புறநானூறு (84) என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே !
=============================
பாடியவர்:
=============================
பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், பெருங்கோழி நாய்கனுக்கு மகளாக, திருச்சியின் ஒரு பகுதியாக இன்று விளங்கும் உறையூரில் நக்கண்ணையார் பிறந்தார். சோழ நாட்டுத் தலைநகர்களுள் ஒன்றான உறையூருக்கு கோழி என்ற பெயரும் உண்டு. நாய்கன் என்பது கடல் வாணிகம் செய்யும் இனத்தார் வைத்துக் கொள்ளும் பெயர். நக்கண்ணையார் புறநானூற்றில் 83, 84, 85 ஆகிய இலக்கங்கள் உடைய பாடல்களும், அகநானூற்றில் 252 - ஆவது பாடலும், நற்றிணையில் 19- ஆவது பாடலும் என மொத்தம் ஆறு பாடல்கள் பாடியுள்ளார்!
=============================
பாடப்பட்டோன்:
=============================
சோழன் “போர்வை”க்கோப் பெருநற்கிள்ளி, இவர்
சங்க காலத்து முற்காலச் சோழ மன்னர்களுள் மிக
முகாமையான, வீரம் செறிந்த ஒரு பேரரசன் ஆவார்
இவருடைய
பெயரில் உள்ள “போர்வை’ என்பது, இவரது அரசாட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதியின் தலைநகரான “போர்வை” என்னும்
ஊரைக் குறிப்பதாகும். (திருச்சி) உறையூரிலிருந்து கருவூர் செல்லும் வழித்தடத்தில் உள்ள “பெட்டவாத்தலை”
என்னும் ஊரின் பழைய பெயரே “போர்வை”.
சங்க இலக்கியமான புறநானூற்றில் இவரைப் பற்றியும், இவருடைய அஞ்சாத போர்த்திறன் ,அற்றும் மற்போர் திறமையைப் பற்றியும் பல பாடல்கள் விரிவாகப் பேசுகின்றன !
==================================
திணை: கைக்கிளை
(ஓருதலைக் காதல்)
துறை: பழிச்சுதல்
(போற்றுதல்)
===================================
என்னை புற்கை உண்டும் பெருந்தோளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே;
போர் எதிர்ந்து என்னை போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறை அன்னன்னே !
=============================
பொருளுரை:
=============================
என்னுடைய
தலைவன் சிறந்த உணவுகளைத் தவிர்த்து, எளிமையான கஞ்சியை
உண்டாலும் கூட, பெரிய தோளினையுடைய வீரன். அவன் மீது காதல் கொண்டுள்ள
நான், அவன் இருக்கும் “போர்வை” அரண்மனைக்கு வெளியே வெகுதொலைவில்
உறையூரில்” இருந்தாலும், அவன் நினைவால் உடலில் பசலை படர்ந்தவளாக உள்ளேன்.
போரை எதிர்கொள்ளும் போது அதை ஏற்று, அவன்
போர்க்களத்தை அடைகையில்
பெரும் ஆரவாரம்
நிறைந்த ஊர்ப்புறத்தில் தங்கள்
மறம் பேசி மகிழ்ந்து செருக்கடையும் அவனது பகைநாட்டு வீரர்களுக்கு,
அவன் உப்பு வணிகர்கள் அஞ்சும் இடர்மிகுந்த ஏற்றத்
தாழ்வு உடைய நீர்த் துறையைப் போன்று அச்சம் தருபவனாக விளங்குகிறான்
!
உப்பு
வணிகர்கள் தங்களது வண்டிகளில் உப்பை ஏற்றிச் செல்லும்போது, வழியில்
இருக்கும் ஆழமான அல்லது சேறு நிறைந்த நீர்நிலைக் கடவைகளைக் (துறை) கடக்க மிகவும்
அஞ்சுவார்கள். ஏனெனில், வண்டியில் தண்ணீர் புகுந்தால் ஏற்றி
வந்த உப்பு முழுவதும் கரைந்து வீணாகிவிடும். அதுபோல் போர்க்களத்தில்
செருக்குடன் வரும் பகை வீரர்களுக்கு, இந்தத் தலைவன் (கிள்ளி)
உமணர்கள் அஞ்சும் அந்த ஆபத்தான நீர்நிலைத் துறை போல விளங்குகிறான். அவனிடம்
மோதினால் பகைவர்கள் முற்றிலும் அழிந்து போவார்கள் என்பதை விளக்க இந்த உவமை
கையாளப்பட்டுள்ளது !
=============================
சொற்பொருள்:
=============================
என்
ஐ புற்கை உண்டும் = என்னுடைய தலைவனான சோழ
இளவரசன் போர்வைக்கோப்
பெருநற்கிள்ளி கஞ்சியை உண்டாலும்; பெருந்தோளன்னே
= பெரிய தோளினை உடைய வீரன் ; யாமே = நானே ; புறஞ்சிறை இருந்தும் = அவன் இருக்கும் அரண்மனையின் புறப்பகுதியில்
இருந்தும் ; பொன் அன்னம்மே = உடலெல்லாம்
பொன் வண்ணப் பசலை பூத்தவளாக உடையவளாக உள்ளேன் ;
(அன்னம்மே – தன்மைப் பன்மை, செய்யுளோசை நோக்கி
மகர ஒற்று விரிந்தது), போர் எதிர்ந்து என் ஐ போர்க்களம்
புகினே = போரை ஏற்று என் தலைவன் போர்க்களத்திற்குச் சென்றால்
; கல்லென்
பேரூர் விழவுடை ஆங்கண் = பெரும் ஆரவாரத்தையுடைய விழாக்கள் கொண்ட
ஊரிடத்தில் ; (“கல்” என்பது – ஒலிக்குறிப்பு), ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு = தங்கள் வீரம் பற்றிப்
பேசி செருக்குற்று மகிழ்ந்த பகை நாட்டு வீரர்களுக்கு ; உமணர் வெரூஉம் துறை அன்னன்னே = உப்பு வணிகர்கள்
அஞ்சும் கடப்பதற்கரிய வழிக் கடவைகள் உடைய நீர்த் துறையைப் போன்று இடர்தரும் வலிமை மிக்கவன்.
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)13]
(30-08-2026)
================================================
