விரும்பும் பதிவைத் தேடுக !

Thursday, 24 September 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (182) உண்டால் அம்ம இவ்வுலகம் !

 

புறநானூறு – பாடல் (182) உண்டால் அம்ம

 இவ்வுலகம்!

===============================================

பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

===============================================

இவன் பாண்டிய மன்னர் குலத்தைச் சார்ந்தவன். சங்க காலத்துத் தமிழ் மன்னர்கள், தங்கள் கடற்படையைக் கொண்டு கடாரம், சாவகம், ஈழம் போற நாடுகளுக்குச் சென்று போர்புரிந்து வெற்றி பெற்றவர்கள். அவர்களின் கடற்படை போருக்குச் செல்லும் பொழுது மன்னர்களும் தம் கடற்படையோடு செல்வது வழக்கம். அவ்வாறு கடற்படையோடு இளம்பெருவழுதி சென்ற பொழுது, அவன் சென்ற கப்பல் கவிழ்ந்ததால் அவன் கடலில் மூழ்கி இறந்தான். ஆகவே, “கடலுள் மாய்ந்த” என்ற அடைமொழி அவன் பெயரோடு இணைந்து கொண்டது !

 

===============================================
பாடப்பட்டவர்: எவருமிலர்.

===============================================

திணை: பொதுவியல் (எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது)

துறை: பொருண்மொழிக் காஞ்சி (உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்)

===============================================
பாடலின் பின்னணி:

===============================================

இப்பாடலில், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, மனித நேயத்தொடு தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன்   உழைப்பவர்கள் இருப்பதால் தான்  இவ்வுலகம்  நிலைபெற்று  இயங்கிக் கொண்டிருக்கிறது !என்ற உயர்ந்த கருத்தைக் கூறுகிறான் !

 
==============================================
புறநானூறு – பாடல் (182) உண்டாலம்ம இவ்வுலகம் — இந்திரர்  !

==============================================
உண்டால் அம்ம, இவ்வுலகம் -- இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், ‘இனிது’ எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின், உயிருங் கொடுக்குவர்; பழி எனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே.


===============================================

சொற்பொருள்:

===============================================


இந்திரர் = விண்ணுலக வேந்தனான இந்திரனுக்குரிய  ; 

அமிழ்தம் இயைவது ஆயினும் = அமுதம் கிடைப்பதாயினும் ;

 ‘இனிது’ என = நல்லது என எண்ணி ; தமியர் = தனியொரு

 ஆளாக ; உண்டலும் இலரே = உண்ணவும் மாட்டார்கள் ; முனிவு

 இலர் = யாரையும் வெறுக்கவும் மாட்டார்கள் ; துஞ்சலும் இலர்

 = சோம்பித் திரியவும் மாட்டார்கள்  ; பிறர் அஞ்சுவது அஞ்சி =

 பிறர் அஞ்சக் கூடியவற்றுக்குத் தாமும் அஞ்சுவர் ; புகழ் எனின்

 உயிரும் கொடுக்குவர் = புகழுக்காக உயிரை விடத் துணியவும்

 செய்வர் ; பழி எனின் = பழி வருகிறது எனில்; உலகுடன்

 பெறினும் கொள்ளலர் = இந்த உலகமே  கிடைக்கிறது எனில்

 ஏற்கவும் மாட்டார்கள் ; அயர்வு இலர் = சோர்வு கொள்ள

 மாட்டார்கள் ; அன்ன மாட்சி அனையர் = இத்தகைய

 மாட்சிமை மிக்கோர் ; தமக்கு என முயலா நோன் தாள் =

தமக்காக உழைக்காமல் வலிமையுடன் முயன்று ; (நோன்மை =

 வலிமை; தாள் = முயற்சி) ;பிறர்க்கு என முயலுநர் = பிறர்க்காக

 உழைப்பவர்கள் ; உண்மையானே = உள்ளதால் தான் ; இவ்

 வுலகம் = இந்த உலகம் ;உண்டால் அம்ம = இயங்கிக்

 கொண்டிருக்கிறது.





================================================
பொருளுரை :

================================================

இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ் வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, கன்னி (புரட்டாசி)07]

(24-09-2026)

================================================ 

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (201) இவர் யார் என்குவை ஆயின் !

