விரும்பும் பதிவைத் தேடுக !

Monday 6 December 2021

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (47) வள்ளியோர்ப் படர்ந்து !

புள்ளின் போகி, நெடிய என்னாது !

 ----------------------------------------------------------------------------------------------                               

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என இரு சோழ மன்னர்கள், சோழ நாட்டின் இருவேறு பகுதிகளை ஆண்டு வந்தனர்.  இருவருக்கும் இடையே நட்பு   மலரவில்லை;  பகைமைதான்  பற்றிப் படர்ந்து  வந்தது !

 

இந்தச் சூழ்நிலையில்  நலங்கிள்ளியின் நாட்டைச் சேர்ந்த  இளந்தத்தன் என்னும் புலவர்  நெடுங்கிள்ளி நாட்டின் தலைநகரான உறையூருக்கு  வருகிறார்.  இதைக் கண்ணுற்ற மனக்கோட்டம் கொண்ட சில மனிதர்கள், மன்னன் நெடுங்கிள்ளியிடம் சென்று இளந்தத்தன் வருகை பற்றித் திரித்துக் கூறுகின்றனர் !  அவன் நம் பகை நாட்டைச் சேர்ந்த ஒற்றனாக இருக்கக் கூடும்  என்று நாங்கள் கருதுகிறோம் என்றனர் !

 

நெடுங்கிள்ளியின் மனதில்  அயிர்ப்பு (ஐயம்) குடிகொண்டது.  இளந்தத்தனைக் கொன்றுவிடுவது என்னும் முடிவுக்கு வருகிறான். காவலர்களை அழைத்து , நம் நகருக்குள் புகுந்திருக்கும் ஒற்றன் இளந்தத்தனைக் கொன்று வாருங்கள் எனக்  கட்டளை இடுகிறான் !

 

அரசனது அவையில் வீற்றிருந்த கோவூர் கிழார் என்னும்  பெரும் புலவர்,  மன்னனின் கட்டளையை கேட்டுப் பதறிப் போகிறார்.  இளந் தத்தனையும்  அவனது  வரலாற்றைப் பற்றியும்   அறிந்திருந்த  கோவூர் கிழார், நெடுங்கிள்ளியிடம் ஒரு பாடல் மூலம் தம் மனக் கிடக்கையை வெளிப்படுத்துகிறார் !

 

மன்னா ! வறுமையில் வாடும் புலவர்கள் மன்னர்களை நாடிச் சென்றுஅவர்களைப் பற்றிப் பாடிப்பரிசில் பெறுவது   வழக்கம் !  இளந்தத்தனும் அந்த எண்ணத்துடன் தான் உறையூருக்கு வந்திருக்க வேண்டும்; அவனை நம் எதிரிகளின் ஒற்றன் என்று கருதக் கூடாது; பிழையான முடிவுக்கு  மன்னர்  வரலாகாது  என்னும் கருத்தை, மறைமுகமாக தன் பாடல் மூலம் உணர்த்துகிறார் !

 

கோவூர் கிழாரின் பாடலைக்  கேட்ட நெடுங்கிள்ளி தன் முடிவை மாற்றிக் கொள்கிறான். இளந்தத்தனை அரசவைக்கு அழைத்து வருமாறு காவலர்களைப் பணிக்கிறான் ! கோவூர் கிழார் மன்னனின் மனதை எப்படி மாற்ற முடிந்தது ?  அவரது பாடலைப் பாருங்கள் !

--------------------------------------------------------------------------------------

புறநானூறு, பாடல் (47)

---------------------------------------

 

வள்ளியோர்ப் படர்ந்து,  புள்ளின் போகி,

நெடிய என்னாது  சுரம்பல கடந்து,

வடியா நாவின் வல்லாங்குப் பாடி,

பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி,

ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,

வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை

பிறர்க்குத் தீதறிந் தன்றோ ? இன்றே; திறப்பட

நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,

ஆங்கினிது ஒழுகின் அல்லது, ஓங்குபுகழ்

மண்ணாள் செல்வம் எய்திய

நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே !

