விரும்பும் பதிவைத் தேடுக !

Showing posts with label குழவி இறப்பினும் ஊன்தடி. Show all posts
Showing posts with label குழவி இறப்பினும் ஊன்தடி. Show all posts

Friday, 28 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (74) குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் !

 

புறநானூறு (74). குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்


=============================
பாடியவர்: 

=============================

 

சேரமான் கணைக்கால் இரும்பொறை. இம்மன்னன் இரும்பொறை மரபைச் சார்ந்தவன். கணைய மரத்தைப் போன்ற வலிய கால்களை உடையவன் என்ற காரணத்தால் இவன் இப்பெயரைப் பெற்றதாகச் சிலர் கருதுகின்றனர். இரும்பொறைப் பரம்பரையில் கடைசியாக ஆட்சி புரிந்த சேர மன்னர்களுள் இவனும் ஒருவன் என்றும் இவன் ஆட்சிக் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள்  கூறுகின்றனர் !

=============================
பாடப்பட்டவர்:

=============================

எவருமிலர் !


==============================

பாடலின் பின்னணி: 

==============================

 

சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் பகை மூண்டது. அப்பகையின் காரணத்தால் அவர்களுக்கிடையே போர் தொடங்கியது. இருவரும் பெரும்படையுடன் கழுமலம் என்னுமிடத்தே போர் செய்யத் தொடங்கினர். போரில் சேரன் கணைக்கால் இரும்பொறை தோல்வியுற்றுச் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான். ஒரு நாள், சேரமான் பசியின் கொடுமை தாங்காமல், சிறைக் காவலர்களிடம் உணவு அளிக்குமாறு கேட்டான்.  அவர்கள் காலம் தாழ்த்திச் சிறிது உணவைக் கொண்டு வந்து தந்தனர்.  அதனால் வெட்கமும் மனத் துன்பமும்  அடைந்த சேரமான் தன்னிரக்கத்தோடு இப்பாடலை எழுதிவைத்துவிட்டு உயிர் துறந்ததாகச் சொல்லப்படுகிறது !

 

======================================
குழந்தை இறந்து பிறந்தாலும் அல்லது பிறந்து இறந்தாலும், உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும், அதை மார்பில் வாளால் வெட்டிப் புதைப்பது மறக்குல மரபாகப் பழந்தமிழ் நாட்டில் இருந்ததாக இப்பாடலில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அரசர்களிடத்தில் இந்த வழக்கம் இருந்ததாகப் புறநானூற்றுப் பாடல் 93-இல் ஒளவையார் பாடியிருப்பதும் இப்பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கது.
======================================

திணை: பொதுவியல். (எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது)

துறை: முதுமொழிக் காஞ்சி . (அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது)

 =======================================

===============================================

புறநானூறு .பாடல் (74) குழவி இறப்பினும் ஊன்தடி!

===============================================

 

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே?


===============================================

 

==============================
அருஞ்சொற்பொருள் 

==============================

 

குழவி இறப்பினும் = பிறந்த குழந்தை இறந்துவிட்டாலும் ; ஊன்தடி பிறப்பினும் = உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் ; ஆள் அன்று' என்று வாளின் தப்பார் = அது ரு “உயிருள்ள ஆள்ன்று என்று, புதைப்பதற்கு முன் மார்பில் வாளால் வெட்டுவது எம் குல வழக்கம் : அதிலிருந்து எம்மவர் பின்வாங்க மாட்டார்கள் ; தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய = சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் நாய்போல இந்தச் சிறையில் இருக்கிறேன் ; கேளல் (கேள் + அல்) கேளிர் = பகையுணர்வு மிக்க இவர்கள்  ; வேளாண் சிறுபதம் = தந்திருக்கும் தண்ணீர் உணவு ; மதுகை = மனவலிமையின்றி ;  வயிற்றுத் தீத் தணிய = கொடிய வயிற்றுப் பசி தீர ;  தாம் இரந்து உண்ணும் அளவை  = கேட்டு வாங்கி உண்ணும்  அளவுக்கு நான் இருக்கிறேனே ; ஈன்மரோ இவ் வுலகத் தானே? = இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?

 

=============================
பொருளுரை:

==============================

 

எங்கள் குடியில் ஒரு குழந்தை இறந்து பிறந்தாலும் அல்லது பிறந்து இறந்தாலும்,  உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அது ரு உயிருள்ள பிறவி அன்று என்று புதைப்பதற்கு முன் மார்பில் வாளால் வெட்டுவது எங்கள் குல வழக்கம். அதில் தவற மாட்டார்கள். ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாக ருந்தாலும், போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல் சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு, இச்சிறையில் வாடுகிறேன். என் பசியைப்பொறுத்துக்கொள்ளும் மன வலிமையின்றி, பகைவர்களிடம் உணவு வேண்டுமென்று கேட்டதால் அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் இழிநிலையில் உள்ளேனே ! இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?

  ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)11]

(28-08-2026)

================================================