விரும்பும் பதிவைத் தேடுக !

Tuesday, 25 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (46) நீயோ, புறவின் அல்லல் !

புறநானூறு – பாடல் (46) நீயே, புறவின் அல்லல் !

 

===========================

பாடியவர்: 

===========================

 

கோவூர் கிழார். இவர் கோவூரைச் சேர்ந்தவர். இவ்வூர் சென்னை போரூரிலிருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. (குறிப்பு: ஆந்திர மாநிலத்திலும் நெல்லூர் மாவட்டத்தில் கோவூர் என்று மற்றொரு ஊர் உள்ளது). வேளாண்குடி மரபினர். இவர் புறநானூற்றில் 15 பாடல்களை (31-33, 41, 44 - 47, 68, 70, 308, 373, 382, 386, 400) பாடியிருக்கிறர். சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்ட பொழுது, “ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே” என்று எடுத்துக்காட்டி, அவர்களை அமைதி கொள்ள வைத்து போரைத் தடுத்தி நிறுத்தியவர் !

 

=============================

பாடப்பட்டோன்: 

=============================

 

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். கிள்ளிவளவன் வீரத்திலும் வெற்றியிலும் கொடையிலும் மிகச் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், சிறந்த தமிழ்ப் புலமை  உடையவனாகவும் இருந்தான் என்பது இவன் இயற்றியதாகப் பேசப்படும் புறநானூற்றில் உள்ள ஒரு பாடலிலிருந்து (பாடல் 173) தெரிகிறது.

 

============================
பாடலின் பின்னணி: 

============================

 

கிள்ளிவளவன், தன் பகைமன்னனாகிய  மலையமான் என்பவனின் புதல்வர்களை யானையின் காலின் இட்டுக் கொல்ல முயன்றான். அதைக் கண்ணுற்ற கோவூர் கிழார், சிறுவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டி, கிள்ளிவளவன் முன்  ஒரு பாடலைப் பாடினார். “ஒருபுறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே அளித்த சிபி மன்னனின்  வழித்தோன்றல் நீ. இவர்கள் யார் ? புலவர்களுக்குப் பெருமளவில் ஆதரவளித்த மன்னன் மலையமானின் புதல்வர்கள்; இவர்களைத் துன்புறுத்தாமல் விட்டுவிடு. அவ்வளவுதான் ! நான் கூற வேண்டியதைக் கூறிவிட்டேன். நீ உன் விருப்பப்படி செய்.”

 

========================================
திணை: வஞ்சி. (வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்).

=========================================
துறை: துணை வஞ்சி. (பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குத் தூதராகிச் செய்தி சொல்லுதல்)

=========================================

புறநானூறு (46) நீயோ, புறவின் அல்லல் !

=========================================

நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்தலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கண்நோ வுடையர்
கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே.

===============================
அருஞ்சொற்பொருள்:

===============================


புறவின் = ஒரு புறாவின் ; அல்லல் = துன்பம் ; அன்றியும் = அல்லாமலும் ; பிறவும் = பிற உயிரினங்களின் ; இடுக்கண் = துன்பம்; விடுத்தோன் = களைந்த சிபி மாமன்னனின் ; மருகன் = வழித்தோன்றல் ; இவரே = இவர்களோ ; புலன் உழுது உண்மார் = அறிவை முதலீடாக வைத்து வாழும் புலவர்களின்  ; புன்கண் அஞ்சி  = வறுமையை எண்ணி அஞ்சி ; தமது பகுத்து உண்ணும் = தம்மிடம் உள்ளதை அவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து உண்கின்ற ; தண்ணிழல் வாழ்நர் = இரக்க சிந்தனை உடைய மரபில் வந்தவர்கள் ;  களிறு கண்டு அழூஉம் = முன்பு யானைகளைக் கண்டு அஞ்சி அழுதனர் ; அழாஅல் மறந்த = ஆனால் இந்த மன்றத்தைப் பார்த்தவுடன்  வியப்பால் தங்கள் அழுகையை மறந்தனர் ; மன்று = மன்றம்; மருளல் = வெருளுதல், அஞ்சுதல். புன்தலைச் சிறாஅர் = சிறிய தலையையுடைய சிறுவர்கள்;  விருந்திற் புன்கண் நோவுடையர் = முன்பு அறியாத புதிய துன்பத்தை அவர்கள் இப்பொழுது அடைந்திருக்கிறார்கள் ; கேட்டனை யாயின் = நான் உரைத்ததை நீ செவி மடுத்தது உண்மையாயின் ; நீ வேட்டது = நீ விரும்பியபடியே ; செய்ம்மே = செய்துகொள்வாயாக !

