விரும்பும் பதிவைத் தேடுக !

Saturday, 29 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (83) அடி புனை தொடு கழல் !

 

புறநானூறு.பாடல்( 83) அடி புனை தொடு கழல் !

==============================

 பாடியவர்: 

==============================

 

பெருங்கோழி  நாய்கன்  மகள்  நக்கண்ணையார். நக்கண்ணையார் பெருங்கோழி நாய்கனுக்கு மகளாக, திருச்சியின் ஒரு பகுதியாக இன்று விளங்கும் உறையூரில் பிறந்தார். சோழ நாட்டுத் தலைநகர்களுள் ஒன்றான உறையூருக்கு கோழி என்ற பெயரும் உண்டு. நாய்கன் என்பது கடல் வாணிகம் செய்யும் இனத்தார் வைத்துக் கொள்ளும் பெயர். நக்கண்ணையார்  புறநானூற்றில்  83, 84, 85 ஆகிய இலக்கங்கள் உடைய  பாடல்களும்,  அகநானூற்றில்  252 - ஆவது பாடலும், நற்றிணையில் 19- ஆவது பாடலும் என மொத்தம் ஆறு பாடல்கள் பாடியுள்ளார்!

 

 ==============================

பாடப்பட்டோன்: 

===============================


சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. இவர் சங்க காலத்து முற்காலச் சோழ மன்னர்களுள்  மிக முகாமையான, வீரம் செறிந்த  ஒரு பேரரசன் ஆவார். இவருடைய  பெயரில் உள்ள போர்வை என்பது   திருச்சி – கருவூர் வழித்தடத்திலுள்ள “பெட்டவாத்தலை” என்னும் ஊரின் பழைய பெயர். இந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு கிள்ளி ஆண்டு வந்ததால் இவருக்கு சோழன்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி என்று பெயர் வழங்கலாயிற்று !

 

சங்க இலக்கியமான புறநானூற்றில் இவரைப் பற்றியும்,  இவருடைய அஞ்சாத போர்த்திறன் ,அற்றும் மற்போர் திறமையைப் பற்றியும் பல பாடல்கள் விரிவாகப் பேசுகின்றன !

 

=============================
திணை: கைக்கிளை.

துறை: பழிச்சுதல்.

=============================

 

=============================

பாடலின் பின்னணி:   

=============================

 

இளம் பருவத்தில் இருக்கும் சோழ மன்னன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி மீது ஒருதலைக் காதல் கொள்கின்றார் ஓர் இளம் பெண் புலவர். தன் காதல் தனது தாய்க்குத்  தெரிந்துவிடுமோ என்று அஞ்சுவதைப் பற்றியும், தான் காதலில் துடிப்பதை அறியாமல் ஆட்சி புரிய உகந்தவன் யார் என்ற கருத்து மோதலில் ஊர் இரண்டுபட்டு நிற்பது பற்றியும் சொல்லி  தான் துடிப்பது போல இவ்வூரும் துடி துடிக்கட்டும் என்று ஆற்றாமையில், இந்தப் பாடலை எழுதியுள்ளார் !

 

==================================================

புறநானூறு.பாடல்( 83) அடி புனை தொடு கழல் !

==================================================

அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே,
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே,
என் போல் பெரு விதுப்புறுக, என்றும்
ஒரு பால் படாஅது ஆகி 
இரு பாற்பட்ட இம் மையல் ஊரே.

 

==============================

பொருளுரை:  

==============================

 

உறையூர் மக்களில் ஒரு சாரார்,  தம்மைப் “போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி” ஆள வேண்டும் என நினைக்கிறார்கள். மற்றொரு சாரார் ஆளுகின்ற “தித்தன்” ஆட்சியை விரும்புகின்றனர். ஊர் இரண்டுபட்டுக் கிடக்கிறது !

 

சோழன் “போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி” கால்களில் வீரக்கழல் அணிந்து இருக்கின்றான். அவன் முகத்தில் கருந்தாடி  இப்போதுதான்  அரும்புகிறது. அவன் மீது (ஒருதலைக்) காதலால் என் உடல் இளைத்து கைகளில் அணிந்துள்ள வளையல் கழன்று நழுவுகிறது !

