விரும்பும் பதிவைத் தேடுக !

Wednesday, 30 September 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (49) நாடன் என்கோ ? ஊரன் என்கோ ?

 

புறநானூறு - பாடல் (49) நாடன் என்கோ? ஊரன் என்கோ?

==============================================

பாடியவர்: பொய்கையார்.

==============================================

பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன்.

==============================================

திணை: பாடாண்.

துறை: புலவராற்றுப்படை, இயன் மொழி

==============================================

புறநானூறு -பாடல் (49) நாடன் என்கோ, ஊரன் என்கோ?

==============================================


நாடன் என் கோ? ஊரன் என் கோ?
பாடு இமிழ் பனிக் கடற் சேர்ப்பன் என் கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது.
இறங்கு கதிர் அலமரு கழனியும்,
பிறங்கு நீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு எழுமே!

 

===============================================

சொற்பொருள்:

===============================================

நாடன் என்கோ = குறிஞ்சி நிலத் தலைவன் என்பதால் ‘நாடன்’ என்று அழைப்பதா ?; ஊரன் எங்கோ = மருத நிலத் தலைவன் என்பதால் ‘ஊரன்” என்று அழைப்பதா ?; பாடு இமிழ் = எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கிற ; பனிக் கடல் ‘சேர்ப்பன்’ என்கோ = குளிர்ந்த கடலையும் கடற்கரையையும் உடைய நெய்தல் நிலத் தலைவன் என்பதால் ‘சேர்ப்பன்’ என்று அழைப்பதா? யாங்கனம் மொழிகோ = சேரமான் கோக்கோதை மார்பனை நான் எவ்வாறு அழைப்பேன் ? ஓங்கு வாள் கோதையை = ஓங்கிய வாளைக் கைகளில் ஏந்தியபடி இருக்கும்;

 

புனவர் = குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் ; தட்டை புடைப்பின் = தினைப் புனத்தில் கதிர் கொய்ய வரும் பறவைகளை விரட்ட ‘தட்டை’ என்னும் கருவியை ஒலிப்பதால் ;  அயலது = சற்றுத் தொலைவில்; இறங்கு கதிர் = வளைந்த நெற் கதிர்களை உடைய; அலமரு கழனியும் = வருந்தும் மருத நிலக் கழனிகளிலும்; பிறங்கு நீர்ச் சேர்ப்பினும் = கடல் அலைகள் ஆரவாரித்து ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும் நெய்தல் நிலத்திலும் ; புள் = வாழும் பறவைகள் ; ஒருங்கு எழுமே = அச்சத்தால் எழுந்து பட படவென்று சிறகடித்துப் பறந்து செல்லும் !

 

===============================================

பொருளுரை:

===============================================

தினைப்புனத்தைக் காக்கும் குறிஞ்சி நில மக்கள் பறவைகளை விரட்ட  'தட்டை' என்னும் கருவியை ஒலிப்பதால், அந்த ஒலியைக் கேட்டு, அருகிலுள்ள மருத நிலத்து நெல் வயல்களிலும் (கழனி) நெய்தல் நிலத்துக் கடற்கரையிலும் (சேர்ப்பு) இருக்கும் பறவைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அஞ்சிப் பறக்கின்றன. அவனது நாட்டில் குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய மூன்று நிலங்களும் ஒன்றோடொன்று அவ்வளவு நெருக்கமாக அமைந்துள்ளன. எனவே, அவனை, குறிஞ்சி நிலத் தலைவனான நாடன் என்பதா? மருத நிலத் தலைவனான ஊரன் என்பதா? ஒலிக்கின்ற குளிர்ந்த கடற்பரப்பைக் கொண்ட நெய்தல் நிலத் தலைவனான சேர்ப்பன் என்பதா? அவனை எவ்வாறு நான் அழைப்பேன் என்று புலவர் வியந்து பாடுகிறார். 

===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, கன்னி (புரட்டாசி) 13]

(30-09-2026)

================================================ 

பறவைகள்