விரும்பும் பதிவைத் தேடுக !

Monday, 24 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (59) ஆரம் தாழ்ந்த அணிகிளர் !

 

புறநானூறு (59) ஆரம் தாழ்ந்த அணிகிளர்  !

==================================
பாடலின் பின்னணி: 

==================================

பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறனின் மாலை சூடிய மார்பையும், நீண்ட வலிய கைகளையும் பாராட்டி, புலவர் பெருந்தலைச் சாத்தனார் இப்பாடலில் அவனை விதந்து போற்றிப் புகழ்கிறார்.


=================================== 

பாடியோர்: 

====================================

 

பெருந்தலைச் சாத்தனார். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் பாடல் எண் 151,164,165, 205, 209, மற்றும் 294 -ஆக இடம்பெற்றுள்ளன.  இவர் பெருந்தலை என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.  இந்தப் பெயரில் பல ஊர்கள் இருப்பதால் தமிழ் நாட்டில் இவர் எந்தப் பகுதியைச் சார்ந்தவர் என்று உறுதியாகக் கூறமுடியவில்லை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்!


இவர் புறநானூற்றில் ஆறு செய்யுள்களும் அகநானூற்றில் இரண்டு செய்யுள்களும் (13, 224) நற்றிணையில் ஒரு செய்யுளும் (262) பாடியுள்:ளார் !

===================================
பாடப்பட்டோன்: 

=====================================


கோவலன் கொலையுண்டதைத் தொடர்ந்து மதுரை மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் “யானோ அரசன்? யானே கள்வன்” என்று கூறி உயிர் துறந்தான் !

 

அவன் இறந்த பின், அவன் தம்பி வெற்றிவேற் செழியன், மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். பல்லாண்டு கால ஆட்சிக்குப் பிறகு  வெற்றிவேற் செழியன் சித்திரமாடம் என்ற இடத்தில் இறந்ததால், அவன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று அழைக்கப்பட்டான் !

======================================

திணை : பாடாண் திணை (ஒருவருடைய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.

======================================

துறை: பூவை நிலை (மனிதரைத் தேவரோடு ஒப்பிட்டுக் கூறுதல்)

=======================================

 

===============================================

புறநானூறு – பாடல் (59) ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பு !

================================================

ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி !
வல்லை மன்ற நீநயந் தளித்தல் !
தேற்றாய் பெரும ! பொய்யே; என்றும்
காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை நின் பகைவர்க்கு;
திங்கள் அனையை எம்ம னோர்க்கே !

===========================================

பொருளுரை

===========================================

மாலை தவழும் எழில்மிகுந்த அகன்ற மார்பையும், முழங்காலைத் தொடுமளவு நீண்ட தடக்கைகளையும் உடைய மாட்சிமைக்குரிய பாண்டிய மன்னா ! வழுதியே  !

 

மக்கள் அனைவரும் மகிழும்படி அவர்களுக்கு அருள் செய்வதில் மெய்யாகவே வல்லவன் நீ !  என்றுமே பொய்யுரை புகலமாட்டாய் ! வெப்பம் கிளர்ந்து எழும் ஞாயிறைப் போன்றவன் உன் பகைவர்க்கு !  எம்போன்ற  புலவர்களுக்கோ, குளிர்ந்த ஒளி தரும்  திங்களைப் போன்றவன் !

================================

அருஞ்சொற்பொருள்:

================================


ஆரம் = மாலை; தாழ்ந்த = அணிந்த ; அணி = அழகு; கிளர்தல் = மிகுதல் ; தாள் தோய் = (முழங்) கால்களைத் தொடுகின்ற ; தடக்கை = நீண்ட கை ; தகைமாண்  = தகுதியும் மாண்பும் உடைய  ;  வழுதி = பாண்டிய மன்னா !; வல்லை = வலிமை ; மன்ற = உறுதியாக, தெளிவாக; நயந்து அளித்தல் = விரும்பி  வழங்குதல் ; தேற்றல் = அறிவித்தல் (சொல்லுதல்); காய்தல் = சினத்தல் ; தவிராது = நீங்காது ; கடல் ஊர்பு = கடலிலிருந்து ; எழுதரு = எழுகின்ற; ஞாயிறு  அனையை =  கதிரவனைப் போன்றவனே ; நின் பகைவர்க்கு = உனது எதிரிகளுக்கு ; திங்கள் அனையை = குளிர் ஒளியைத் தரும் நிறைமதியைப்  போன்றவன் ; எம்மனோர்க்கே = எம் போன்ற புலவர் களுக்கு!

================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)07]

(24-08-2026)

================================================

                                                     



புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (64) புற்கை நீத்து வரலாம் !

 

புறநானூறு – பாடல் (64) புற்கை நீத்து வரலாம்!

==============================
பாடலின் பின்னணி: 

==============================

 

வறுமையில் வாடுகிறாள் விறலி ஒருத்தி.  பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியிடம் சென்றால் அவள் வறுமை தீரும் என்று சொல்லி, அவளைப் புலவர் நெடும்பல்லியத்தனார் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியிடம் செல்வோம் வா என்று ஆற்றுப்படுத்துகிறார் ! 

