விரும்பும் பதிவைத் தேடுக !

Monday, 29 November 2021

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (28) சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் !

 

கூனும் குறளும் ஊமும் செவிடும் !

பாடலின் பின்னணி: உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் புலவர் இப்பாடலின் வழி  சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார். அவர் கூறுவதைக் கேளுங்கள் !

-----------------------------------------------------------------------------------------

 

மன்னவா ! இந்த உலகில் கூன், குருடு, செவிடு, ஊமை போன்ற குறைகளுடன் பிறப்பவர்களின் வாழ்க்கை துன்பமயமானது; பயனில்லாதது !   நல்வாய்ப்பாக நீ அத்தகைய குறைகளுடன் பிறக்கவில்லை !

 

உன் பகைவர்களோ  உன் வீரத்தையும் வலிமையையும் கண்டு பயந்து காட்டில் ஒளிந்து வாழ்கிறார்கள் ! உன் நாடு அனைத்து வளங்களும் நிறைந்து செழுமையாக  உள்ளது ! 

 

ஆகையால்,  உன் செல்வத்தை அறம், பொருள் இன்பம் ஆகிய உறுதிப் பொருட்களை அடைவதற்குப் பயன்படுத்த வேண்டும்;   அதுதான் உனக்கு  வலிமை தரும் ; நீ உன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அதுவே ஏற்ற வழியாகும் ”!

------------------------------------------------------------------------------------------

இதோ அந்தப் பாடல் !

------------------------------------------------------------------------------------------

புறநானூறு, பாடல் எண்: (28)

-------------------------------------------------------

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்

கூனும் குறளும் ஊமும் செவிடும்

மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு

எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்

பேதைமை அல்லது ஊதியம் இல்லென

முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,

அதன்திறம் அத்தையான் உரைக்க வந்தது

வட்ட வரிய செம்பொறிச் சேவல்

ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்

கானத் தோர்நின் தெவ்வர்; நீயே

புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்

புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்

பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்

ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே;

அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்

ஆற்றும் பெருமநின் செல்வம்;

ஆற்றாமை நின் போற்றா மையே.

------------------------------------------------------------------------------------------

பொருளுரை: 

 ------------------------

சிறப்பில்லாத பார்வைக் குருடு, உறுப்புகள் குறைந்த  முழுமையற்ற மேனி, கூன் விழுந்த முதுகு, உயரம் குறைந்த  குள்ள உருவம் , வாய் பேச முடியாத ஊமை, கேட்கும் திறன் இழந்த செவிடு, விலங்குத் தோற்றமுள்ள வடிவம், பகுத்தறியும் திறனற்ற அறிவு மயக்கம், ஆகிய எட்டுவகைக் குறைகளுள்ள மனிதப் பிறவிகள் துன்பமயமானவை; பயனற்றவை என்று பல்வேறு அறிஞர்கள் முன்னரே கூறியுள்ளனர். நான் சொல்ல விரும்புவது  அவற்றைப் பற்றியன்று ! வேறு !  அதாவது பயனுள்ள பிறவி  எது  என்பதைப்  பற்றி !

 

வளைந்த கோடுகளையும், சிவந்த புள்ளிகளையும் உடைய சேவற் கோழிகள் அன்றாடம் கூவித் தினைப்புனம் காப்பவர்களைத் துயில்  எழுப்புகிறது . அந்தத் தினைப் புனங்களை அடுத்துள்ள காடுகளில் உன் பகைவர்கள் உனக்கு அஞ்சி ஒளிந்து வாழ்கிறார்கள். நீயோ அனைத்து வளங்களும் நிறைந்த  நாட்டில் மன அமைதியுடன் வாழ்கிறாய் !

 

உன் நாட்டில், கரும்பு விளையும் வயல்கள் நிரம்ப உள்ளன. வயலைச் சுற்றி வேலிகளும் உள்ளன.  வேலிக்கு வெளியே இருப்பவர்கள் சுவைப்பதற்குக் கரும்பு வேண்டும் என்று கேட்கிறார்கள்;  வயலில் இருப்பவர்கள் கரும்புகளைப் பிடுங்கி  அவர்களிடம் எறிகிறார்கள். அவர்கள் எறியும் கரும்புகளின் உடைந்த துண்டுகள், அருகில் உள்ள குளத்தின்  தாமரை மொட்டுகளின் மீது விழுவதால் அம்மொட்டுகள் காம்பிலிருந்து விடுபட்டுச் சிதறிக் கிடக்கின்றன !

