விரும்பும் பதிவைத் தேடுக !

Wednesday, 26 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (08) வையம் காவலர் வழிமொழிந்து !

 

புறநானூறு – பாடல் (08). வையம் காவலர் வழிமொழிந்து

================================ 

பாடியவர்: 

================================

 

கபிலர்.  இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த திருவாதவூரில் பிறந்தவர், இவர் புறநானூற்றில் 28 பாடல்களையும் கலித்தொகையில் காணப்படும் குறிஞ்சிக் கலி எனப்படும் 29 செய்யுள்களையும் இயற்றியுள்ளார். கபிலர் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்கள்  இருந்ததாகத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர் !


================================
பாடப்பட்டோன்: 

================================

 

சேரமான் கடுங்கோ வாழியாதன். இவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும் அழைக்கப்பட்டான். பதிற்றுப்பத்தில், “ பொறையன் பெருந்தேவி ஈன்ற மகன்” என்று கூறப்படுவதிலிருந்து இவன் அந்துவஞ் சேரல் இரும்பொறைக்கும் பொறையன் பெருந்தேவிக்கும் மகனாகப் பிறந்தவன் என்பது தெரிய வருகிறது. இவன் 25 ஆண்டு காலம் சேர நாட்டை வெகு சிறப்பாக ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது !

================================
பாடலின் பின்னணி: 

================================

 

கதிரவனோடு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை ஒப்பிட்டு, கதிரவன் சேரமானுக்கு இணையானவன் இல்லை என்று இப்பாடலில் கபிலர் கூறுகிறார் !

 

===================================================

திணை: பாடாண். (ஒருவருடைய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது).

===================================================
துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆகும்.
(இயன் மொழி = இயல்பைக் கூறுதல்
பூவை நிலை = மனிதரைத் தேவரோடு உவமித்தல்)
===================================================


===============================================

புறநானூறு – பாடல் (08) வையம் காவலர் வழிமொழிந்து !

===============================================

 

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ, வீங்குசெலல் மண்டிலம்!
பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.

 

===============================
அருஞ்சொற்பொருள்:

===============================

வையம் = இவ்வுலகில் ; காவலர் = ஆளும் அரசர்கள் பலரும் ; சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை = சேரமன்னன் செல்வக் கடுங்கோவை ; வழிமொழிந்து ஒழுக = வழிபட்டு நிற்கையில் ; போகம் = இன்பம் வேண்டி பொதுச்சொல் பொறாஅது = இந்த உலகம் அனைவருக்கும் சொந்தமானது என்னும் கருத்தைப் பொறுத்துக்கொள்ளாமல் ;  இடம் சிறிது = தன்னுடைய நாடு சிறியது ; என்னும் ஊக்கம் துரப்ப = என்னும் எண்ணத்தால் முடுக்கப் பெற்று ;

 

ஒடுங்கா உள்ளத்து = பிற நாடுகளையும் போரிட்டுக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்னும் பெரு விருப்பத்தையும்  ; ஓம்பா ஈகைக் கடந்து = வறியவர்க்கு வரையாது கொடுக்கும் ஈகைக் குணத்தையும் ; அடு தானைச் சேரலாதனை = பகைவரைப் போரிட்டு  வெல்லும் பெரும்படையையும்  வைத்திருக்கும்   ; சேரலாதனை = மன்னன் சேரலாதனை ; வீங்கு செலல் மண்டிலம் = இரவு பகலென  ஓடிக்கொண்டே இருக்கும் கதிரவனே;

 

பொழுது என வரைதி = உனக்குப் பகல் இரவு என்ற எல்லை உண்டு;   புறக்கொடுத்து இறத்தி = பகல் முடிந்ததும் புறமுதுகிட்டு ஓடுவாய்; மாறி வருதி = இரவு பகல் என மாறி மாறி வருவாய்; மலைமறைந்து ஒளித்தி = மலைகளில் மறைந்து விடுவாய்; அகல்இரு விசும்பினானும் = அகன்ற, பெரிய ஆகாயத்தில் ;  பகல் விளங் குதியால் பல்கதிர் விரித்தே = பகலில் மட்டும் பல கதிர்களை விரித்து விளங்கும் நீ ; யாங்கனம் ஒத்தியோ = எவ்வாறு அவனுக்கு  ஒப்புமை உடையவன் ஆவாய் ?  .

 

===============================

பொருளுரை: 

===============================

 

வட்டவடிவமான பெரிய பாதையில் செல்லும் கதிரவனே!

