மன்னா ! நிலம் பிளந்து உள்வாங்கினாலும், சொன்ன
சொல் மாறாதிருப்பாயாக !
=================================
பாடலின் பின்னணி:
=================================
புலவர் இரும்பிடர்த்தலையார், பாண்டியன் வழுதியைப் பார்த்து, மன்னவனே, வலிமையிலும், வள்ளன்மையிலும் சிறந்த மன்னவனே ! நீ எப்பொழுதும் சொன்ன சொல் தவறாது இருப்பாயாக என்று வாழ்த்துதல் !
================================
பாடியவர்:
================================
புலவர் இரும்பிடர்த் தலையார். இப்பாடலில் யானையின் பெரிய தலையினைக் குறிக்க “இரும் (பெரிய) பிடர் (கழுத்தின் பின்புறம்) தலை
(தலை)” என்னும் சொல்லைப் புலவர் ஆண்டிருப்பதால்
இவர் இரும்பிடர்த்தலையார் என அழைக்கப்படுகிறார். இவரது இயற்பெயர் தெரியவில்லை !
===========================
பாடப்பட்டோன்:
================================
பாண்டியன்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி. கருங்கை என்பதற்கு வலிய கை என்று பொருள்.
இப்பாடலில், இப்பாண்டிய மன்னனை இரும்பிடர்த்தலையார் “கருங்கை
ஒள்வாள் பெரும்பெயர் வழுதி” என்று குறிப்பிடுகிறார். இவன் இயற்பெயர் எது என்பது
ஆய்வுக்குரியது !
============================================
திணை : பாடாண் திணை
=============================================
துறை: செவியறிவுறூஉ
==============================================
===============================================
புறநானூறு – பாடல் (03) உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை !
===============================================
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்
தவிரா ஈகைக், கவுரியர் மருக!
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந்திறல் கமழ்கடா அத்து
எயிறு படையாக எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கின்
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற் புலர்சாந்தின்
விலங்ககன்ற வியன்மார்ப!
ஊர்இல்ல, உயவுஅரிய,
நீர்இல்ல, நீள்இடைய,
பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கிற்
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்அது
முன்னம் முகத்தின் உணர்ந்தவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.
====================================
பொருளுரை
===============================
என்றென்றும் மாறாது
நிலைத்து நிற்கும் கடலை எல்லையாகக் கொண்ட உன் நாட்டிற்கு நிறைமதி வடிவில் உள்ள வெண்கொற்றக் குடையோடும், முரசின்
முழக்கத்தோடும் நாட்டை ஆளுகின்ற பரிவு மனமும் கொடைத் திறமும்
கொண்ட பாண்டியரின் வழித் தோன்றலே!
கற்புக்கரசியாம் பாண்டிய
நாட்டுப் பேரரசியின் மணவாளனே ! நெற்றியில் பொன்னாலாகிய
பட்டத்தை அணிந்த அழகும் வலிமையும்
மிக்கது உன் யானை !
அந்த யானை, தன் கொம்புகளைப் படைக்கருவியாகக் கொண்டு பகைநாட்டு மன்னர்களின் கோட்டை வாயிற் கதவுகளைக் குத்தி வீழ்த்தும் !
பூட்டப்பெற்ற, கவிழ்ந்த மணிகளையும் பெரிய தும்பிக்கையையும் உடைய அந்த யானையின்
பெரிய பிடரியின் (கழுத்தின்) மேல் அமர்ந்து, கூற்றுவனைப் போல் சளைக்காது,
போர் செய்யும் பெரும்புகழ் வாய்ந்த பாண்டியனே!
கால்களில்
பொன்னாலான கழல்களும், சந்தனம் பூசிய
பரந்து அகன்ற மார்பும் உடையவனே !
உன்னைக் காண்பதற்குப் புலவர்கள் வரும் வழியில்
ஊர்கள் ஏதுமில்லை; அது பொறுத்தற்கரிய
வருத்ததைத் தரும் நீரில்லாத நீண்ட வழி !
அவ்வழியே
வருவோரைத் தமது மறைவிடத்தில் அமைத்துக் கொண்டிருக்கும்
அரண்களின் உச்சியிலிருந்து குறி தவறாது அம்பு எய்யும் கள்வரின்
அம்புகளால் அடிபட்டு இறந்தவர்களின் உடல்களை மூடியிருக்கும் கற்குவியல்கள்
நிரம்ப உள்ளன !
