விரும்பும் பதிவைத் தேடுக !

Sunday, 30 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (91) வலம்படு வாய்வாள் ஏந்தி !

 

புறநானூறு .பாடல். (91). வலம்படு வாய்வாள் ஏந்தி !

 

=============================

பாடியவர்: 

=============================

 

ஔவையார். ஔவையார் என்னும் பெயரில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59  எண் உள்ளன. அவற்றில்  புறத்திணைப் பாடல்கள் 33.  ஏனைய  26 அகத்திணைப் பாடல்கள். அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார் !

 

 

=============================

பாடப்பட்டோன்: 

=============================

 

அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை (இப்பொழுது தருமபுரி என்று வழங்கப்பெறுகிறது) ஆண்ட சங்க கால மன்னர்களுள் ஒருவர். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூ பெயர். 'அதியமான்' என்பது 'அதியர் கோமான்' என்பதன் மரூ பெயர்.  அஞ்சி என்பது இவரது இயற்பெயர். இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு  தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர் !

 

=============================

திணை: பாடாண்.

துறை: வாழ்த்தியல்

=============================

 

=============================

பாடல் பின்னணி: 

=============================

 

தன்னுடைய நாட்டில், ஒருமுறை அதியமான், உயர்ந்த மலைப்பிளவு ஒன்றில் உள்ள நெல்லி மரத்தின் இனிய கனி ஒன்றைப் பறித்துக்கொண்டு வந்தான்.  அதை உண்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என அறிந்தான். தான் அதை உண்ணாது, ஒளவையாருக்கு அதைக் கொடுத்து உண்ணச் சொன்னான் !  அவந்து உயர்ந்த உள்ளத்தை உணர்ந்து, அவனைப் புகழ்ந்து ஒளவைப் பெருமாட்டி இயற்றிய பாடல் இது !

 

===============================================

 புறநானூறு .பாடல். (91). வலம்படு வாய்வாள் ஏந்தி !

 ===============================================


வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடி தடக்கை,
ஆர்கலி நறவின் அதியர் கோமான்!
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி 
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும ! நீயே தொன் நிலைப்
பெருமலை விடர் அகத்து அரு மிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கிச் 
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே.

 

 

=============================

சொற்பொருள்: 

=============================

 

வலம்படு வாய்வாள் ஏந்தி = வெற்றி ஈட்டித் தரும் குறி தவறாத வாளை எடுத்து ;  ஒன்னார் களம் படக் கடந்த = பகைவர்கள் போரில் தோற்கும்படி வென்ற ;  கழல் தொடி தடக்கை = வீர வளை அணிந்த பெரிய கை ;  ஆர்கலி நறவின் அதியர் கோமான் = வெள்ளம் போல்  தேன் சொரியும் மலைகளின் அதியர் தலைவனே ;  

 

போர் அடு திருவின் =  போரிட்டு வென்று கொண்டு வந்த  ; பொலந்தார் அஞ்சி =  பொன்னால் செய்யப்பட்ட மாலையை அணிந்திருக்கும் அதியமான் நெடுமான் அஞ்சியே ; பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி = அரை வட்ட வடிவான  பிறை நெற்றியும், அழகிய தலையும்  உடையவனே  ;  

 

தொன் நிலைப் பெருமலை விடர் அகத்து =  பழமையான மலையின் பெரிய  பிளவின் ; அரு மிசை கொண்ட  = உச்சியில் உள்ள ;  சிறியிலை நெல்லித் தீங்கனி =  சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனி ; குறியாது ஆதல் =  பெறுவதற்கு அரிது என்று கருதாது ;  

 

நின் அகத்து அடக்கி = உனக்குள்ளேயே அந்த உண்மையை மறைத்து வைத்துக் கொண்டு  ;  சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே = உண்டு, இறப்பின்றி உயிர் வாழும் இந்த அரிய நெல்லிக் கனியை எனக்கு அளித்தாயே ;

 

நீலமணி மிடற்று ஒருவன் போல =  நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையுடைய சிவன் போல ;  மன்னுக பெரும நீயே =  இவ்வுலகில் என்றென்றும் நிலைபெற்று  நீ வாழ்வாயாக !

 

=============================

பொருளுரை: 

=============================

 

வெற்றி ஈட்டித் தரும் குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போரில் தோற்கும்படி வென்ற, வீரக் கழல்களை  அணிந்தவனே ! வெள்ளம் போல்  தேன் சொரியும் மலைகளின் அதியர் தலைவனே; போரிட்டு வென்று கொண்டு வந்த பொன்னால் செய்யப்பட்ட மாலையை அணிந்திருக்கும் அதியமான் நெடுமான் அஞ்சியே !  

 

பிறை போன்ற நெற்றியும், அழகிய தலையும்  உடையவனே ! பழமையான மலையின் உச்சியில் உள்ள சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனி பெறுவதற்கு அரிது என்று கருதாது, அதை உண்போர்க்கு இறப்பு இல்லை என்னும் உண்மையை    உனக்குள்ளேயே மறைத்து வைத்துக் கொண்டு இந்த அரிய நெல்லிக் கனியை எனக்கு அளித்தாயே ! என்னே உன் உளப்பாங்கு !