உலகைக் காக்கும் மன்னர்கள் பலரும் வழிபட்டு நடக்க, இன்பத்தை விரும்பி, இவ்வுலகு அனைவருக்கும் பொது என்ற சொல் பொறுக்காமல், தன் நாடு சிறியது என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, தன் நாட்டை விரிவாக்க வேண்டும் என்னும் ஊக்கம் மிகு  உள்ளத்தையும், குறையாத ஈகையையும் பகைவரை வெல்லும் படையையும் உடையவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் !

 

உனக்குப் பகல் இரவு என்ற எல்லை வரையறை உண்டு; பகல் முடிந்ததும் புறமுதுகிட்டு ஓடுவிடுவாய்; காலையில் எழுவதும் மாலையில் மறைவதுமாய் மாறி மாறி வருவாய்; மலைகளில் மறைந்து விடுவாய்; அகன்ற, பெரிய ஆகாயத்தில் பகலில் மட்டும் பல கதிர்களை விரித்து விளங்கும் நீ த்தகைய குறைபாடுகளை உடைய நீ - எவ்வாறு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு நிகராவாய் ?

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)09]

(26-08-2026)

================================================

                                                   


புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) -(21) புலவறை இறந்த புகழ் சால் !

 

புறநானூறு – (21) புலவரை இறந்த புகழ்சால்

 

===============================

பாடியவர்: 

===============================

 

ஐயூர் மூலங்கிழார். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் ஐயூர் மூலம் என்ற ஊரைச் சார்ந்தவராதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்பாடலில், இவர் வேங்கை மார்பனை வென்ற கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியைப் புகழ்ந்து பாடியுள்ளார். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.

 


===============================

பாடப்பட்டோன்: 

===============================

 

 

கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி. கானப்பேர் என்னும் ஊர் தற்காலத்தில் காளையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. கானப்பேர் என்ற ஊர், வேங்கை மார்பன் என்ற மன்னனால் ஆட்சிசெய்யப்பட்டு வந்தது.

அது பல அரிய அரண்களை உடைய ஊராகச் சிறந்து விளங்கியது. அந்த அரண்களையெல்லாம் கடந்து, வேங்கை மார்பனை வெற்றி கொண்டதால் இப் பாண்டிய மன்னன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்ற பெயரால் சிறப்பிக்கப் பட்டான் !

 


===============================

பாடலின் பின்னணி: 

===============================

 

கானப்பேரெயிலின் அரண்களின் சிறப்பையும், அந்த ஊருக்கு உரியவனான வேங்கை மார்பன், உக்கிரப் பெருவழுதியிடம் தோல்வியுற்ற பிறகு, தன் ஊரை மீட்பது, உலையில் காய்ச்சிய இரும்பின் மீது சொரிந்த நீரை மீட்பது போன்ற அரிய செயல் என்று எண்ணி வருந்துவதாககவும் இப்பாடலில், ஐயூர் மூலங்கிழார் கூறுகிறார்.

 


===============================================
திணை: வாகை. (வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்) 

===============================================
துறை: அரசவாகை. (அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்)

===============================================


===============================================

புறநானூறு (21) புலவரை இறந்த புகழ்சால் !

===============================================

 

புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்
நிலவரை இறந்த குண்டுகண் அகழி,
வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்,
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்;
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிதுஎன
வேங்கை மார்பன் இரங்க, வைகலும்
ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே!
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்க நின் வேலே.

===============================
அருஞ்சொற்பொருள்:

===============================


புலவரை (புல + வரை) = அறிவின் எல்லை  ; இறந்த = கடந்த; புகழ்சால் = புகழ் மிகுந்த; தோன்றல் = அரசன் ; நிலவரை = நிலத்தின் எல்லை ; குண்டு = ஆழம்; கண் = இடம்.  வான் தோய்வு அன்ன = வானளாவிய ; புரிசை = மதில்;

 

விசும்பு = ஆகாயம் ; மீன் பூத்த அன்ன = வானத்து மீன்கள் காட்சி கொடுப்பதைப் போல ;  ஞாயில் = மதிலில் உள்ள அம்பெய்தற்குரிய துளை; கதிர் நுழைகல்லா = கதிரவனின் ஒளிக் கதிர்கள் நுழையமுடியாத அளவுக்கு ; மரம்பயில் = மரங்கள் செறிந்த; கடிமிளை = காவற்காடு ; அருங் குறும்பு = அருமையான அரண்; உடுத்த = சூழ்ந்திருக்க ; கானப் பேர் எயில் = கானப் பேர் நகரத்து அரணைக் கடந்து அதைக் கைப்பற்றுவது ;  கருங்கைக் கொல்லன் = இரும்பு வினைஞன் ; செந்தீ மாட்டிய ; உலையில் காய்ச்சிய ;

 