 

புறநானூறு (201} ‘இவர் யார்’? என்குவை ஆயின் !

===============================================

பாடியவர்:  கபிலர். 

===============================================

கபிலர் சங்க காலத்துத் தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப்  பாடல்களுள் மிக அதிக எண்ணிக்கையில் பாடல்களை இயற்றியவர். சங்க காலப் புலவர் கபிலரின் காலம் கி.மு 3-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலமாகும். இவர் இயற்றிய பாடல்களுள் மிகச்சிறந்து விளங்குவது பத்துப்பாட்டிலுள்ள குறிஞ்சிப் பாட்டு ஆகும். இதில் குறிஞ்சி நிலத்தில் பூத்துக் கிடந்த 99 பூக்களையும்,  சிறப்பாகப் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூவையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார் !

 

===============================================

பாடப்பட்டோன்:  இருங்கோவேள்.

===============================================

 

இருங்கோவேள்,     வள்ளன்மை     மிக்கவன்.     போர்வன்மை
மிக்கவன்.  இவர் நாடு புதுக்கோட்டைச் சீமையிலுள்ள மலைநாடு. பாரிமகளிரைக்  கொணர்ந்த கபிலர் இவனையடைந்து,  “இம் மகளிரை யான் தர மணந்து கொள்க" என வேண்டுகிறார் ! 
ஆனால் இருங்கோவேள்  பாரிமகளிரை  மணந்து கொள்ள மறுத்ததாகச் சொல்லப்படுகிறது.

================================================

திணை: பாடாண் திணை

துறை: பரிசில்துறை

===============================================

பாடலின் பின்னணி:  

===============================================

 

பாரி இறந்த பின்னர், கபிலர் பாரியின் பெண்களை தன்னுடைய பெண்களாக ஏற்று, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி குறுநில மன்னனான இருங்கோவேளை அணுகுகின்றார். இதைத்தான் இப்பாடல் விவரிக்கிறது !

 

===============================================

புறநானூறு (201) ‘இவர் யார்’? என்குவை ஆயின் !

===============================================

 

‘இவர் யார்’? என்குவை ஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளி, தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை,
படு மணி யானை, பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே 
தந்தை தோழன்; இவர் என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே.
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி,
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை,
உவரா ஈகை, துவரை ஆண்டு,
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே !  விறற் போர் அண்ணல் !
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே !
ஆண் கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் !
யான் தர,  இவரைக் கொண்மதி ! -- வான் கவித்து
இருங்கடல் உடுத்த இவ் வையகத்து, அருந்திறல்
பொன் படு மால் வரைக் கிழவ ! வென் வேல்
உடலுநர் உட்கும் தானை,
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே !

 

==============================================

சொற்பொருள் :

==============================================

 

இவர்  யார் என்குவையாயின் = இம்மகளிர் யாரென்று கேட்பாயாயின் ; இவரே = இவர்களே ; ஊருடன் இரவலர்க்கு அருளி = தம் ஊர் எல்லாவற்றையும் இரவலர்க்குக் கொடுத்து ; தேருடன்  முல்லைக்கு ஈத்த = தேரை முல்லைக் கொடிக்குக்கு வழங்கிய ; செல்லா நல்லிசை = அழியாத நல்ல புகழ்; படுமணி யானை = ஒலிக்கும் மணியை உடைய யானைகளைப் பெற்றிருக்கும்;  பறம்பின் கோமான் நெடுமாப் பாரி மகளிர் = பறம்பு  மலையின்  மன்னனான பாரியின் புதல்விகள்; யானே தந்தை தோழன் = நான் இவர்களுடைய  தந்தையின் நண்பன்;

 