 

இந்தக் காட்சியைப் பார்த்தால், கழைக்கூத்தர்கள் ஆடும் களத்தில் பூக்கள் சிதறிக் கிடப்பதுபோல் உள்ளது. நீ இத்தகைய  நில வளமுடைய நாட்டை உடையவன். அதனால், உன் செல்வத்தை நல்வழியில் செலவிடுவாயாக !   அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் நீ அடைவதற்கு உன் செல்வம்  பயன்படட்டும். இதுவே உனக்குப் பாதுகாப்பு நிறைந்த அரணாகத் திகழும். தவறினால் , நீ உன்னையே பாதுகாத்துக்கொள்ளத்  தவறியவன் ஆகிவிடுவாய் !  அந்தத் தவற்றைச் செய்யாதே !

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------

 

சிதடு = பார்வைக் குருடு; பிண்டம் = தசை; கூன் = வளைந்த முதுகு ;  குறள் = குட்டை வடிவு  (குள்ள மனிதன்); ஊம் = வாய் பேச முடியாத ஊமை;  மா = விலங்கு; மருள் = அறிவு மயக்கம் ; உளப்பாடு = உள்ள தன்மை;  எச்சம் = குறைபாடு;  பேதைமை = பேதைத் தன்மையுடைய பிறப்பு; ஊதியம் = பயன்; திறம் = கூறுபாடு, தத்துவம்; அத்தை = அன்று; வரி = கோடு; பொறி = புள்ளி; ஏனல் = தினைப்புனம்; கூஉம் = கூவுதல் ; கானத்தோர் = கானகத்தில் உள்ளோர்;  தெவ்வர் = பகைவர்கள்; புறஞ்சிறை = வேலிக்கு வெளியே; அகத்தோர் = வேலிக்கு உள்ளிருப்போர்; புய்த்தல் = பிடுங்கல், பறித்தல்; கழை = தண்டு, கழி;  போது = மலரும் பருவத்திலுள்ள மொட்டு;  கடுக்கும் = ஒக்கும்;  அகநாடு = மருத நிலம்; ஆற்றும் = உன் செல்வம் பயன்படட்டும்; ஆற்றாமை = அப்படிப் பயன்படுத்தாவிட்டால்; போற்றுதல் = பாதுகாத்தல்.

------------------------------------------------------------------------------------------

சிறப்புக் குறிப்பு: 

-------------------------------

 

இப்பிறவியில் செல்வத்தைப் நல்வழியில் பயன்படுத்த வேண்டும். அறவழிகளைக் கடைப்பிடித்துப் பொருள் ஈட்டி, இன்பம் துய்த்து வாழ வேண்டும். இவ்வாறு வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டால்,  மறுபிறவில் குருடு, கூன், ஊமம், செவிடு போன்ற குறைகள் இல்லாமல் நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று மறைமுகமாகப் புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.


-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

புறநானூறு  வலைப்பூ.

[தி.பி:2052, நளி (கார்த்திகை) 13]

(29-11-2021)

-----------------------------------------------------------------------------------------

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்


 

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (27) சேற்று வளர் தாமரை !

பண்டைத் தமிழகத்தின் தானியங்கி வானூர்தி !

-------------------------------------------------------------------------------------

வலவன் ஏவா வானவூர்தி [PILOTLESS AEROPLANE] என்னும் புறநானூற்றுப் பாடல் வரி, பண்டைத் தமிழனின் அறிவியல் வல்லமையை உலகுக்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. வலவன் என்பது ஊர்தி இயக்குபவரைக் குறிக்கும் சொல். வானவூர்தி என்பது வான் வழியாக இயக்கப்படும் ஊர்தி. இக்காலத்தில் “ஏரோப்பிளேன்” என்று சொல்கிறோமே, அதைத்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் “வானவூர்தி” என்று அழகாகத் தமிழில் சொன்னார்கள் !