 

(நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்; இனி உன் விருப்பம் போல் செய்து கொள்வாயாக - அதாவது இந்தச் சிறுவர்களைக் கொல்ல விரும்பினால் கொல்க என்று பொருள். புலவர் அறிவுரையை மீறி மன்னன் தவறு செய்வான் என்றா நினைக்கிறீகள் ?)  


================================

பொருளுரை:

================================


நீயோ, ஒருபுறா அடைந்த துன்பம் மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களின் துன்பத்தையும் களைந்த சிபியின் வழித்தோன்றல். இவர்களோ, அறிஞர்களின் வறுமைக்கு அஞ்சித், தம்மிடத்து உள்ளவற்றைப் பகிர்ந்து உண்ணும் இரக்க குணமுள்ளவர்களின் மரபினர். இவர்கள், முன்பு யானைகளைக் கண்டு அஞ்சி அழுதனர்; இப்பொழுது இந்தச் சிறுவர்கள் இந்த மன்றத்தைப் பார்த்த வியப்பால் தங்கள் அழுகையை மறந்தனர். ஆனால், முன்பு அறியாத புதிய துன்பத்தை அவர்கள் இப்பொழுது அடைந்திருக்கிறார்கள். நான் கூறியதைக் கேட்ட பிறகு நீ உன் விருப்பப்படி செய்க !

================================================
================================

சிறப்புக் குறிப்பு: மலையமானின் புதல்வர்களைக் கொல்ல நினைக்கும் கிள்ளிவளவனிடம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறி கோவூர் கிழார் அவனை அமைதி கொள்ளச்    செய்வதால், இப்பாடல் துணை வஞ்சி என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று !
=================================

===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)08]

(25-08-2026)

================================================




புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (48) கோதை மார்பிற் கோதை யானும் !

 

புறநானூறு – பாடல். (48). கோதை மார்பிற் கோதை யானும் !

=============================

பாடியவர்: 

=============================

 

இப்பாடலைப் பாடியவர் பொய்கையார்.  இவருடைய ஊர் தொண்டி என்பது இப்பாடலின் வரிகளிலிருந்து தெரிகிறது. புறநானூற்றில் இவர் பாடிய இரண்டு பாடல்களும் (48, 49). சேரமான் கோக்கோதை மார்பனைப் பற்றிப் பாடப்பட்டவையாகும். நற்றிணையில் இவர் 18 – ஆம் பாடலைப் பாடியுள்ளார்.

==============================
பாடப்பட்டோன்: 

==============================

 

பாடப்பட்டோன் சேரமான் கோக்கோதை மார்பன். கோதை மார்பன் என்பது இவன் இயற்பெயர் என்றும்,  தொண்டி என்னும் ஊரைத் தலைநகரமாகக் கொண்டு தன் நாட்டை ஆட்சி செய்தான் என்றும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார் !

 


கோக்கோதை மார்பன், சேரன் செங்குட்டுவனின் மகன் என்றும் இவன் குட்டுவன் கோதை, கோதை மார்பன், மாக்கோதை மார்பன், கடுமான் கோதை, செங்கோல் குட்டுவன், கடும்பகட்டியானை நெடுந்தேர்க் குட்டுவன், வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன் முதலிய பெயர்களாலும் அழைக்கப் பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் !

==============================

பாடலின் பின்னணி: 

==============================

 

சேரன் கோக்கோதை மார்பனிடம் சென்று அவனைப் பாடிப் பரிசில் பெற்ற புலவர் பொய்கையார், வேறொரு புலவரை அவனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது !
====================================

திணை: பாடாண். (ஒருவருடைய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது)

=====================================
துறை: புலவர் ஆற்றுப்படை. (புலவன் ஒருவன் இரவலனாக வந்த மற்றொரு புலவனை நோக்கித் தன் தலைவனிடத்தே செல்லுமாறு ஆற்றுப்படுத்தல்)
======================================

===============================================

புறநானூறு – பாடல். (48). கோதை மார்பிற் கோதை !

