விரும்பும் பதிவைத் தேடுக !

Showing posts with label யாழொடும் கொள்ளா. Show all posts
Showing posts with label யாழொடும் கொள்ளா. Show all posts

Monday, 31 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (92) யாழொடும் கொள்ளா !

 

புறநானூறு (92) யாழொடும் கொள்ளா, பொழுதொடும் !

 

=============================

பாடியவர்

=============================

 

ஔவையார். ஔவையார். ஔவையார் என்னும் பெயரில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59  எண் உள்ளன. அவற்றில்  புறத்திணைப் பாடல்கள் 33.  ஏனைய  26 அகத்திணைப் பாடல்கள். அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார் !

 

 

=============================

பாடப்பட்டோன்

=============================

 

அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமான் நெடுமான் அஞ்சி  தகடூரை (இப்பொழுது தர்மபுரி என வழங்கப்படுகிறது)  ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவர். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூ பெயர். 'அதியமான்' என்பது 'அதியர் கோமான்' என்பதன் மரூ பெயர்.  அஞ்சி என்பது இவரது இயற்பெயர்.[1] இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு  தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர் !

 

==================================

திணை : பாடாண்

 

துறை : இயன் மொழி

===================================

 

 

=========================

பாடல் பின்னணி:

=========================

 

 

நீண்ட காலம் உயிர்வாழச் செய்யும் அரிய நெல்லிக் கனியைப் பெற்ற அதியமான், அதை ஒளவைக்கு வழங்க, வனது உயர்ந்த பண்பைக் கண்டு வியந்த ஒளவையார், அதியமானைப் புகழ்ந்து இயற்றிய பாடல் இது.

 

===============================================

புறநானூறு (92) யாழொடும் கொள்ளா, பொழுதொடும் !

===============================================

 

 

யாழொடும் கொள்ளா, பொழுதொடும் புணரா,
பொருள் அறிவாரா, ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை,
என் வாய்ச் சொல்லும் அன்ன, ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்து
நெடுமான் அஞ்சி நீ அருளல்மாறே.

 

 

=============================

சொற்பொருள்: 

=============================

 

புதல்வர் தம் மழலை = தம் குழந்தையின் மழலைக் சொல் ; யாழொடும் கொள்ளா = யாழிசையுடன் ஒத்து வராது ; பொழுதொடும்  புணரா = காலத்தோடும் பொருந்தாது ; பொருள் அறிவாரா =  பொருளை அறிய இயலாது ; ஆயினும் = ஆனாலும் ; தந்தையர்க்கு = தந்தைகளுக்கு ; அருள் வந்தனவால் =  ன்பை வரவழைக்கின்றன ;  

 

 

என்  வாய்ச் சொல்லும் =  என் வாயிலிருந்து வரும் சொற்களும் ; அன்ன = அதைப் போல இருக்கும் ;  ஒன்னார் = பகைவர் ; கடி = காவல் ; மதில் = கோட்டையைச் சுற்றி இருக்கும் மதில் சுவர் ;  அரண் = கோட்டை ;  பல = பலவற்றை ; கடந்து –=  வென்று ; நெடுமான் அஞ்சி = அதியமான் நெடுமான் அஞ்சியே ;  நீ அருளல்மாறே = நீ எனக்கு அன்பு காட்டி அருள்வாயாக !

 

=============================

பொருளுரை:  

=============================

 

குழந்தைகளின் மழலைமொழி, யாழ் இசையோடு பொருந்தாது; காலத்தோடும் பொருந்தாது;  பொருளை அறிவதற்கும் இயலாது.   அவ்வாறு இருப்பினும், தந்தையர்க்கு அம்மழலைச் சொற்கள் குழந்தைகள் மீது அன்பை வரவழைக்கின்றன.

 

காவல் மிகுந்த மதில்களைக் கொண்ட கோட்டைகள் பலவற்றை வென்ற அதியமான் நெடுமான் அஞ்சியே!  என் சொற்களும் குழந்தையின் மழலைச் சொற்களைப் போன்றவையே; ஆகையால் (ஒரு தந்தையைப் போல் இருப்பதால்) நீ என் மீதும் பரிவு கொண்டு அன்பு காட்டுவாயாக !

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)14]

(31-08-2026)

================================================