 

அந்த வானவூர்தி எப்படிப்பட்டது தெரியுமா ? இயக்குவதற்கு வலவர்  [PILOT] இல்லாமல் தானே செல்லக் கூடிய ஊர்தி. ஊர்திக்குள் அமர்ந்து இயக்காமல், இந்தக் காலத்தில் ஊர்தியை இயக்குபவர் தரையிலிருந்தே கட்டளைக் கருவி [REMOTE CONTROL] மூலம் ஊர்தியை இயக்குவதைப் போல, பண்டைக் கலத்தில் வானவூர்தி இருந்திருக்கிறது என்னும் உண்மை புறநானூற்றுப் பாடல் (27) மூலம் தெள்ளிதின் விளங்குகிறது. பாடலைப் பார்ப்போமா !

-------------------------------------------------------------------------------------

புறநானூறு - பாடல் (27)

-------------------------------------------------------------------------------------

 

சேற்றுவளர்  தாமரை  பயந்த  ஒண்கேழ்

நூற்றிதழ் அலரின்  நிரைகண்  டன்ன,

வேற்றுமை  இல்லா  விழுத்திணைப் பிறந்து,

வீற்றிருந்  தோரை  எண்ணுங்  காலை,

உரையும்  பாட்டும்  உடையோர் சிலரே;

மரையிலை  போல  மாய்ந்திசினோர்  பலரே;

புலவர் பாடும்  புகழுடையோர்  விசும்பின்

வலவன்  ஏவா  வான  வூர்தி

எய்துப  என்பதம்  செய்வினை  முடித்தெனக்

கேட்பல்;  எந்தை !  சேட்சென்னி !  நலங்கிள்ளி !

தேய்தல் உண்மையும்  பெருகல் உண்மையும்

மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்

அறியா  தோரையும் அறியக்  காட்டி,

திங்கள் புத்தேள்  திரிதரும்  உலகத்து,

வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்,

வருந்தி வந்தோர்  மருங்கி நோக்கி,

அருள  வல்லை ஆகுமதி; அருளிலர்,

கொடாஅமை  வல்லர்  ஆகுக;

கெடாஅத துப்பினின்  பகையெதிர்ந்  தோரே !

-------------------------------------------------------------------------------------

பொருள்:-

-----------------

தாமரையின் இதழ்கள் போல இலங்கி, வேற்றுமை விலக்கி, உயர்ந்த குடியிற் பிறந்து, இந்த மண்ணை ஆண்ட அரசர்களை எல்லாம் எண்ணுங்கால், புகழும், புலவர்களால் பாடப்பெற்ற மாண்பும் உடையோர் மிகச் சிலரே ஆவர்; தாமரை இலைகளைப் போல் பயனின்றி மாண்டு போனோர் பலர் ஆவர் !

 

புலவர்களால் பாடப்பெறும் நல்லியல்பும், புகழும் உடையோர், பூவுலகை விட்டு வானுலகு செல்கையில், வானவர்களின் வரவேற்பைப் பெற்று, வலவன் இல்லாத வானவூர்தியில் அழைத்துச் செல்லப்படுவர் என்று ஆன்றோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன் !

 

என் தலைவனே ! சென்னியே ! நலங்கிள்ளியே ! இந்த உலகில் செல்வம் படைத்தவன் ஏதிலி ஆவதும், ஏதுமற்றவன் செல்வந்தன் ஆவதும், பிறந்தவை மடிவதும், மடிந்தவை மீண்டும் பிறப்பதும் நிலைபெற்ற உண்மை ஆகும் !

 

இந்த உண்மைகளை உணர்த்துவதற்கு அல்லவோ திங்கள் என்னும் தெய்வம்  தேய்வதும் வளர்வதும், மறைவதும், எழுவதுமாக வானில் வலம் வருகிறது !

 

இந்த உலகில் வல்லமை இல்லாதவர், அல்லது வல்லுநர் யாரேயாயினும் வறுமையால்  வாட்டமுற்று வரும்போது அவர்களுக்கு அருள் செய்யும் நீ வழங்குதலில் வல்லவன் ஆவாய் !