================================================

கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி;
அஃதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்;
அன்னோர் படர்தி ஆயின் நீயும்
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
அமர்மேம் படூஉங் காலை நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.

=============================

அருஞ்சொற்பொருள்:

==============================

கோதை = சேரன் ; மார்பின் கோதை  = மார்பில் அணிந்த பூமாலை ; கோதையை = சேர மன்னனை ; புணர்ந்தோர் = அவையில் கூடியுள்ள மகளிர்  அணிந்த  ; கோதையானும் = மலர் மாலைகளாலும் ; மாக்கழி = பெரிய ; உப்பங்கழி ; மலர்ந்த நெய்தலானும் = மலர்ந்திருக்கும் நெய்தல் மலர்களாலும் ; கள் = தேன் ; நாறும்மே = மணக்கும் ; கானல் = கடற்கரைச் சோலை நிறைந்த  ; அம் தொண்டி அஃது எம் ஊரே = அழகிய தொண்டி நகரம் தான் எனது ஊர் ; ; அவன் எம் இறைவன் = அந்நகரை ஆள்பவன் எம் தலைவனாகிய கோதை ; அன்னோர்  படர்தியாயின்  = அவனைக் காண்பதற்குச் நீ செல்வாயாயின் ; நீயும் எம்மும் உள்ளுமோ =  என்னை நினைவிற் கொள்வாயா ; முதுவாய் இரவல = தேர்ந்த  வாய்மையுடைய இரவலராகிய புலவரே ;  அமர் மேம்படூஉங்காலை = சேரன் கோதை போரில் வெற்றி அடைகையில்  ; புகழ் மேம்படுநனை = அவன் புகழைப் பாராட்டிப் பாடுபவனை  ; கண்டனம் = கண்டேன் ; எனவே = என்று அவனிடம் சொல்வாயா?
=============================

பொருளுரை

=============================

 

சேரன் கோக்கோதை மார்பில் அணிந்த மாலையாலும், அந்தக் கோதையைக் கூடிய மகளிர் அணிந்த மாலைகளாலும், பெரிய உப்பங்கழிகளில் மலர்ந்த நெய்தல் மலர்களாலும் தேன்மணம் கமழும் கடற்கரைச் சோலைகளை உடையது தொண்டி நகரம். அது என்னுடைய ஊர். அவ்வூரில் உள்ள சேரன் கோக்கோதை மார்பன் என் அரசன். முதிய வாய்மையுடைய இரவலனே! அத்தன்மையுடைய தொண்டி நகரத்திற்கு நீ சென்றால், என்னை நினைவில் கொள்வாயா? ”நீ போரில் வெற்றி அடையும்பொழுது உன் புகழைப் பாராட்டிப் பாடுபவனைக் கண்டேன்” என்று சேரன் கோக்கோதை மார்பனிடம் கூறுவாயாக !

===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)08]

(25-08-2026)

================================================

                                                         


   


 


புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (57) வல்லார் ஆயினும் வல்லுநர் !



 

புறநானூறு (57) வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் ! 

===============================

பாடியவர்: 

================================


காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் (57, 58,169,171, 353) இயற்றியது மட்டுமல்லாமல், அகநானூற்றில் மூன்று பாடல்களும் (107, 123, 285), குறுந்தொகையில் ஒரு பாடலும் (297) இயற்றியுள்ளார் !

==============================
பாடப்பட்டோன்: 

==============================


பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். இலவந்திகை என்ற சொல்லுக்கு நீர்நிலையைச் சார்ந்த சோலை என்று பொருள். இப்பாண்டிய மன்னன் ஒரு இலவந்திகையில் இருந்த பள்ளியறையில் இறந்ததால் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்று அழைக்கப்பட்டான் என்று கூறுவர் !

==============================
பாடலின் பின்னணி: 

==============================


ஒரு சமயம், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பகைவருடன் போர் செய்வதற்குச் சென்று கொண்டிருந்தான். அவனுடைய வலிமையையும் போர் புரியும் ஆற்றலையும் நன்கு அறிந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், “வேந்தே, உன் வீரர்கள் பகைவர்களின் நாட்டு வயல்களை கொள்ளை கொண்டால் கொள்ளட்டும்; வேண்டுமானால் அவர்களின் ஊர்களுக்குத் தீ மூட்டுக; ஆனால், அவர்களின் காவல் மரங்களை வெட்டுவதைத் தவிர்ப்பாயாக.” என்று இப்பாடலில் அவனுக்கு அறிவுறை கூறுகிறார்.