 

இப்படிக் கழன்றோடுவதை என் தாய் பார்த்துவிடக் கூடாதே என்று என் மனம் அஞ்சுகிறது. வளைகள் கழலாமல் இருக்க நான் அவன் தோளைத் தழுவிவிடலாம்.  ஆனால் மக்கள் கூடியுள்ள ஊரவையில் அதனைச் செய்ய என்  நாணம் தடுக்கிறது !

 

என் மனமோ காதலில் துடிதுடித்துத் தடுமாறுகிறது. ஆனால் என் காதலை அறியாதிருக்கும் இந்த ஊர்   ”கிள்ளி” ஆட்சியா, “தித்தன்” ஆட்சியா என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது ! தடுமாறட்டும் ! துடிதுடிக்கட்டும் !

 

=============================

சொற்பொருள்:   

=============================

 

அடி புனை தொடு கழல் = வீரக்கழல் அணிந்த கால்கள் ; மை அணல் காளைக்கு = கருநிறத் தாடியையுடைய இளைஞன் மேல் கொண்ட காதலால் ; என் தொடி கழித்திடுதல் = அவனை நினத்து உடல் இளைத்ததால், என்னுடைய வளையல்கள் என் கையிலிருந்து கழல்கின்றன.  ; யான் யாய் அஞ்சுவலே = என் காதல் என் தாய்க்கு தெரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்;  அடு தோள் முயங்கல் =  பகைவர்களைக் கொல்லும் அவனுடைய வலிய தோள்களைத் தழுவ விரும்புகிறேன் ; அவை நாணுவலே ஆனால் அவையின் முன் அவனைத் தழுவதற்கு நாணுகின்றேன் ;

 

என்றும் ஒரு பால் படாஅது ஆகி = ஒரு பக்கமும் சாராது ; இரு பாற்பட்ட = இரு பக்கமும் ஆதரவு தந்து உள்ள ; இம் மையல் ஊரே =  முடிவெடுக்க முடியாமல்  மயங்குகிறது இந்த  ஊர் ! என் போல் பெரு விதுப்புறுக = காதலில் துடிதுடிக்கும் என்னைப் போல் இந்த ஊரும் மயங்கித் துடி துடிக்கட்டும் ! என்னைப் போன்று பெரியதாக நடுங்கத்தில் ஆழட்டும் !  

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)12]

(29-08-2026)

================================================

                                                       



புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (75) மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் !

 

புறநானூறு .(75).மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் !

 

 ==============================

பாடியவர்:

===============================

சோழன் நலங்கிள்ளி,  சோழன் நலங்கிள்ளி கரிகாலனின் மகன் என்பதே இவனைப்பற்றிய பாடல்களால் உய்த்துணரப் படுகிறது. இவன் பெரியதொரு நாட்டைப் பகைவர் அஞ்ச ஆண்டுவந்தான் என்றே புலவர்கள் கூறியுள்ளனர். இவன் பலவகைப் படைகளைப் பெற்றிருந்தான். இவனைப் பற்றிப் 10 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இவனால் பாராட்டப் பெற்ற சங்கப்புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார், ஆலந்தூர் கிழார் என்பவர்கள். இப்புலவர் பாடல்களால் இவன் வரலாறு விளங்குகிறது !

 

==============================

பாடப்பட்டோர்

==============================

எவருமிலர் !

 

====================================

திணை: பொதுவியல், 

துறை: முதுமொழிக் காஞ்சி

=====================================

==============================================

புறநானூறு (75) மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் !

==============================================

 

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால் தர வந்த பழ விறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடி புரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே, 
மண்டு அமர்ப் பரிக்கும் மதனுடை நோன் தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ் நீர்
அறு கய மருங்கின் சிறு கோல் வெண்கிடை
என்றூழ் வாடு வறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே, மையற்று 
விசும்புற ஓங்கிய வெண்குடை
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே.