============================== 

பாடியவர்: 

===============================

 

இப்பாடலைப் பாடியவர் நெடும்பல்லியத்தனார். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான். பல்லியம் என்று சொல்லுக்கு பலவகையான இசைக்கருவிகள் என்று பொருள். இவர் பல வகையான இசைக்கருவிகளை இயக்குவதில் வல்லவராக இருந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

=============================
பாடப்பட்டோன்: 

=============================

 

இப்பாடலில் பாடப்பட்டவன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவன் தன் பகைநாட்டைத் தாக்கும் முன் அங்கிருக்கும் ஆவினத்தையும், மகளிர்  மற்றும் நோயுற்றோரையும், பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு  சென்று விடும்படி முன்னறிவிப்புத் தருவது வழக்கம் என்று போற்றுகிறார் ஒரு புலவர். 

=========================================

திணை : பாடாண் திணை 

========================================

துறை: விரலியாற்றுப்படை

========================================

================================================
புறநானூறு – பாடல் (64) நல்யாழ் ஆகுளி பதலை !

================================================

 

நல்யாழ் ஆகுளி பதலையடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி !
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்பப்
பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?

==============================

பொருளுரை: 

==============================

 

வளையல்ள் அணிந்திருக்கும் விறலியே ! பகைவர் நாட்டில் யானைப் படையைப் போரில்  ஈடுபடுத்திக் கடும்போரிட்டு வெற்றி பெற்ற, முதுகுடுமிப் பெரு வழுதியின் பாசறையில், பச்சை ஊன் துண்டங்கள் அங்கு மிங்கும் சிதறிக் கிடக்கும்.  அவை, வானத்தில் பறக்கும் பருந்துக் கூட்டத்தை வேறிடம் செல்லவிடாமல் தடுத்து, தம்பால் ஈர்க்கும்.  இத்தகைய போர் வெற்றிகளையும், பெருஞ்செல்வத்தையும்  அடைந்துள்ள   முதுகுடுமிப் பெருவழுதியைச் சென்று காணலாம், அவனைக் கண்டு பரிசில் பெற்று வந்தால் அன்றாடம் கஞ்சியை மட்டுமே உண்டு வாழும்  உன் வறிய  வாழ்வை அறவே விட்டுவிடலாம். யாழையும் பறையையும் பதலையும் கட்டி எடுத்துக் கொண்டு உடனே புறப்படுவாயாக !

=============================
அருஞ்சொற்பொருள்:

=============================


நல்யாழ் = நல்ல யாழ் ; ஆகுளி = சிறுபறை ; பதலை = மாக்கிணை என்னும் பறை ;  சுருக்குதல் = கட்டுதல் ; செல்லாமோ = செல்வாயாக ; தில் = விருப்பத்தை உணர்த்தும் அசைச்சொல் ;  சில் வளை  = கைகளில் சில வளையல் அணிந்த ; விறலி = நாட்டியப் பெண் ; களிற்றுக்கணம் = யானைக் கூட்டம் ; பொருத = மோதுகின்ற ; கண் = இடம் ; அகன் = அகன்ற ; பறந்தலை = போர்க்களம் ; விசும்பு ஆடு = வான் வெளியில் பறக்கும் ; எருவை = பருந்து ; பசுந்தடி =  பச்சைஊன் ; மரீஇய = மருவிய , பொருந்திய ; குடுமிக் கோமான் = பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி ; புற்கை = கஞ்சி, கூழ் ; நீத்தல் = துறத்தல், விட்டுவிடுதல் ; வரற்கே = மன்னனைக் கண்டு வருவதற்கு !

================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)07]

(24-08-2026)

================================================




புறநானூறு - (வை.வேதரெத்தினம் உரை) (66) நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி !

 

புறநானூறு – பாடல் 66. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி !

=======================================

பாடலின் பின்னணி

=======================================

“வெண்ணி” என்னுமிடத்தில் நடைபெற்ற பெரும்போரில் சோழமன்னன் கரிகாற் பெருவளத்தான், சேரன் பெருஞ்சேரலாதனையும், வேளிர் குலத்தைச் சேர்ந்த 11 சிற்ரரசர்களையும்  களத்தில் சந்தித்து வெற்றி பெறுகிறான். களத்தில் எதிரெதிரே சந்தித்த போது கரிகாலன் வீசிய வேல், சேரன் பெருஞ்சேரலாதனின் மார்பைத் துளைத்துக்கொண்டு அவன் முதுகு வழியாக வெளியேறியதால், அவன் முதுகிலும் புண் ஏற்பட்டது. முதுகுப் புண்ணைக் காண்போர், பெருஞ்சேரலாதன் போரில் புறமுதுகிட்டான் என்று இழிவாகப் பேசுவார்களே என்று கருதி, வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாமல் உறங்காமல் உயிர்துறந்தான்.  இச்செய்தியை அறிந்த புலவர் வெண்ணிக் குயத்தியார், கரிகாற் பெருவளத்தானைப் பார்த்து, போரில் வீரத்தால் நீ பெரும் வெற்றிபெற்றுப் புகழ் அடைந்தாய், பெருஞ்சேரலாதன், போரில் தோற்றாலும், உன் வேல் அவன் மார்பைத் துளைத்ததுடன் முதுகிலும்  புண் ஏற்படுத்தியதால் வடக்கிருந்து உயிர் துறந்து உன்னைவிடப் பெரும் புகழ் அடைந்துவிட்டான்; அவன் உன்னைவிட நல்லவன்தானே  என்று கரிகாலனைக் கேட்பதன் மூலம் இப்பாடலின் மூலம் இருவரையும் உயர்த்திப் பேசுகிறார் !