கற்குவியலால் மூடியிருக்கும்
இறந்தோர் உடலைத் தின்ன முடியாமல் பருந்துகள் எல்லாம் இலவ மரத்தில் அமர்ந்து வருந்துகின்றன !
இலவ
மரங்கள் நிறைந்த கடத்தற்கரிய பல கிளைப் பாதைகள் வழியாக
உன்னைக் காண்பதற்கு இரவலர்கள் வருகின்றனர் !
வருவோரின் நிலையை
அவர்களது முகவாட்டத்தால் உணர்ந்து, அவர்களின் வறுமையைத் தீர்க்கும் வல்லமை உனக்கு
இருப்பதால்தான் பல இன்னல்களையும் கடந்து உன்னைக் காண அவர்கள் வருகிறார்கள்
!
ஆகவே,
உன்னைத் தாங்கி நிற்கும் நிலமே பெயர்ந்தாலும்,
நீ உன் சொல்லிலிருந்து என்றென்றும் மாறாமல் உன் உள்ளத்தின் உறுதியால் இரவலர்களைக் கைவிடாது இருப்பாயாக !
=================================
அருஞ்சொற்பொருள்:
==================================
உவவு
மதி = நிறைமதி ; ஓங்கல் = உயர்ந்த. வெண்குடை = வெண்கொற்றக்குடை; நிலவுதல் = நிலைத்திருத்தல்; வரைப்பு = எல்லை;
மண்ணகம் = உன் நாடு ; நிழற்றுதல் = பரிவு
காட்டுதல். ஏமமுரசம் = காவல் முரசம் ; இழுமென முழங்க = ஓசைஎழுப்ப . நேமி =
ஆட்சிச் சக்கரம்; உய்த்தல் = செலுத்தல்; நேஎ நெஞ்சு = பரிவு மனம் !
கவுரியர்
= பாண்டியன்; மருகன் = வழித்தோன்றல்; செயிர்
= குற்றம்; சேயிழை = சிறந்த அணிகலங்கள் அணிந்த பெண் ; பொன் ஓடை = பொன்னாலான நெற்றிப் பட்டம்; புகர் = புள்ளி; அணி நுதல் = ஒப்பனை செய்த நெற்றி; துன் = நெருங்கு; திறல் = வலிமை; கமழ்தல் = மணத்தல்; கடாஅம் = மதம்; எயிறு = யானைக்கொம்பு (தந்தம்) ; எயில் = மதில்; இடுதல் = குத்துதல் !
மருங்கு
= பக்கம் ; இரும் = பெரிய; பிடர் =
கழுத்தின் பின்புறம் ; மருந்து இல் = தீர்திறம் இல்லாத (பரிகாரமில்லாத) ; சாயா = சளைக்காத;
கருங்கை = வலிய கை; வழுதி = பாண்டியன் ; பெயரல் = மாறாதே; பொலம் = பொன்; புலர்தல் = உலர்தல். சாந்து = சந்தனம் ; விலங்குதல்
= விலகல்; வியன்மார்பு = அகன்ற மார்பு !
உயவு
= துன்பம் ; இடை = வழி ; பார்வல் = பகைவர் வரவைப்
பார்த்திருக்கும் அரண் உச்சி; கவிதல் = வளைதல். செம்மை = நன்மை, பெருமை, வளைவு இன்மை;
தொடை = அம்பெய்தல்; வன்கண் = கொடுமை; வம்பு = புதுமை; பதுக்கை = கற்குவியல் ; திருந்து = அழகிய ; சிறை = சிறகு; வளைவாய் = வளைந்த அலகு உடைய; பருந்து = கருடன் !
உயவும்
= வருத்தும் ; உன்ன
மரம் = இலவ மரம்; கவலை = பல தெருக்கள் கூடுமிடம், இரண்டாகப் பிரியும் பாதை ; நசை = விருப்பம் ; வேட்கை = அன்பு ; இரவலர் = பாணர், புலவர் போன்ற வறுமையில் வாடுவோர்
; வருவர் = உன்னை நாடி வருவார்கள்; முன்னம் முகத்தின் = அவர்களது முகவாட்டம் அறிந்து;
இன்மை தீர்த்தல் = வறுமையைத் தீர்த்தல் வன்மை = உன் வலிமையாகும் !
===============================================
ஆக்கம்
+ இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு;
2057, மடங்கல்
(ஆவணி)06]
(23-08-2026)
===============================================