் பாடிய 3 பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன !

 

==============================

பாடப்பட்டோன் 

==============================

பாண்டியன்  பல்யாகசாலை  முதுகுடுமிப்  பெருவழுதி. குடுமி  என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவன்  ஆவான். கடைச் சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப் படுகின்றது. மூத்த குடும்பன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான். பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான். வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான் !

==============================

திணை : பாடாண்.

துறை : இயன் மொழி

==============================

==============================

பாடல் பின்னணி:  

==============================

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பழிப்பது போல் புகழ்ந்து இயற்றிய பாடல் இது !

 ==============================================


பாணர் தாமரை மலையவும், புலவர்
பூ நுதல் யானையோடு புனை தேர் பண்ணவும்,
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி,
இன்னா ஆகப்  பிறர் மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?

 

===============================================


===============================

சொற்பொருள்:  

===============================

 

பாணர் = இசைப் பாவலர்களுக்கு ; தாமரை = பொற்றாமரை மலர்களை; மலையவும் = மாலையாகச் சூட்டவும் செய்கிறாய் ;  புலவர் = புலவர்களுக்கு ; பூ நுதல் =   யானைகளின் நெற்றியில் சூடும் அணிகலனான பொற்பட்டம் அணிவித்து ;  யானையோடு = யானையும் தருகிறாய் ;  புனை = ஒப்பனை செய்யப்பட்ட ;  தேர் = தேரினை ; பண்ணவும் =  அளிக்கவும் செய்கிறாய் ; நின் = உன்னை நாடி வந்து பரிசு பெறும் ;  ஆர்வலர் = பாணர், புலவர் போன்றோர் ;  முகத்தே = முகத்தில்  மகிழ்ச்சி தோன்றுமாறு ; இனிய =  இனியவற்றை;  செய்தி = செய்யும் நீ ;  

 

விறல் = வெற்றியும் ;  மாண் = மாட்சிமையும் பொருந்திய ; குடுமி = பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியே ;  பிறர் மண் கொண்டு = உன் பகை மன்னர்களின் நாட்டை;  இன்னா ஆக = அவர்கள் மனத் துன்பம் கொள்ளுமாறு ;  வெற்றி கொண்டு = போரிட்டு வென்று  கைப்பற்றிக் கொள்கிறாயே ;  இது = இவ்வாறு செய்தல்;  அறனோ = அறம் தானோ ?

=============================

பொருளுரை:   

==============================


முதுகுடுமிப் பெருவழுதியே! பாணர்களுக்குப் பொன்னால் செய்த தாமரை மாலையைச் சூட்டுகிறாய்;  புலவர்களுக்கு ஒப்பனை செய்யப்பட்ட தேரினை அளிக்கிறாய் ; அத்துடன் பொன்னால் செய்யப்பெற்ற  பட்டத்தை நெற்றியில் பூணப் பெற்ற யானையையும்  பரிசாக  அளிக்கிறாய். உன்னை நாடி வந்து பரிசு பெறுவோர் முகத்தில் மகிழ்ச்சி பொங்குமாறு நீ நிரம்பவே நல்லவை செய்கிறாய் ;  அள்ளி அள்ளிக் கொடுக்கிறாய் ! மறுபுறம் உன் பகை மன்னர்களுக்குத் துன்பம் தரும் வகையில் போரிட்டு, அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொள்கிறாயே;  இது அறமான செயல்தானா?

 

 ============================================

குறிப்பு:  இது பழித்தது போல் புகழ்ந்தது.

============================================

 


 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)11]

(28-08-2026)

================================================

                                                       


                          

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை ) (04) வாள் வலந்தர மறுப் பட்டன !

 

புறநானூறு . (04). வாள் வலந்தர மறுப் பட்டன !

==============================

பாடியவர்: 

==============================


பரணர்.  சங்க காலப் புலவர்களில் மிகவும் சிறந்த புலவர்களில் ஒருவர் பரணர். இவர், புறநானூற்றில் 13 செய்யுள்களும், அகநானூற்றில் 16 செய்யுள்களும், நற்றிணையில் 12 செய்யுள்களும், பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார். இவர் பாடல்கள் வரலாற்றுச் செய்திகள் நிறைந்தவை !

 

==============================

பாடப்பட்டோன்: 

==============================


சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி.  இவன் வரலாற்றில் இடம் பெற்ற முதல் சோழ மன்னன் என்று கருதப்படுகிறது. இளஞ்சேட்சென்னியின் காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இடைப் பகுதி என்று கருதப்படுகிறது. பொருநராற்றுப்படையில், கரிகாலனை “உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்” என்று அதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் குறிப்பிடுவதிலிருந்து இவன் கரிகாலனின் தந்தை என்பது தெரிய வருகிறது !

 

=============================

பாடலின் பின்னணி:

==============================

 

இப்பாடலில் புலவர் பரணர், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை ஆகிய நான்கும் போரில் சிறந்து விளங்குவதைப் பாராட்டுகிறார். சோழன் தேரில் வருவது கடலினின்று கதிரவன் எழுவது போல் உள்ளது என்று அவனைப் புகழ்கிறார். அவனோடு போர் புரிந்த பகைவரின் நாடு தாயில்லாக் குழந்தை போல் ஓயாது கூவி வருந்தும் என்றும் கூறுகிறார் !

 

=============================================
திணை: வஞ்சி. (வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்)

=============================================
துறை: கொற்ற வள்ளை. (அரசனுடைய வெற்றியைக் கூறி பகைவரின் நாட்டின் அழிவை உரைத்தல்)
==============================================
புறநானூறு – பாடல் (04) வாள்வலந்தர மறுப் பட்டன !

