விரும்பும் பதிவைத் தேடுக !

Showing posts with label மடத்தகை மாமயில் பனிக்கும். Show all posts
Showing posts with label மடத்தகை மாமயில் பனிக்கும். Show all posts

Tuesday, 1 September 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (145) மடத்தகை மாமயில் பனிக்கும் !

 

புறநானூறு (145) மடத்தகை மாமயில் பனிக்கும் !

============================

பாடியவர்:

=============================

பரணர். பரணர் என்னும் பெயர் கொண்ட பல புலவர்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்துள்ளனர். சங்ககாலத்தைச் சேர்ந்த பரணர் பாணர் குலத்தைச் சேர்ந்தவர். பாணர் என்ற சொல் மருவி பரணர் ஆனது. இவர் ஒளவையார் காலத்தைச் சேர்ந்தவர். அதியமானைப் பாடினார். சேரன் செங்குட்டுவனைப் பற்றி அதிகம் பாடினார். பரணர் பாடிய எண்பத்தி ஐந்து பாடல்கள் சங்கத்தொகைப் பாடல்களில் தொகுக்கப்பட்டுள்ளன. நக்கீரர், கபிலர், பரணர் ஆகிய மூவரையும் பழந்தமிழின் முப்பெரும் புலவர்களாக அறிஞர்கள் கருதினர்.

 ============================

பாடப்பட்டோன்

=============================

வையாவிக் கோப்பெரும் பேகன்.  மயில் உடுத்திக் கொள்ளாது, போர்த்திக் கொள்ளாது எனத் தெரிந்திருந்தும், தான் குளிரில் நடுங்கும்போது போர்த்தியிருந்த மேலாடையை  ஆடும் மயிலுக்குக் குளிரில் அது நடுங்குவதாக எண்ணிப் போர்த்தி விட்டவன் வையாவிக் கோப்பெரும் பேகன். எமக்கு இப் பரிசில்களை வழங்கிய எம் அரசன் அவன். சிறிதோ, பெரிதோ, எந்த அளவாயினும் ஈதல்தான் பெரிது எனச் செயல்படுபவன் !

=============================

திணை : பெருந்திணை

துறை  : குறுங்கலி

=============================

பாடலின்  பின்னணி:  

=============================

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பேகன் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்துக்கொண்டு, தன் மனைவியைப் பிரிந்திருந்தான்.  அந்த நேரத்தில் பரணர் பேகனிடம் சென்று பாடினார்.  அவருக்குப் பேகன் பரிசில் அளிக்க முன்வந்தான்.  அதைக் கண்ட பரணர், “நான் பசியால் இங்கு வரவில்லை.  எனக்குப் போற்றிப் பாதுகாக்க சுற்றத்தார் யாருமில்லை.   நான் வேண்டும் பரிசு, நீ இன்று இரவே சென்று உன் மனைவியின் துயரத்தைத் தீர்ப்பது தான்” என்று கூறுகின்றார்.

===============================================

புறநானூறு (145) மடத்தகை மாமயில் பனிக்கும் !

===============================================

மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்

படாஅம்  ஈத்த கெடாஅ நல்லிசை

கடாஅ யானைக் கலிமான் பேக !

பசித்தும் வாரோம், பாரமும் இலமே;

களங்கனியன்ன கருங்கோட்டுச் சீறியாழ் 

நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி,

அறம் செய்தீமோ, அருள் வெய்யோய்என,

இஃது யாம் இரந்த பரிசில்: அஃது, இருளின்

இன மணி நெடுந்தேர் ஏறி,

இன்னாது உறைவி அரும் படர் களைமே !

===============================================

=========================

சொற்பொருள்:   

=========================

மடத்தகை மாமயில் = தோகை விரித்து ஆடிக் கொண்டிருக்கும் அழகிய வண்ணமயில் ; பனிக்கும் என்று அருளி = குளிரால் நடுங்கும் என்று எண்ணிப் பரிவு கொண்டு ; படாஅம்  ஈத்த கெடாஅ நல்லிசை =  போர்வை கொடுத்த  கெடாத நற்புகழ் ஈட்டியுள்ள ;   கடாஅ யானைக் கலிமான் பேக  =  மத வெறி கொண்ட யானைப் படையும் வீறு கொண்ட  குதிரைப் படையும் வைத்திருக்கும் பேகனே !

 

பசித்தும் வாரோம், பாரமும் இலமே =  யாம் பசிக்கொடுமை தாளாமல் உன்னிடம் வரவில்லை, தாளமுடியாத குடும்பச் சுமையும் எனக்கு இல்லை ;  களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறி யாழ் =  களாப் பழத்தைப் போன்ற கரிய நிறத் தண்டை உடைய சிறிய யாழின் ;  நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி = இசையின் தன்மை தெரிந்து வாழ்வோர்  தலையை அசைத்துச் சுவைத்துக் கொண்டாடும்படி ;  அறம் செய்தீமோ = அறத்தை செய்வாயாக !

 

இருளின் இன மணி நெடுந்தேர் ஏறி = இந்த இரவிலேயே நிறைந்த மணிகள் தொங்கும் பெரிய தேரில் நீ ஏறிச் சென்று ; இன்னாது உறைவி அரும் படர் களைமே = துயரத்துடன் வாழும் உன் மனைவியின் பெரும் துன்பத்தைக் களைவாயாக  ;  அருள் வெய்யோய் = அருளை விரும்புபவனே ! ; இஃது யாம் இரந்த பரிசில் = இதுவே யாம் உன்னிடம் கேட்கும் பரிசில் ;

=========================

பொருளுரை:  

==========================

தோகை விரித்து ஆடிக் கொண்டிருக்கும் அழகிய வண்ணமயில் குளிரால் நடுங்கும் என்று எண்ணிப் பரிவு கொண்டு, அதன்மேல் போர்வையைப் போர்த்தி அழியாப் புகழ் கொண்டவனே !  மத வெறி கொண்ட யானைப் படையும் வீறு கொண்ட  குதிரைப் படையும் வைத்திருக்கும் பேகனே !

 

யாம் பசிக்கொடுமை தாளாமல் உன்னிடம் வரவில்லை, தாளமுடியாத குடும்பச் சுமையும் எமக்கு இல்லை. களாப் பழத்தைப் போன்ற கரிய நிறத் தண்டை உடைய சிறிய யாழ் இசையின் தன்மை தெரிந்து வாழ்வோர்,  தலையை அசைத்து, சுவைத்துக்  கொண்டாடும்படி, நீ செய்யப்போகும் அறம் அமையட்டும் !

 

அருளை விரும்புபவனே ! இந்த இரவிலேயே மணிகள் தொங்கும் பெரிய தேரில் நீ ஏறிச் சென்று துயரத்துடன் வாழும் உன் மனைவியின் பெரும் துன்பத்தைக் களைவாயாக ! இதுவே யாம் உன்னிடம் கேட்கும் பரிசில் !

  ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)14]

(01-09-2026)

================================================ 

மயிலுக்குப் போர்வை தந்த பேகன்.