===============================
திணை: வஞ்சி. (வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்)

================================
துறை: துணை வஞ்சி. (பிறரை வெற்றி கொள்ளத் தூதராகிச் செய்தி அறிவித்தல் )

=================================

===============================================
புறநானூறு (57) வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் !

================================================
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற !
நின்னொன்று கூறுவது உடையேன்; என்னெனின்
நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை அவர்நாட்டு
இறங்குகதிர் கழனிநின் இளையரும் கவர்க;
நனந்தலைப் பேரூர் எரியும் நக்க;
மின்னுநிமிர்ந் தன்னநின் ஒளிறுஇலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்புநின்
நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே.

========================================
அருஞ்சொற்பொருள்:

========================================

வல்லார் = திறமையில்லாதவர் ; வல்லுநர் = திறமையுள்ளவர் ;  புகழ்தலுற்றோர்க்கு = உன்னைப் புகழ்பவர்களுக்கு ;  மாயோன் = மணிவண்னன் ; உரை = சொல் ; சாலல் = மேன்மையாதல்,; மாற = பாண்டியன் மாறனே !;   இறங்கு கதிர் = வளைந்த நெற் கதிர்கள் ; கழனி = வயல்கள் ;  ; இளையர் =  படை வீரர்கள் ; கவர்தல் = எடுத்தல் (கொள்ளையடித்தல்) ;  நனந்தலை = அகன்ற ; பேரூர் = பெரிய ஊர்கள் ; நக்க = தீயிட்டு எரிக்க ; மின்னு நிமிர்ந்தன்ன = மின்னல் ஒளிர்வதைப் போல ; இலங்கல் = விளங்குதல் ;  நெடுவேல் = உனது நீண்ட வேல் ; ஒன்னார் = பகைவர்;  செகுத்தல் = அழித்தல் ; என்னதூஉம் = சிறிதும் ; கடிமரம் = பகைவர் அணுகாவண்ணம் வளர்த்துக் காக்கப்படும் காவல் மரம் ; தடிதல் = வெட்டியழித்தல் ; ஓம்புதல் = தவிர்த்தல் ;  கந்து = யானை கட்டும் தறி ;
ஆற்றா = பயன்படாது.

============================================
பொருளுரை: 

=============================================


திறமையற்றவர், திறமையுடையவர், யாராக  இருந்தாலும், உன்னைப் புகழ்வோர்க்கு அருள் புரிவதில் நீ மணிவண்ணனைப் போன்றவன். மாறனே! நான் உன்னிடம் ஒன்று கூறுவேன். அது என்னவென்றால், பிறர் நாட்டின் மீது நீ படையெடுத்துச் செல்லும் பொழுது, அவர்களின் நாட்டில், விளைந்திருக்கும்  நெல் வயல்களை உன்னுடய வீரர்கள் கொள்ளையடித்தாலும்  அடிக்கட்டும்; பெரிய ஊர்களை எல்லாம் தீயால் எரித்தாலும் எரிக்கட்டும்; உன்னுடைய நெடிய வேல், பகைவர்களை அழித்தாலும் அழிக்கட்டும்; ஆனால் அவர்களுடைய காவல் மரங்களை வெட்டுவதை மட்டும் தவிர்த்து விடுவாயாக ! ஏனெனில், உன் யானைகளுக்கு அம்மரங்கள் கட்டுத் தறியாகும் தகுதி அற்றவை !


(காவல் மரங்களை வெட்டினால் போர் முடிவுபெறும். ஆகவே, காவல் மரங்களை வெட்டாமல் இருந்தால், பகைவர்கள் பணிந்து திறை (கப்பம்) கட்டுவதற்கு உடன்பட வாய்ப்புண்டு. அதனால், புலவர், காவல் மரங்களை வெட்டுவதைத் தவிர்த்துப் பகைவர்களுடன் சமாதானமாகப் போவதற்கு வழிவகுக்குமாறு இப்பாடலில் பாண்டியனுக்கு மறைமுகமாக அறிவுரை கூறுகிறார்).  

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)08]

(25-08-2026)

================================================