விரும்பும் பதிவைத் தேடுக !

Wednesday, 30 September 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (189) தெண்கடல் வளாகம் பொதுமையின்றி !

 

புறநானூறு -  189. தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி.

================================================

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்,

================================================

திணை: பொதுவியல்.

துறை: பொருண்மொழிக் காஞ்சி.

================================================

பாடல் பின்னணி: 

================================================

வேந்தனாக இருந்தாலும் வேட்டுவனாக இருந்தாலும் உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் ஒன்று தான்.  அளவுக்கு மீறிய செல்வம் இருந்தால் அதை அனுபவிக்க முடியாது.  செல்வத்தின் பயன் ஈதல் என்று இப்பாடலில் நக்கீரனார் கூறுகின்றார்.

================================================

புறநானூறு -  189. தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி.

================================================

தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்,
நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது  நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே;
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே தப்புந பலவே.

 

================================================

சொற்பொருள்:  

================================================

தெண் கடல் =  தெளிந்த கடலால் ;  வளாகம் = சூழப்பட்ட இவ்வுலகம்; பொதுமை = பிற வேந்தர்களுக்கும் பொதுவானது என;  இன்றி = எண்ணாமல் ; வெண்குடை = தனது ஆட்சியின் கீழ்  ; நிழற்றிய = கொண்டு வந்து ஆளும் மன்னர்களுக்கும்; நடு நாள் யாமத்தும் =  இரவும் ; பகலும் = பகலும்;  துஞ்சான் = தூங்காமல்; 


கடு மா = விரைந்து செல்லும் விலங்குகளை;  பார்க்கும் = வேட்டையாடி வீழ்த்திப் பிடிக்கும் ;  கல்லா ஒருவற்கும் = கல்வி கற்காத ஏழை  மனிதன் ஒருவனுக்கும் ;  உண்பது = உண்பது என்பது ; நாழி = நாழி என்னும் அளவுள்ள சோறு தான்; உடுப்பவை = உடையாக உடுப்பவை ; இரண்டே = கீழாடை, மேலாடை என்னும் இரண்டு தான்; 


பிறவும் எல்லாம் = மற்றவை எல்லாம்;  ஓரொக்குமே = மன்னனாயினும் சரி, கல்லா மாந்தனாயினும் சரி ; ஒத்திருப்பவை = இருவருக்கும்  ஒரே மாதிரியானவை தான் ;  செல்வத்துப் பயனே = செல்வத்தின் பயன் என்பது  ; ஈதல் = பிறர்க்கும் கொடுத்து மகிழ்தல்;  துய்ப்பேம் = நான் மட்டுமே  நுகர்வேன்;   எனினே =  என்று எண்ணினால்; தப்புந = வாழ்க்கையில் நாம்  துய்க்க முடியாமல் கைவிட்டுப்  போவன ; பலவே =  மிகப் பலவாகும்.

 

================================================

பொருளுரை:

================================================

தெளிந்த கடலால் சூழப்பட்ட இந்த உலகு அனைவர்க்கும் பொதுவானது என எண்ணாமல் தானே ஆட்சி செய்ய நினைக்கும்  மன்னனுக்கும்,  இரவிலும் பகலிலும் உறங்காது, உணவுக்காக விலங்குகளை வேட்டையாடி வீழ்த்தப் பார்க்கும் கல்வி கற்காத ஒருவனுக்கும், தேவை நாழி அளவு உணவு தான்.  


அவர்கள் உடுப்பது  (கீழாடை, மேலாடை ஆகிய) இரண்டு ஆடைகள் தான்.  மற்ற தேவைகளிலும் இருவரும் ஒப்பானவர்களே.  செல்வத்தின் பயன் என்பது பிறர்க்குக் கொடுத்து மகிழ்தல்.  பிறருக்கு அளிக்காமல் தானே துய்க்க வேண்டும் என்று ஒருவன் நினைத்தால், அவன் பல  பயன்களை இழப்பான்.

 

தெளிந்த கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தை வெண்குடை தாங்கி ஆட்சி செய்யும் மன்னனுக்கும், இரவும் பகலும் உறங்காமல் காட்டு விலங்குகளை வேட்டையாடப் பார்க்கும் கல்லாத ஏழைக்கும் உணவு மற்றும் உடை ஆகிய அடிப்படைத் தேவைகள் ஒன்றுதான்.

 

உண்பது ஒரு நாழி (அளவு) அரிசிச் சோறு; உடுப்பது கீழாடை, மேலாடை ஆகிய இரண்டு ஆடைகள்தான். மற்ற வாழ்க்கை முறைகளும் இவர்களுக்கு அடிப்படையில் ஒன்றுபோலவே முடியும்.

 

இவ்வளவு ஒற்றுமை கொண்ட மனித வாழ்வில், சேர்த்த செல்வத்தின் உண்மையான பயன் பிறருக்குக் கொடுத்து உதவுவதே (ஈதல்) ஆகும். நாமே எல்லாவற்றையும் துய்க்கலாம் (அனுபவிக்கலாம்) என்று நினைத்தால், வாழ்நாளில் நுகர முடியாமல் பலவும் கெட்டுப்போகும் !

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, கன்னி (புரட்டாசி) 13]

(30-09-2026)

================================================ 

வேடன்