இரும்பு உண் நீரினும் =  பழுக்கக் காய்ச்சிய இரும்பில் பட்ட நீரைப் போல ; மீட்டற்கு அரிது = மீட்பதற்கு அரிய செயல் என்று  ; இரங்க = வருந்த; வைகலும் = நாளும் ; ஆடுகொளக் குழைந்த தும்பை = வெற்றிமேல் வெற்றி பெறுவதற்காக தும்பை மலர்கள் நிறைந்த மாலைகளை அணியும் பாண்டியனே ! ; புலவர் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே = புலவர் பாடும் புறத்திணைக்குரிய துறைகளில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளைச் செயலில் செய்து முடித்த வெற்றி வேந்தனே !;

இகழுநர் இசையொடு மாய = உன்னை மதியாத பகைவர்கள் தம்முடைய புகழுடன் அழிய ; புகழொடு விளங்கிப் பூக்க நின் வேலே ! = உன் வேல் புகழுடன் விளங்கி வெற்றியுடன் பொலிவதாக !


===============================
பொருளுரை

===============================

 

பாண்டிய வேந்தே ! உக்கிரப் பெருவழுதியே ! உன்னைப் பாடும் புலவர்களின் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட புகழமைந்த அரசே! நிலத்தின் எல்லையைக் கடந்த ஆழமான பாதாளத்தில் உள்ள அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் விண்மீன்கள் பூத்ததுபோல் காட்சியளிக்கும் அம்பு எய்தும் துளைகளும், கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாதவாறு மரங்கள் செறிந்த காவற் காடுகளும், அணுகுதற்கரிய சிற்றரண்களும் உடையது கானப்பேர். அத்தகைய அரண்களை யுடைய கானப்பேரை நீ வெற்ரிகொண்டாய் ! அதை உன்னிடமிருந்து மீட்பது, வலிய கையையுடைய கொல்லன், எரியும் தீயில் காய்ச்சிய இரும்பில் சொரியப்பட்ட நீரை மீட்பது எவ்வளவு அரிதோ அதைவிட அரிது என்று வேங்கை மார்பன் வருந்த, நாள்தோறும் வெற்றிமேல் வெற்றி பெறுவதற்காக தும்பை மலர்கள் நிறைந்த மாலைகளை அணிபவனே! பாண்டியனே !

 

புலவர் பாடும் புறத்திணைக்குரிய துறைகளில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளைச் செயலில் செய்து முடித்த வெற்றி வேந்தனே! உன்னை மதியாத பகைவர்கள் தம்முடைய புகழுடன் அழிய, உன் வேல் புகழுடன் விளங்கி வெற்றியுடன் பொலிவதாக !

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)09]

(26-08-2026)

================================================

 

                                                                 

 

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (25) மீன்திகழ் விசும்பின் பாயிருள் !

 

புறநானூறு – பாடல் (25) மீன்திகழ் விசும்பின் பாய்இருள் !

==============================

பாடியவர்: 

==============================

 

இப்பாடலைப் பாடியவர் கல்லாடனார். இவர் கல்லாடம் என்ற ஊரினராக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. புறநானூற்றில் இவர் ஐந்து செய்யுள்கள் (23, 25, 371, 385, 391). இயற்றியது மட்டுமல்லாமல், அகநானூற்றில் ஏழு செய்யுள்களையும் (9, 83, 113, 171, 198, 209, 333) குறுந்தொகையில் இரண்டு செய்யுள்களையும் (260, 269) இயற்றியுள்ளார் !

 

================================
பாடப்பட்டோன்: 

================================

 

இப்பாடலின் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். பாண்டிய நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்த மன்னர்களில் இவனும் ஒருவன். சிறுவதிலேயே பாண்டிய நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டப்பட்டவன். ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் ஏழு மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றதால் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான்.  இவன் சிறந்த அரசன் மட்டுமல்லாமல்  சிறந்த புலவனாகவும் திகழ்ந்தான் என்பது புறநானூற்றில் அவன் இயற்றிய பாடல் எண் 72 மூலம் தெரிய வருகிறது !

 

=============================
பாடலின் பின்னணி: 

=============================

 

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனோடு போரிடுகையில்  தோல்வியுற்ற சேரனும் சோழனும் இறந்தனர்; அவர்களின் படைவீரர்கள் பலரும் இறந்தனர். இறந்தவர்களின் மனைவியர் தம் கூந்தலைக் கொய்து கைம்மை நோன்பை மேற்கொள்ளும் அவலக் காட்சியைக் கண்டதும் நெடுஞ்செழியன் போரை நிறுத்தியதாக இப்பாடலில் கல்லாடனார் கூறுகிறார்.

 

=========================================
திணை: வாகை. (வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்)

========================================
துறை: அரசவாகை. (அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்)

======================================================


============================================
புறநானூறு- பாடல் (25) மீன்திகழ் விசும்பின் !

