விரும்பும் பதிவைத் தேடுக !

Showing posts with label உற்றுழி உதவியும் உறுபொருள். Show all posts
Showing posts with label உற்றுழி உதவியும் உறுபொருள். Show all posts

Friday, 25 September 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (183) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் !

 

புறநானூறு – பாடல் (183) உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,

===========================================

பாடியவர்: ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,

===========================================

பாடப்பட்டவர் : எவருமிலர்.

===========================================

திணை: பொதுவியல்.

துறை: பொருண்மொழிக் காஞ்சி

===========================================

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே,

பிறப்பு ஓரன்ன உடன் வயிற்று உள்ளும்,

சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்,

ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், 

‘மூத்தோன் வருக என்னாது’ அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்,

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே. 

 

===========================================

சொற்பொருள்:

===========================================

 

உற்றுழி உதவியும் = கல்வி கற்பிக்கும் ஆசிரியர் துன்பத்தில் இருக்கும் போது அவருக்கு உதவிசெய்தும் ; உறு பொருள் கொடுத்தும் = கற்பிக்கும் கல்விக்குக் கைம்மாறாக  ஆசிரியருக்கு போதுமான அளவுக்கு நிதியளித்தும்; பிற்றை = பிற்காலத்தில் ; நிலை முனியாது கற்றல் நன்றே = ஆசிரியர் மீது எவ்வித வெறுப்பும் கொள்ளாது அவர் மீது மதிப்பு வைத்து கல்வி கற்றல் நன்மை விளைவிக்கும் ; பிறப்பு ஓரன்ன உடன் வயிற்று உள்ளும் = ஒரு தாயின் மக்களாகச் சில குழந்தைகள் பிறந்திருந்தாலும்;  


சிறப்பின் பாலால் = கல்வியில் எந்தக் குழந்தை மேன்மை அடைந்துள்ளதோ,;  தாயும் மனம் திரியும் = அந்தப் பிள்ளைக்குத்  தாயானவள் அதிக மதிப்பும் முன்னுரிமையும் தருவாள் ;  (அது  போல்) ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும் = ஒரே குடியில் பலர் பிறந்திருந்தாலும் ; மூத்தோன் வருக என்னாது = அவர்களுள் மூத்தவர்  யாரோ அவரை வருக என்று அழைக்காமல் ;  அவருள் = அவர்களுள் ; அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் = அறிவிற் சிறந்த ஒருவரை அமைச்சராக அமர்த்தி, அவர் காட்டும் வழியில் ஆட்சி புரியவே அரசனும் விரும்புவான் ;  


வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் = அந்தணர், அரசகுலத்தவர், வாணிகர், வேளாளர் எனப் பகுத்தறியப்படும் நான்கு குலத்தினருள்ளும்; கீழ்ப்பால் ஒருவன் கற்பின் = தாழ்நிலை என்று கருதப்படும் வேளாளர் குலத்தில் ஒருவன் பிறந்திருந்தாலும்  அவன் கல்வியிற் சிறந்தவனாக இருப்பின்  ; மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே = அந்தணர், அரசகுலத்தவர், வாணிகர், ஆகிய மேற்குலத்தில் பிறந்தவர்களும்,   வேளாளர் குலத்தவனை மதித்து அவனிடம் கல்வி கற்க வருவார்கள் ;  (இதுதான் கல்வியின் சிறப்பு என்பது பொருள்)

 

===========================================

பொருளுரை:

===========================================

 

கல்வி கற்பிக்கும் ஆசிரியர் துன்பத்தில் இருக்கும் போது அவருக்கு உதவிசெய்தும், கற்பிக்கும் கல்விக்குக் கைம்மாறாக  ஆசிரியருக்கு போதுமான அளவுக்கு நிதியளித்தும், ஆசிரியர் மீது எவ்வித வெறுப்பும் கொள்ளாது அவர் மீது  மதிப்பு வைத்து  கல்வி கற்றல் பிற்காலத்தில் நன்மை விளைவிக்கும்.

 

ஒரு தாயின் மக்களாகச் சில குழந்தைகள் பிறந்திருந்தாலும், கல்வியில் எந்தக்  குழந்தை மேன்மை அடைந்துள்ளதோ, அந்தப் பிள்ளைக்குத்  தாயானவள் அதிக மதிப்பும் முன்னுரிமையும் தருவாள்.

 

(அது  போல்) ஒரே குடியில் பலர் பிறந்திருந்தாலும், அவர்களுள் மூத்தவர்  யாரோ அவரை வருக என்று அழைக்காமல், அவர்களுள், அறிவிற் சிறந்த ஒருவரை அமைச்சராக அமர்த்தி, அவர் காட்டும் வழியில் ஆட்சி புரியவே அரசனும் விரும்புவான்.

 

அந்தணர், அரசகுலத்தவர், வாணிகர், வேளாளர் எனப் பகுத்தறியப்படும் நான்கு குலத்தினருள்ளும், தாழ்நிலை என்று கருதப்படும் வேளாளர் குலத்தில் ஒருவன் பிறந்திருந்தாலும்  அவன் கல்வியிற் சிறந்தவனாக இருப்பின், அந்தணர், அரசகுலத்தவர், வாணிகர், ஆகிய மேற்குலத்தில் பிறந்தவர்களும், வேளாளர் குலத்தவனை மதித்து அவனிடம் கல்வி கற்க முன்வருவார்கள் ;  (இதுதான் கல்வியின் சிறப்பு என்பது பொருள்)

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, கன்னி (புரட்டாசி) 08]

(25-09-2026)

================================================ 

ஆசிரியரும்  மாணவனும்