புறநானூறு - பாடல்
(172) ஏற்றுக உலையே ! ஆக்குக சோறே !
==============================================
பாடியவர்:
வடம வண்ணக்கன் தாமோதரனார்,
==============================================
பாடப்பட்டோன்:
பிட்டங்கொற்றன்,
==============================================
திணை:
பாடாண்,
துறை:
இயன் மொழி
==============================================
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப்
பாடு வல் விறலியர் கோதையும் புனைக;
அன்னவை பிறவும் செய்க;
என்னதூஉம்
பரியல் வேண்டா; வரு பதம் நாடி,
ஐவனம் காவலர் பெய் தீ
நந்தின்,
ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும்
வன் புல நாடன், வயமான் பிட்டன்;
ஆர் அமர் கடக்கும் வேலும், அவன் இறை
மா வள் ஈகைக் கோதையும்,
மாறு கொள் மன்னரும், வாழியர் நெடிதே!
==============================================
சொற்பொருள்:
==============================================
ஏற்றுக உலையே = அடுப்பில் உலை வையுங்கள் ; ஆக்குக சோறே = சோற்றை ஆக்குங்கள் ; கள்ளும் குறைபடல் ஓம்புக = குறையில்லாமல் கள்ளும் தாருங்கள் ; ஒள் இழைப் பாடுவல் = விறலியர் பாடுங்கள்; கோதையும் புனைக = மாலைகளையும் அணிந்திடுக ; அன்னவை – அதைப் போன்று ; பலவும் செய்க – பற்பல செய்யுங்கள் ; என்னதூஉம் = சிறு அளவு கூட ; பரியல் வேண்டா வருபதம் நாடி = உங்களுக்காகக் கொண்டு வரப்படும் உணவைப் பற்றிக் கவலை கொள்ளாதீர்கள் ; ஐவனம் காவல் பெய் தீ நந்தின் = மலையிலுள்ள ஐவனம் நெல் வயல் வெளிகளில் காவலுக்காக ஏற்றப்படும் தீ அணைந்துவிட்டால் ;
ஒளி திகழ் திருந்து மணி = நீங்கள் அணிந்திருக்கும் ஒளிமணிகள் ; நளி இருள் அகற்றும் = சூழ்ந்துள்ள
செறிந்த இருளை அகற்றிவிடும் ; வன்புல நாடன் – இம் மலைநாட்டின் தலைவன் ;
வயமான் பிட்டன் – வலிய குதிரைகளை உடைய பிட்டன் ; ஆர் அமர் கடக்கும் = கடுமையான போர்களைக் கூட வெல்வான்
; மேலும் = அத்துடன் ; அவன் இறை = அவனுடைய மன்னன்
; மா வள் ஈகைக் கோதையும் =
வள்ளன்மை மிக்க சேர மன்னன் கோதையும் ; மாறு கொள் மன்னரும் = கோதையை
எதிர்க்க முடியாமல் அவனுக்குக் திறை செலுத்தும்
மன்னர்களும்; வாழியர் நெடிதே – அனைவருமே
நெடிது வாழ்க !
=============================================
பொருளுரை:
=============================================
அடுப்பில் உலை வையுங்கள்;
சோற்றை ஆக்குங்கள்; குறையில்லாமல் கள்ளும் தாருங்கள் ! விறலியர் பாடுங்கள்; மாலைகளையும்
அணிந்திடுக ! அதைப் போன்று, பற்பலவும் செய்யுங்கள். உங்களுக்காகக் கொண்டு வரப்படும்
உணவைப் பற்றிச் சிறு அளவு கூட கவலை கொள்ளாதீர்கள்.
மலையிலுள்ள ஐவனம் நெல் வயல் வெளிகளில் காவலுக்காக ஏற்றப்படும் தீ அணைந்துவிட்டால், நீங்கள் அணிந்திருக்கும் ஒளிமணிகள், சூழ்ந்துள்ள செறிந்த இருளை அகற்றிவிடும். இம் மலைநாட்டின் தலைவன், சேர மன்னன் கோதையின் தளபதிகளில் ஒருவனான வலிய குதிரைகளை உடைய பிட்டன், கடுமையான போர்களைக் கூட வெல்வான். அத்துடன், அவனுடைய மன்னன், வள்ளன்மை மிக்க சேர மன்னன் கோதையும், கோதையை எதிர்க்க முடியாமல் அவனுக்குக் திறை செலுத்தும் மன்னர்களும், அனைவருமே நெடிது வாழ்க !
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, கன்னி (புரட்டாசி) 12]
(29-09-2026)
================================================ 
ஏற்றுக உலையே ! ஆக்குக சோறே !