============================================

 

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
ஈண்டுசெலல் மரபின் தன் இயல் வழாஅது
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்கு
உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,
பிணியுறு முரசம் கொண்ட காலை
நிலைதிரிபு எறியத் திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ நின்வேல்; செழிய!
முலைபொலி அகம் உருப்ப நூறி,
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்,
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர்அறல் கடுக்கும் அம்மென்
குவைஇரும் கூந்தல் கொய்தல் கண்டே.

 

==============================
பொருளுரை: 

==============================

 

விண்மீன்கள் திகழும் ஆகாயத்தில் பரவிய இருள் அகல, வெப்பத்தையும் ஒளியையும் பொழியும்  கதிரவனும், பேரொளி தரும் திங்களும் வந்து நிலத்தில் இறங்கியதைப்  போல, சேர சோழ மன்னர்கள்  இருவரும் போர்க்களம் புகுந்தனர்.  உன்னை அழிக்கப் புகுந்த இருவரையும் போர்க்களத்தில் நிலைகலங்கச் செய்து நீ அழித்தாய். கொடிய அவர்களிடமிருந்து, வாரால் பிணிக்கப்பட்ட போர்முரசுகளைக் கைப்பற்றினாய்; நின்ற நிலையிலே நின்று, உன்னைச் சூழ்ந்த பகை வீரர்களைப் பிடித்துத் தூக்கியெறிந்தாய் ! இரு மன்னர்களை அழித்ததன்றி அவர்களின் படை வீரர்கள்  அணியையும் அழித்தொழித்தாய் !

 

செழியனே ! இந்தப் போரில் கணவனை இழந்த மகளிர், கருமணல் போன்று விளங்கும் தம் கூந்தலை அறுத்துக்கொண்டனர்.  துயரத்துடன் தம் முலைகள் பொலிந்த மார்பகங்களில்  அடித்துக்கொண்டனர்.


அதைக் கண்ணுற்ற  நீ போரை நிறுத்திவிட்டாய். அதனால்உன் வேல்கள் பகைவர்ளைத் தாக்க  மீண்டும் பயன்படுத்தப் படவில்லை. அதனால் அவை கூர் மழுங்கிச் சேதமடையாமல்  தப்பிவிட்டன !


 =============================

அருஞ்சொற்பொருள்:

=============================

================================

மீன் திகழ் விசும்பு = விண்மீன்கள் நிறைந்த ஆகாயம்; பாய் இருள் அகல =  = சூழ்ந்த இருள் அகலுமாறு ;  ஈண்டுசெலல் மரபின் = விரைந்து உலாவரும் மரபினில் ; வழாஅது = பிழையாது ; உரவுச் சினம் = வலிய வெயில் ; திருகிய = முறுகிய; உருகெழு ஞாயிறு = அச்சமூட்டும் கதிரவன் ; நிலவுத் திகழ் = ஒளி மிகுந்த ; மதியமொடு = நிறைமதியொடு ; நிலம் சேர்ந்தாங்கு = பூமிக்கு வந்ததைப் போல ; உடலருந் துப்பின் = போரிடும் வலிமையோடு ; ஒன்று மொழி வேந்தரை = பாண்டியனைத் தோற்கடிப்போம் என்று சூளுரை வஞ்சினம்) கூறிய (சேரன், சோழன் ஆகிய) இரு வேந்தர்களும் ; அணங்கரும் = இறந்துபட ; பறந்தலை = போர்க்களம்; உணங்கல் பண்ணி = சிதறிய தசைத் துண்டங்கள் உலர்ந்து போக வைத்தாய் ; பிணியுறு முரசம் கொண்ட காலை = வாரால் பிணிக்கப்பட்ட போர் முரசுகளை கைப்பற்றிய போது ;  திண்மடை கலங்கி = வலிமையான போர்க்கருவிகளின் மூட்டுகள் சிதைந்து அழிந்தன ; முலைபொலி அகம் உருப்ப = பொலிவான மார்பகம் ; உருத்தல் = வெப்பமடையும் வகையில் ; நூறி = மார்பில் அடித்துக்கொண்டார்கள் ; ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர = போரில் கணவரை இழந்த மகளிர் எல்லாம் கைம்மையின் அடையாளமாய் ; அவிர் அறல் கடுக்கும் = ஒளிமிகுந்த கருமணல் போன்ற குவை இரும் கூந்தல் கொய்தல் கண்டே = தங்கள் கூந்தலை அறுத்துக்கொள்வதைக் கண்டு ; (போரை நீ நிறுத்தியதால்) நின் வேல் சிதைதல் உய்ந்தன்று = உன்னுடைய வேல் கூர்மை மழுங்காமல் தப்பியது !

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)09]

(26-08-2026)

================================================