 

-------------------------------------------------------------------------------------

பாடலின் பொருள்:

-----------------------------------

மன்னா ! வரையாது  கொடுக்கும் வள்ளல்களை  நாடி வருவது புலவர்களின் வழக்கம் ! அப்படி வருகையில்,  மன்னனின் தலைநகர் நெடுந்தொலைவில் இருக்கிறதே என்று மலைப்புக் கொள்ளாமல், கடுமையான பாலை நிலங்களையெல்லாம் கடந்து துன்பப்பட்டு  வந்து சேர்கின்றனர்  !

 

அவர்கள், பழமரம் இருக்கும் திசை நோக்கிப்  பறக்கும் பறவைகள்  !வள்ளல்களைப் பார்த்து,  தம் நாவால்  பாமாலை சூட்டுவதும்,  பரிசில்கள்  பெறுவதும், பெற்ற செல்வங்களை எண்ணி மகிழ்வதும் புலவர்களின் மனதில் உறைந்து கிடக்கும்  நல்வழக்கம் ! பெற்ற பரிசில்களைத் தனக்காக  தனது பிற்காலத்திற்காக  தன்னிடமே வைத்துக் கொள்ளாது, பிறர்க்கும் குறைவின்றிக் கொடுப்பது தான் புலவர்களின் இயல்பு !

 

தம்மை ஆதரிப்பவர்கள் தமக்குச் செய்யும் சிறப்புக்காக நன்றியுடன் நினைத்து மகிழ்வதே புலவர்கள் வாழ்க்கை. இத்தகைய வாழ்க்கை பிறர்க்கு ஈத்துவக்கும் வாழ்க்கை - வாழ்பவர்கள் பிறர்க்குத் தீமை செய்வதை அறிவார்களோ? அவர்கள் பிறர்க்குத் தீமை செய்யமாட்டார்கள் !

 

கல்வி கேள்விகளால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாணுமாறு செய்து அவர்களை வெற்றிகொண்டு தலை நிமிர்ந்து நடப்பவர்கள் புலவர்கள் . அது மட்டுமல்லாமல், உயர்ந்த புகழும் உலகாளும் செல்வமும் பெற்ற உன்னைப் போலவே  அவர்களும் தம் புலமையால் செம்மாப்பு உடையவர்கள் ! அவர்கள் பிறர்க்குத் தீமை செய்ய ஒருநாளும் துணிய மாட்டார்கள் !


-------------------------------------------------------------------------------------

கோவூர் கிழார் தன்  பாடல் மூலம் மறைமுகமாகத் தனக்குச் சொன்ன செய்தியை உணர்ந்து, இளந்தத்தனைக் கொல்லும் முடிவினைச் சோழன் நெடுங்கிள்ளி கைவிட்டான் ! 

-------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------

வள்ளியோர் = வரையாது கொடுக்கும் வள்ளல்கள்; படர்தல் = நினைத்தல்;  புள் = பறவை ;  சுரம் = பாலைவழி ; வடியா = தீங்கு உரையாத;  அருத்தல் = உண்பித்தல்;  ஓம்புதல் = பாதுகாத்தல்; கூம்பல் = ஊக்கங்குறைதல். வீசுதல் = வரையாது கொடுத்தல்; வரிசை = சிறப்பு, மரியாதை, பாராட்டு; பரிசில் = கொடை, ஈகை ;  திறம் = திறமை(அறிவு)திறப்படல் = கூறுபடல், தேறுதல்,  சீர்ப்படுதல்;  நண்ணார் = பகைவர் (மாறுபட்ட கருத்துடைய மற்ற புலவர்கள்). 11. செம்மல் = தருக்கு (பெருமிதம்).

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”புறநானூறு” வலைப்பூ,

[veda70.vv@gmail.com]

[தி.பி,2052, நளி (கார்த்திகை) 20] 

{06-12-2021}

--------------------------------------------------------------------------------------