விரும்பும் பதிவைத் தேடுக !

Showing posts with label செஞ்ஞாயிற்றுச் செலவு. Show all posts
Showing posts with label செஞ்ஞாயிற்றுச் செலவு. Show all posts

Tuesday 30 November 2021

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (30) செஞ்ஞாயிற்றுச் செலவும் !

 

நேரில் சென்று அளந்தது போல் கணித்து சொல்வோர் !

------------------------------------------------------------------------------------

ஒரு நாள் சோழன் நலங்கிள்ளி  அரசவையில்  தனது அரியணையில் அமர்ந்திருக்கிறான்.  அவன் எதிரே கற்றறிந்த சான்றோர் பலர் தமது இருக்கைகளில் அமர்ந்திருக்கிறர்கள்.  அப்பொழுது உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் பெரும் புலவர் அரசவைக்கு வருகிறார் !

 

சோழன் நலங்கிள்ளி புலவரை வரவேற்று  இருக்கையில் அமரவைக்கிறான்.  சற்று நேரம்  நாட்டு நடப்புகளைப் பற்றி இருவரும் உரையாடுகிறார்கள் ! 

 

புலவரே தாங்கள் அண்டை நாடுகள் பலவுக்கும்  சென்று வந்திருப்பீர்கள்.  சோழ நாட்டைப் பற்றி அங்குள்ள மன்னர்களும் புலவர்களும் மக்களும் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூறுங்கள்.”

 

மன்னவா ! உனது  பூம்புகார்த் துறைமுகத்திற்கு நித்தமும் மரக்கலங்கள் பலவும் வந்து செல்கின்றன.  அவற்றில் ஏற்றி  இறக்கப்படும் பண்டங்கள் உன் நாட்டின் செழுமையைப் பறை சாற்றுகின்றன !

 

வலிமை மிக்கவன் நீ !  உன் வலிமையை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மிகவும் அடக்கமாக ஆட்சி புரிகிறாய்.

 

ஞாயிறு என்னும் சூரியனின் பயணம், அது சூழ்ந்த மண்டிலம் (பிற கோள்கள்) காற்றின் திசை, காற்றே இல்லாத ஆகாயம் என இவற்றை எல்லாம் நேரில் சென்று அளந்தது போல் கணித்து சொல்வோர்  அண்டை நாடுகளில் இருக்கத்தான் செய்கின்றனர் !

 

ஆனால் அவர்களாலேயே கணிக்க முடியாத  அளவுக்கு   உன் வல்லமையை வெளிப்படுத்தாமல்   நீ மறைத்து வைத்திருகிறாய்.  அப்படி இருக்கையில் உன் வலிமையைப் பற்றி பிற மன்னர்களாலும், புலவர்களாலும்  எவ்வாறு கருத்தை வெளிப்படுத்த முடியும் ?   எவ்வாறு பாட முடியும் ?”

 

இதோ அந்தப் பாடல்:-

--------------------------------------------------------------------------------------

 

செஞ்ஞா யிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப்

பரிப்பும், பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்,

வளிதிரிதரு திசையும்,

வறிது நிலைஇய காயமும் என்றிவை

சென்றளந்து அறிந்தார் போல என்றும்

இனைத்துஎன் போரும் உளரே; அனைத்தும்

அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்

களிறுகவுள் அடுத்த எறிகல் போல

ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட

யாங்ஙனம் பாடுவர் புலவர்? கூம்பொடு

மீப்பாய் களையாது மிசைப்பரம் தோண்டாது

புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் தகாஅர்

இடைப்புலப் பெருவழிச் சொரியும்

கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!

 

-------------------------------------------------------------------------------------

 பொருள்:

-----------------

காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள  உனது பூம்புகார்த் துறைமுகத்திற்கு   மரக்கலங்கள்  நிரம்பவும் வந்து செல்கின்றன.  துறைமுகத்தில் நீரின் ஆழம் அதிகம் என்பதால் அவை பாய்மரத்தை  இறக்காமலும், பாரத்தைக் குறைக்காமலும் உள்ளே வர முடிகிறது.

 

உள்ளே  வரும்  மரக்கலங்களிலிருந்து இறக்கப்படும் பண்டங்கள்  இடைவழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன; அதை யாரும் பொருட்படுத்துவதில்லை ! அந்த அளவுக்கு உன் நாடு செல்வ வளம் மிக்கதாகத் திகழ்கிறது !

 

சூரியனின் செலவு  (பயணம்), அதன் இயக்கம், அதைச் சூழ்ந்து பிற கோள்கள் இயங்கும் மண்டிலம்,  காற்றின் திசை, காற்றே இல்லாத விசும்பு என  அவற்றை எல்லாம் நேரில் சென்று அளந்தது போல் கணித்து சொல்லக் கூடிய அறிவு படைத்தவர்கள்   உன் நாட்டிலும் அண்டை அயலிலும் இருக்கின்றனர் !

 

இத்தகைய  சான்றோர்கள்   கூட  கணிக்கமுடியாத  அடக்கம்உடையவனாக நீ இருக்கின்றாய்.  போர்க்களத்தில் யானை, பகைவர்கள் மீது வீசுவதற்காகத் தன் கன்னத்தினுள் அடக்கி வைத்திருக்கும் கல்லைப் போல, உன் வலிமையானது  மாற்றார்களால் தெரிந்து கொள்ள முடியாதபடி மறைபொருளாகவே  (இரகசியம்)   இன்றும்  இருக்கிறது !

 

ஆகையால் உன் வலிமையைப் பற்றி  பிற மன்னர்களும், புலவர்களும் தம் கருத்தை வெளிபடுத்தி  எப்படிப்  பாடமுடியும் ? அவர்கள் தம் கருத்தை வெளிப்படுத்தினால் அல்லவோ யான் அவற்றை அறிய முடியும் ?

-------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:-

-------------------------------------

செலவு = பயண வழி; பரிப்பு = இயக்கம்; மண்டிலம் = வட்டம்; வளி = காற்று; காயம் = ஆகாயம்; இனைத்து = இத்துணை அளவு; செறிவு = அடக்கம்; கவுள் = கன்னம் ; அடுத்தல் = சேர்த்தல்; துப்பு = வலிமை; கூம்பு = பாய்மரம்; மீப்பாய் = மேற்பாய்; பரம் = பாரம்; தோண்டல் = அகழ்தல் (எடுத்தல்); புகார் = ஆற்றுமுகம்; தகார் = தகுதி இல்லாதவர்; தாரம் = அரும்பண்டம்.

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

புறநானூறு வலைப்பூ.

[தி.பி:2052, நளி (கார்த்திகை) 14]

(30-11-2021)

-------------------------------------------------------------------------------------

செஞ்ஞாயிற்றுச் செலவும் !