=========================================
பாடியோர்

=========================================

இப்பாடலைப் பாடியவர் வெண்ணிக் குயத்தியார் என்னும் பெண்பாற் புலவர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த ஊர் “கோயில்வெண்ணி”.  இவ்வூர் முற்காலத்தில் “வெண்ணி” என்ற பெயரில் அழைக்கப் பெற்றிருக்கிறது. இவ்வூரைச் சேர்ந்த மண்பாண்டம் செய்யும் “குயவர்” குலத்தைச் சேர்ந்தவர் இப்புலவர் என்றும், இவரது இயற்பெயர் தெரியாததால், ஊர்ப்பெயரை முன்னொட்டாக வைத்து  “வெண்ணிக் குயத்தியார்” என அழைக்கப் படுவதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர் !

======================================

பாடப்பட்டோர்

======================================

“வெண்ணி” என்னும் ஊரில் நடைபெற்ற பெரும்போரில், சேர மன்னன் சேரமான் பெருஞ்சேரலாதனையும், வேளிர் குலத்தைச் சேர்ந்த 11 சிற்ரரசர்களையும்  சோழன் கரிகாற் பெருவளத்தான் வென்றான். போரில், சேரனின் மார்பில் பாய்ந்த கரிகாலனின் வேல், அவன் முதுகுவழியாக வெளியேறியது. முதுகிலும் புண்பட்டுவிட்டதே என்று நாணமடைந்த சேரன் வடக்கிருந்து உயிர் துறந்தான், சேரலாதன், கரிகாலன் இருவரது புகழும் இப்பாடலில் பேசப்படுகிறது !

=========================================

திணை : வாகைத் திணை

=========================================

துறை: அரச வாகை 

==========================================


===============================================

புறநானூறு – (66) நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி !

===============================================

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே !

===============================
பொருளுரை

===============================

கடற்காற்றின் இயல்பையும் திசையையும்  அறிந்து அதற்கேற்பக் கப்பலைச் செலுத்தும், கடற்செலவில் வல்லவர்களின் வழித் தோன்றலே !  மன்னனே ! கரிகாலனே!  நீ உன் ஆற்றல் வெளிப்படுமாறு போர்க்களத்தில் வென்றாய் ! ஆனால், உன்னிடம் தோற்ற பெருஞ்சேரலாதன் புறப்புண்ணுக்காக நாணிக் களத்திலேயே நோன்பிருந்து உயிர் துறந்தான். அவன் உன்னை விட நல்லவன் அல்லவா ? (இருவருமே நல்லவர்களே, வல்லவர்களே என்று பொருள்)

=============================

அருஞ்சொற்பொருள்

=============================

நளி = குளிர்ச்சி ; இரு = பெரிய ; முந்நீர் = கடல் ( ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் மூன்றும் கலப்பதால் கடலுக்கு முந்நீர் என்று பெயர்) ; நாவாய் =  மரக்கலம்; கப்பல் ; உரவோன் = வலிமையுடையவன் ; மருக = வழித்தோன்றலே ! ; களியியல் யானை =  மத (வெறி) உணர்வு கொண்ட யானைப் படை  ;  அமர் =  போர் ; கடந்த = எதிரிகளை அழித்த ; நின் ஆற்றல் = உனது பெரும் வீரம் ; தோன்ற  = வெளிப்பட ; வென்றோய் = வெற்றி பெற்றவனே ! ; வெண்ணிப் பறந்தலை = “வெண்ணி”ப் போர்க்களத்தில் ; கலிகொள் யாணர் = மார்பிலே அம்பை வாங்கிக்கொண்ட வீரன் பெருஞ்சேரலாதன் ; புறப்புண் நாணி = மார்பில் தைத்த வேல் முதுகிலும் புண் ஏற்படுத்திவிட்டதால், புறமுதுகு காட்டியவன் என்று  சிலர் பழிக்கக் கூடும் என்று அஞ்சி, நாணி ; வடக்கிருந்தோன் = வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாமல் உறங்காமல் உயிர் துறந்தவன் ; மிகப் புகழ் = மிகுந்த புகழ் ; உலகம் எய்தி = இவ்வுலகில் அடைந்துவிட்டான் ; நின்னினும் நல்லன் அன்றே = (அவன்) உன்னைவிட நல்லவன் அல்லவா ?

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)07]

(24-08-2026)

================================================