 

நீலமணியைப் போன்ற கறையுள்ள கழுத்தையுடைய சிவனைப் போல நீ இவ்வுலகில் என்றென்றும் நிலைபெற்று  வாழ்வாயாக !

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)13]

(30-08-2026)

================================================




 

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (87) களம் புகல் ஓம்புமின் !

 

புறநானூறு -பாடல்.  (87) களம் புகல் ஓம்புமின், தெவ்விர் ! 

=============================

பாடியவர் 

=============================

ஔவையார். ஔவையார் என்னும் பெயரில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59  எண் உள்ளன. அவற்றில்  புறத்திணைப் பாடல்கள் 33.  ஏனைய  26 அகத்திணைப் பாடல்கள். அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார் !

 

==============================

பாடப்பட்டோன் 

==============================

அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமான் நெடுமான் அஞ்சி  தகடூரை (இப்பொழுது தர்மபுரி என வழங்கப்படுகிறது) ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவர். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூ பெயர். 'அதியமான்' என்பது 'அதியர் கோமான்' என்பதன் மரூ பெயர்.  அஞ்சி என்பது இவரது இயற்பெயர்.[1] இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு  தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர் !

=============================

திணை: தும்பை.

துறைதானை மறம்

==============================

பாடலின்  பின்னணி:  

==============================

அதியமானின் எதிரிகள் அவனோடு போர் செய்யத் திட்டமிட்டனர்.  அதை அறிந்த ஔவையார் அவர்களிடம் சென்று அதியமானின் வலிமையைப் புகழ்ந்து, போர் செய்வதைத் தவிருங்கள் என்று மறைமுகமாக அறிவுரை கூறுவதை நாம் இப்பாடலில் காணலாம்.

 

======================================

புறநானூறு (87) களம் புகல் ஓம்புமின் !

=======================================

 

களம் புகல் ஓம்புமின், தெவ்விர் ! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே.


=============================

சொற்பொருள்:   

=============================

 

களம் = போர்க்களம் ; புகல் = புகுதல் ; ஓம்புமின் = பாதுகாத்துக் கொள்ளுங்கள் ; (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி) ; தெவ்விர் = பகை மன்னர்களே ;  போர் = போர் செய்ய ; எதிர்ந்து = எதிர்த்து ; எம்முளும் = எங்கள் நாட்டிலும் ; உளன் = உள்ளான் ; ஒரு பொருநன் = ஒரு போர் வீரன் ; வைகல் = நாளும் ; எண் தேர் = எட்டுத் தேர்கள் ; செய்யும் = செய்யும் திறன் கொண்ட ; தச்சன் = மரக் கலைஞன் ; திங்கள் = மாதம் ; வலித்த = கருத்துடன் செய்த ; கால் =  தேர்ச் சக்கரம் ; அன்னோனே = போன்றவன் ;

=============================

பொருளுரை:  

=============================

 

அதியமானுடன் பகை பாராட்டும்  மன்னர்களே !  அவனுடன் போர் புரிவதைத்  தவிருங்கள்.  ஏனெனில், எதிர்த்துப் போரிடும் வீரன் ஒருவன் எங்கள் நாட்டிலும் இருக்கிறான்.   ஒரே நாளில் எட்டு வலிமையான தேர்களைச் செய்யும் திறனுடைய  ஒரு தச்சன் , ஒரு மாதம் கண்ணும் கருத்துடன் உழைத்துச் செய்த நேர்த்தியான தேர்ச்சக்கரம் போன்ற பெரும் வலிமை உடையவன்  அவன்.

===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)13]

(30-08-2026)

================================================


புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (84) என்னை புற்கை உண்டும் !

 

புறநானூறு (84) என்னை, புற்கை உண்டும்  பெருந் தோளன்னே !

 

=============================

பாடியவர்: 

=============================

 

பெருங்கோழி நாய்கன்  மகள்  நக்கண்ணையார்,  பெருங்கோழி நாய்கனுக்கு மகளாக, திருச்சியின் ஒரு பகுதியாக இன்று விளங்கும் உறையூரில் நக்கண்ணையார் பிறந்தார். சோழ நாட்டுத் தலைநகர்களுள் ஒன்றான உறையூருக்கு கோழி என்ற பெயரும் உண்டு. நாய்கன் என்பது கடல் வாணிகம் செய்யும் இனத்தார் வைத்துக் கொள்ளும் பெயர். நக்கண்ணையார்  புறநானூற்றில்  83, 84, 85 ஆகிய இலக்கங்கள் உடைய  பாடல்களும்,  அகநானூற்றில்  252 - ஆவது பாடலும், நற்றிணையில் 19- ஆவது பாடலும் என மொத்தம் ஆறு பாடல்கள் பாடியுள்ளார்!