 

மிகுந்த வலிமையை உடையவன் நீ ! உன் பகைவர்கள் அருள் இல்லாதவராய் இரவலர்க்கு வழங்காமல் கருமித்தனம் கட்டுவதில் வல்லவர்களாய் ஆகட்டும் !

-------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

--------------------------

சேற்று வளர் தாமரை = சேற்றிலே வளரும் தாமரை ; பயந்த = விளைந்த ; கேழ் = ஒளி ; ஒண் = பொருந்திய ; நூற்று இதழ் = நூற்றுக்கணக்கான இதழ்கள் ; அலரின் நிரை = பூக்களின் அணி வகுப்பு ; கண்டு அன்ன = பார்ப்பதைப் போல ; வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து = வேற்றுமை இல்லாத உயர் குடியிலே பிறந்து ; வீற்றிருந்தோரை எண்ணும் காலை = மன்னர்களாக இருந்தவர்களை நினைத்துப் பார்க்கையில் ; உரையும் பாட்டும் உடையோர் சிலரே = புகழும், புலவர்களால் பாடப்பெறும் மாண்பும் உடையவர்களாய் இருந்தவர்கள் மிகச் சிலரே ஆகும் !

 

மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே = தாமரை இலை போலப் பயனின்றி மாண்டு போனோர் பலர் ஆகும் ; புலவர் பாடும் புகழுடையோர் = புலவர்களால் புகழ்ந்து பாடப்பெறும் நல்லியல்புகள் உடையோர் ; தாம் செய்வினை முடிந்து = நற்செயல்களை ஆற்றி பூவுலக வாழ்வை நீத்து ; வலவன் ஏவா வானவூர்தி = இயக்குபவர் யாருமின்றித் தானே இயங்கும் வானவூர்தி வந்து ; விசும்பின் எய்துப என்ப = வானுலகம் அழைத்துச் செல்லும் என்று ; கேட்பல் = கேள்விப்பட்டிருக்கிறேன் ; எந்தை = என் தந்தை போன்றவனே ! ; சேட் சென்னி = சேட் சென்னி என்னும் சோழ மன்னனே ! ; நலங்கிள்ளி =  நலங்கிள்ளியே !

 

தேய்தல் உண்மையும் = செல்வந்தனும் வறியவன் ஆவதுண்டு என்னும் உண்மையும் ; பெருகல் உண்மையும் = வறியவனும் செல்வந்தன் ஆவதுண்டு என்னும் உண்மையும் ; மாய்தல் உண்மையும் = பிறந்தவை அனைத்தும் ஒரு நாள் மாண்டு போகும் என்னும் உண்மையும் ; பிறத்தல் உண்மையும் = மாண்டவை எல்லாம் மீண்டும் பிறப்பதுண்டு என்னும் உண்மையும் ; அறியாதோரையும் அறியக் காட்டி = அறியாதவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் ; திங்கள் புத்தேள் = திங்கள் என்னும் தெய்வம் ; உலகத்து திரிதரும் = இந்த வையகத்தில் வானில் வலம் வருகிறது !

 

வல்லார் ஆயினும் = வலிமை இல்லாதவர் ஆயினும் ; வல்லுநர் ஆயினும் = வல்லமை உடையவர்கள் ஆயினும் ; வருந்தி வந்தோர் = வறுமையுற்று உடல் நலிந்து வந்தவர்கள் ; மருங்கு நோக்கி = வயிற்றுப் பசியைப் பார்த்து ; அருள் = அருள் செய்வதில் ; வல்லை = வலிமை உடையவன் ; ஆகுமதி = ஆகிடுவாய் !

 

நின் கெடாத துப்பின் = அழியாத உன் வலிமையை ; பகை எதிர்ந்தோரே = எதிர்கொள்ளும் பகைவர்கள் ; அருள் இலர் = அருள் இல்லாமையில் ; கொடாஅமை = வறிவர்க்குப் பொருள் கொடுக்காமல் இருக்கும் கஞ்சத்தனத்தில் ; வல்லர் ஆகுக = வல்லவர்கள் ஆகட்டும் !

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை :-

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

புறநானூறு வலைப்பூ,

[ தி.பி :2052, நளி (கார்த்திகை),13]

{29-11-2021}

 --------------------------------------------------------------------------------------

புறநானூறு (27)