புறநானூறு -பாடல். (87) களம் புகல் ஓம்புமின், தெவ்விர் !
=============================
பாடியவர்
=============================
ஔவையார். ஔவையார் என்னும் பெயரில்
வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த
ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு,
நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில்
இவரது பாடல்கள் 59 எண் உள்ளன. அவற்றில்
புறத்திணைப் பாடல்கள்
33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள். அதிக பாடல்களைப் பாடிய புலவர்
வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார் !
==============================
பாடப்பட்டோன்
==============================
அதியமான் நெடுமான் அஞ்சி.
அதியமான் நெடுமான் அஞ்சி
தகடூரை (இப்பொழுது தர்மபுரி என வழங்கப்படுகிறது) ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவர். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள்.
இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூஉ பெயர். 'அதியமான்'
என்பது 'அதியர் கோமான்' என்பதன்
மரூஉ பெயர்.
அஞ்சி என்பது இவரது இயற்பெயர்.[1] இவன்
ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு
தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப்
பெயர் !
=============================
திணை: தும்பை.
துறை: தானை மறம்
==============================
பாடலின் பின்னணி:
==============================
அதியமானின்
எதிரிகள் அவனோடு போர் செய்யத் திட்டமிட்டனர். அதை அறிந்த ஔவையார் அவர்களிடம்
சென்று அதியமானின் வலிமையைப் புகழ்ந்து, போர் செய்வதைத்
தவிருங்கள் என்று மறைமுகமாக அறிவுரை கூறுவதை நாம் இப்பாடலில்
காணலாம்.
======================================
புறநானூறு (87) களம்
புகல் ஓம்புமின் !
=======================================
களம் புகல் ஓம்புமின், தெவ்விர் ! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே.
=============================
பொருளுரை:
=============================
அதியமானுடன் பகை பாராட்டும் மன்னர்களே ! அவனுடன் போர் புரிவதைத் தவிருங்கள். ஏனெனில், எதிர்த்துப்
போரிடும் வீரன் ஒருவன் எங்கள் நாட்டிலும்
இருக்கிறான். ஒரே நாளில் எட்டு வலிமையான தேர்களைச் செய்யும்
திறனுடைய ஒரு தச்சன்
, ஒரு மாதம் கண்ணும் கருத்துடன்
உழைத்துச் செய்த நேர்த்தியான தேர்ச்சக்கரம் போன்ற பெரும்
வலிமை உடையவன் அவன்.
=============================
சொற்பொருள்:
=============================
களம் =
போர்க்களம் ; புகல் = புகுதல் ;
ஓம்புமின் = பாதுகாத்துக் கொள்ளுங்கள் ;
(மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி) ; தெவ்விர் = பகை மன்னர்களே ; போர் = போர்
செய்ய ; எதிர்ந்து = எதிர்த்து
; எம்முளும் = எங்கள் நாட்டிலும்
; உளன் = உள்ளான் ; ஒரு
பொருநன் = ஒரு போர் வீரன் ; வைகல் = நாளும் ; எண் தேர் = எட்டுத்
தேர்கள் ; செய்யும் = செய்யும் திறன்
கொண்ட ; தச்சன் = மரக் கலைஞன் ;
திங்கள் = மாதம் ; வலித்த
= கருத்துடன் செய்த ; கால் = தேர்ச் சக்கரம் ; அன்னோனே =
போன்றவன் ;
===============================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)13]
(30-08-2026)
================================================