இவர் என் மகளிர் = இவர்கள் என்னுடைய மகளிர்; அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே = அறநெறியைப் பின்பற்றும் (அந்தணனாகிய)  புலவனாகிய  நான் கொண்டு வந்துள்ளேன்;  நீயே = நீதான்; வடபால் முனிவன் தடவினுள் தோன்றி = வடபக்கத்து முனிவனுடைய ஓம குண்டத்தின் கண் தோன்றி; செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை = செம்பு கலந்து உறுதியாகச் செய்யப்பட்ட மிக உயர்ந்த மதில்;     உவரா ஈகை = கைவிடாத ஈகைக் குணம்; துவரை ஆண்டு = துவராபதி யென்னும் படை வீட்டையாண்டு; நாற்பத்தொன்பது வழிமுறை வந்த = நாற்பத்து ஒன்பது தலைமுறையாக வந்த வேளிருள் ;  வேள் விறற் போர் அண்ணல் = வேளிர் பரம்பரையின் போரில் ; வென்றிப் போரை உடைய தலைவ = வெற்றியை மட்டுமே ஈட்டி வந்த மன்னவா ; 


தார் அணி யானைச் சேட்டு இருங்கோவே = மாலைகள் அணிந்த யானைகளை உடைய  பெரிய இருங்கோவே; ஆண் கடன் உடைமையின் = ஆண் தன்மையைக் கடமையாக கொண்டமையால்; பாண்கடன் ஆற்றிய = பாணர்க்குச் செய்ய வேண்டிய கடமையை ஆற்றிய ; ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல் = தழைத்த மலர் மாலைகள்  அணிந்த  புலிகடி மாலே ; யான் தர இவரைக் கொண்மதி = நான்  தர இவர்களை ஏற்றுக் கொள்வாயாக; வான் கவித்து = வானாற் கவிக்கப்பட்டு; இருங்கடல் உடுத்த இவ்வையகத்து = பெரிய கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் ;

 

அருந்திறல் பொன்படு மால் வரைக் கிழவ = அணுகுதற்கு அரிய வலிமை உடைய  பொற் சுரங்கம்  நிறைந்த உயர்ந்த பெரிய மலையின் தலைவனே; வென்வேல் உடலுநர் உட்கும் தானை = வெற்றி வேலை உடைய பகைவர் அஞ்சும் படை; கெடல் அரும் குரைய நாடு கிழவோயே = கேடு விளைவிக்க முடியாத நாட்டின் தலைவனே  ;  (குரைய, கிழவோயே = இரண்டும் அசைநிலை – இவற்றுக்குப் பொருளில்லை. (புலிகடிமால் என்பது இருங்கோவேளுக்கு இன்னொரு பெயர்).

 

==============================================

பொருளுரை:  

==============================================

 

இவர்கள் யார் என்று என்னிடம் நீ கேட்பாய் ஆயின், சொல்கிறேன் கேள். இவர்கள், தன்னுடைய ஊர்கள் எல்லாவற்றையும் இரவலர்க்கு கொடுத்து, உலாச் சென்ற தன்னுடைய தேரையும் முல்லைக் கொடிக்குக் கொடுத்த, பெரும் புகழையுடைய, யானைகள் நிறைந்த  பறம்பு மலையின் மன்னனான பாரி மன்னனின் மகளிர்.  நான் இவர்களுடைய தந்தையின் நண்பன்.  ஆகையால் இவர்கள் என்னுடைய மகளிர்.  நான் அறநெறி நின்றொழுகும் ஓர் அந்தணனான   புலவன்.  தந்தையை இழந்த இவர்களை நான் அழைத்து  வந்துள்ளேன் !

 

நீ வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்தில் தோன்றியவன்.   செம்பை உருக்கிச்  செய்யப்பட்ட மிக உயர்ந்த மதிலையுடைய துவரையை ஆண்ட வேளிர் குலத் தலைவன்.   ஈகைக் குணம் மேலோங்க,   49 தலைமுறையாக ஆண்டு வந்த வேளிர் பரம்பரையில் வந்த வெற்றிகரமான தலைவன்! மாலைகள் அணிந்த யானைப் படையணியின் தலைவனே ! இருங்கோவேளே  !  உயர்ந்த ஆடவனின் கடமையாக  பாணர்க்குச் செய்ய வேண்டிய பெரும் உதவிகளை ஆற்றிய,  புலிகடிமால் என்னும் இருங்கோ வேளே ! தந்தையின் இடத்திலிருந்து நான் இவர்களை உனக்குத் தருகிறேன்; ஏற்றுக் கொள்வாயாக!  

  ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, கன்னி (புரட்டாசி)07]

(24-09-2026)

================================================