==============================================

 

வாள்வலந்தர மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள் களங்கொளக் கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல் துவைத்து அம்பின் துளைதோன்றுவ
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே எறிபதத்தான் இடம் காட்டக்
கறுழ் பொருத செவ்வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி
மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே
தாய்இல் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே.

 ==========================

அருஞ்சொற்பொருள்:

===========================


வாள் வலம் தர = போரில் வெற்றியை ஈட்டும் வகையில் ; மறுப்பட்டன = வீரர்களின் வாள்கள் பயன்படுத்தப்பட்டதால் அவற்றில் குருதிக்கறை படிந்திருக்கிறது ;  செவ் வானத்து = ஆகையால் செவ்வானம் போன்ற ; வனப்புப் போன்றன = அழகுடன் அவை திகழ்கின்றன ; தாள் களங்கொள = வீரர்களின் கால்கள் போர்க்களத்தில் நடை பயில்வதால் ;  

 

கழல் பறைந்தன = வீரர்களின் காற் கழல்கள் தேய்ந்துவிட்டன ;   கொல் ஏற்றின் மருப்புப் போன்றன = ஆகையால் அவை கொல்லும் காளையின் கொம்பு போலத் தோற்றமளிக்கின்றன ;   தோல் = தோலால் செய்யப்பட்ட கேடகம்;  துவைத்து  = குத்துப்பட்டு ; அம்பின் துளை தோன்றுவ ; அம்பு குத்தியதால் துளைகள் தோன்றியுள்ளன ;

 

நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன = அத்துளைகள் மீண்டும் அம்பு செலுத்தக் குறிபார்க்க உதவுகின்றன : மாவே எறிபதத்தான் இடம் காட்ட = குதிரைகள், பகைவரைப் போரில் வெல்லும் பொழுது ; கறுழ் பொருத செவ்வாயான் = கடிவாளம் இடமும், வலமுமாய் இழுக்கப்பட்டதால் குருதி கசிந்து சிவந்த வாய் உடையனவாய் உள்ளன ; எருத்து வவ்விய புலி போன்றன = விலங்குகளைக் கடித்துக் கவ்வியதால் குருதிக்கறை படிந்த புலியின் வாய் போல் உள்ளன !

களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய் = யானைகள், மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் ; நுதி மழுங்கிய வெண் கோட்டான் = அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின ;  உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன  = அந்த யானைகள் உயிரைக் கொல்லும் இயமனைப் போல் காட்சி அளிக்கின்றன !

நீயே  = நீ ; அலங்கு உளைப் பரீஇ இவுளி = அசையும் பிடரியுடன் விரைந்து ஓடும் குதிரைகள் ; பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி = பொன்னாலான தேர் மீது வருவது ; மாக் கடல் நிவந் தெழுதரும் = பெரிய கடலிலிருந்து எழுந்துவரும் ; செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ = சிவந்த கதிரவனைப் போல ;
 
அனையை = ஒத்திருக்கிறது ; ஆகன் மாறே = ஆகையால் ; தாய்இல் தூவாக் குழவி போல = தாயில்லாத குழந்தைகள் போல் ; ஓவாது கூஉம் = ஓயாது கூவி வருந்துகின்றனர் ; நின் உடற்றியோர் நாடே = உன் பகைவர்கள் நாட்டு மக்கள் !


==============================
பொருளுரை: 

==============================

 

போரில் வெற்றியைத் தரும் வகையில் பயன்படுத்தப் பட்டதால் வீரர்களின் வாள்கள் குருதிக்கறை படிந்து சிவந்த வானத்தைப் போல் அழகாக உள்ளன. வீரர்களின் கால்கள் போர்க்களத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டதால் அவர்கள் கால்களில் அணிந்த கழல்கள் தேய்ந்து, கொல்லும் காளைகளின் கொம்புகள் போல் உள்ளன. கேடயங்கள் அம்புகளால் குத்தப்பட்டதால் அவற்றில் துளைகள் தோன்றி உள்ளன. அத்துளைகள், தவறாமல் அம்பு எய்வதற்கு ஏற்ற இலக்குகள் போல் காட்சி அளிக்கின்றன !

குதிரைகள், பகைவரைப் போரில் வெல்லும் பொழுது, வாயின் இடப்புறமும் வலப்புறமும் கடிவாளத்தால் இழுக்கப்பட்டதால் சிவந்த வாய் உடையனவாய் உள்ளன. அக்குதிரைகளின் வாய்கள், மான் முதலிய விலங்குகளைக் கடித்துக் கவ்வியதால் குருதிக்கறை படிந்த புலியின் வாய் போல் உள்ளன !

யானைகள், மதிற் கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள் உயிரைக் கொல்லும் இயமனைப் போல் காட்சி அளிக்கின்றன !

நீ அசையும் பிடரியுடன்
விரைந்து ஓடும் குதிரைகள் பூட்டிய, பொன்னாலான தேர் மீது வருவது, பெரிய கடலிலிருந்து செஞ்ஞாயிறு எழுவதைப்போல் தோன்றுகிறது. நீ இத்தகைய வலிமையுடையவனாதலால், உன் பகைவர்கள் நாட்டு மக்கள் தாயில்லாத குழந்தைகள் போல் ஓயாது கூவி வருந்துகின்றனர் !

===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)11]

(28-08-2026)

================================================