 

=============================

பாடப்பட்டோன்: 

=============================

 

சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி, இவர் சங்க காலத்து முற்காலச் சோழ மன்னர்களுள்  மிக முகாமையான, வீரம் செறிந்த  ஒரு பேரரசன் ஆவார். இவருடைய  பெயரில் உள்ள  போர்வை என்பது, இவரது அரசாட்சிக்கு  உட்பட்ட நிலப்பகுதியின் தலைநகரான “போர்வை” என்னும் ஊரைக் குறிப்பதாகும். (திருச்சி)  உறையூரிலிருந்து  கருவூர் செல்லும் வழித்தடத்தில் உள்ள “பெட்டவாத்தலை” என்னும் ஊரின் பழைய பெயரே “போர்வை”.

 

சங்க இலக்கியமான புறநானூற்றில் இவரைப் பற்றியும்,  இவருடைய அஞ்சாத போர்த்திறன், மற்றும் மற்போர் திறமையைப் பற்றியும் பல பாடல்கள் விரிவாகப் பேசுகின்றன !

 

==================================

திணை: கைக்கிளை (ஓருதலைக் காதல்)

துறை: பழிச்சுதல் (போற்றுதல்)

===================================


==================================================

புறநானூறு (84)  என்னை புற்கை உண்டும் !

===================================================

என்னை புற்கை உண்டும் பெருந்தோளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே;
போர் எதிர்ந்து என்னை போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு 
உமணர் வெரூஉம் துறை அன்னன்னே !

 

===============================================

=============================

சொற்பொருள்:   

=============================

 

என் ஐ புற்கை உண்டும் = என்னுடைய தலைவனான சோழ மன்னன்   போர்வைக் கோப்பெருநற்கிள்ளி கஞ்சியை உண்டாலும்; பெருந்தோளன்னே = பெரிய தோளினை டைய வீரன் ; யாமே = நானே புறஞ்சிறை இருந்தும் = அவன் இருக்கும் அரண்மனையின் புறப்பகுதியில் வெகு  தொலைவில் இருந்தும் ; பொன் அன்னம்மே = உடலெல்லாம் பொன் வண்ணப் பசலை பூத்தவளாக உள்ளேன் ; (அன்னம்மே – தன்மைப் பன்மை, செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது);  போர் எதிர்ந்து என் ஐ போர்க்களம் புகினே = போரை ஏற்று என் தலைவன் போர்க்களத்திற்குச் சென்றால் ; கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்  பெரும் ஆரவாரத்தையுடைய விழாக்கள் கொண்ட ஊரிடத்தில் ; (கல்” என்பது  – ஒலிக்குறிப்பு);  ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு = தங்கள் வீரம் பற்றிப் பேசி  செருக்குற்று மகிழ்ந்த பகை நாட்டு வீரர்களுக்கு உமணர் வெரூஉம் துறை அன்னன்னே = உப்பு வணிகர்கள் அஞ்சும் கடப்பதற்கரிய வழிக் கடவைகள் உடைய நீர்த் துறையைப் போன்று இடர்தரும் வலிமை மிக்கவன்.  

=============================

பொருளுரை:  

=============================

 

என்னுடைய தலைவன் சிறந்த உணவுகளைத் தவிர்த்து, எளிமையான கஞ்சியை உண்டாலும் கூட, பெரிய தோளினையுடைய  வீரன்.   அவன் மீது காதல் கொண்டுள்ள நான், அவன் இருக்கும் “போர்வை” அரண்மனைக்கு வெளியே வெகுதொலைவில் "உறையூரில்”  வாழ்ந்தாலும், அவன் நினைவால் உடலில் பசலை படர்ந்தவளாக உள்ளேன்.  போரை எதிர்கொள்ளும் போது அதை ஏற்று, அவன் போர்க்களத்தை அடைகையில்   பெரும் ஆரவாரம் நிறைந்த  ஊர்ப்புறத்தில் தங்கள் மறம் பேசி மகிழ்ந்து செருக்கடையும்  அவனது பகைநாட்டு வீரர்களுக்கு, அவன் உப்பு வணிகர்கள் அஞ்சும் இடர்மிகுந்த ஏற்றத் தாழ்வு உடைய நீர்த் துறையைப் போன்று அச்சம் தருபவனாக விளங்குகிறான்  !

 

உப்பு வணிகர்கள் தங்களது வண்டிகளில் உப்பை ஏற்றிச் செல்லும்போது, வழியில் இருக்கும் ஆழமான அல்லது சேறு நிறைந்த நீர்நிலைக் கடவைகளைக் (துறை) கடக்க மிகவும் அஞ்சுவார்கள். ஏனெனில், வண்டியில் தண்ணீர் புகுந்தால் ஏற்றி வந்த உப்பு முழுவதும் கரைந்து வீணாகிவிடும். அதுபோல் போர்க்களத்தில் செருக்குடன் வரும் பகை வீரர்களுக்கு, இந்தத் தலைவன் (கிள்ளி) உமணர்கள் அஞ்சும் அந்த ஆபத்தான நீர்நிலைத் துறை போல விளங்குகிறான். அவனிடம் மோதினால் பகைவர்கள் முற்றிலும் அழிந்து போவார்கள் என்பதை விளக்க இந்த உவமை கையாளப்பட்டுள்ளது !


 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)13]

(30-08-2026)

================================================