 

==============================

பொருளுரை:   

==============================

 

தன் குடியில் உள்ள மூத்தவர்களைக் கூற்றுவன் கொண்டு சென்றதால் -அவர்கள் இறந்துவிட்டதால் -  முறைப்படி வந்த, தன் அரச உரிமையை அடைந்து இப்பெரும் சிறப்பைத் தான் பெற்றிருக்கிறேன் என்று எண்ணி குடிமக்களிடம்  வரி கேட்கும் ஆண்மையும்  நெஞ்சுரமும் இல்லாத ஒருவனாக  இருந்தால், அது சிறப்பானது அன்று. அந்த அரச உரிமை அவனுக்குச் சுமை மிக்கதாகவே இருக்கும் !

 

களத்தில் துணிந்து போரிடும் மன எழுச்சியும் வலுவான முயற்சியும் உடைய ஓர் உயர்ந்த ஆண்மகன், அரச உரிமையைப் பெறுவான் எனில், தனது ஆட்சி முறைமை என்னும் வெண்கொற்றக்குடை, வற்றிய குளத்தில் கிடக்கும் உலர்ந்த சிறிய எடை இல்லாத நெட்டிச் சுள்ளியைப் போல் அவனுக்குச் சுமை இல்லாததாக, எளிமையானதாக இருக்கும்.  குற்றம் இல்லாத, அரசாட்சிதான் ஒரு மன்னனுக்குத் திரண்ட செல்வம் ஆகும் !

 

==============================

சொற்பொருள்:  

==============================

 

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென = தன்னுடைய குடியில் உள்ள மூத்தவர்களைக் கூற்றுவன் கொண்டு சென்றதால் (அவர்கள் இறந்துவிட்டதால்) ;  பால் தர = ஊழ்வினையின் பயனாக ;  வந்த = தம்மிடம் வந்து சேர்ந்த  ; பழ விறல்  = பழைய வெற்றிகளால் ; தாயம் எய்தினம் ஆயின்  = நாட்டின் ஆட்சி உரிமையை ஒருவன் அடைந்தான் எனில் ;

 

எய்தினம் சிறப்பு என ;  நாட்டின் தலைமைப் பொறுப்பான அரச பதவியை நான் பெற்றிருக்கிறேன் என்று ;  குடி புரவு இரக்கும்  =  குடிமக்களிடம் தெரிவித்து, அவர்கள் ஒத்துழைப்பை இறைஞ்சி வேண்டிக் கேட்கும்  ; கூரில் ஆண்மைச் சிறியோன் பெறின்  =  வீரமும்  ஆண்மையும் இல்லாத தகுதியில்லாத ஒருவன்  பெற்றால் ; அது சிறந்தன்று =  அது சிறந்த வழி  ஆகாது ;   

 

மண்டு அமர்ப் பரிக்கும் மதனுடைரை நோன் தாள் = போர்க்களத்தில்  துணிந்து நின்று போரிடும் மன எழுச்சியையும் வலுவான முயற்சியையும் ;  விழுமியோன் பெறுகுவன் ஆயின் =  ஓர் அரசன் பெறுவான் ஆயின் ;  தாழ் நீர் அறு கய மருங்கின் =  வற்றிய குளத்திடத்து  கிடக்கும் ; சிறு கோல் வெண்கிடை =  சிறிய கோல் போன்ற வெண்ணிற நெட்டி ;  என்றூழ்  =  சூரியன் சுட்டெரிக்கும் வெயிலால் ;  

 

வாடு வறல் போல =  வாடி உலர்ந்த சுள்ளியாகி ; நன்றும் நொய்தால் = எடையே இல்லாது இருப்பது போல ; தானே, மையற்று  விசும்புற ஓங்கிய வெண்குடை  = தனது ஆட்சி முறைமை என்னும் வெண்கொற்றக் குடை;  முரசு கெழு வேந்தர் =  நாட்டின் அரசனாகிய அவனுக்கு   ;  அரசு கெழு திருவே =  சுமையாக இல்லாமல் மிக எளிமையானதாக இருக்கும் !

  ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)12]

(29-08-2026)

================================================