விரும்பும் பதிவைத் தேடுக !

Tuesday, 29 September 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (186) நெல்லும் உயிர் அன்றே ; நீரும் உயிர் அன்றே !

புறநானூறு (186) நெல்லும் உயிர் அன்றே ! நீரும் உயிர் அன்றே !

==============================================

பாடியவர்: மோசி கீரனார்.

==============================================

பாடப்பட்டோர்: எவருமிலர் !

==============================================

திணை: பொதுவியல்.

துறை: பொருண்மொழிக் காஞ்சி

==============================================
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், ‘யான் உயிர்’ என்பது அறிகை,
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே!

==============================================

சொற்பொருள்:

==============================================

நெல்லும் உயிர் அன்றே = நெல்லும் உயிர் அன்று;  நீரும் உயிர் அன்றே = நீரும் உயிர் அன்று;  மன்னன் உயிர்த்தே = மக்களைப் பாதுகாக்கும் மன்னன் தான் ; உயிர் போன்றவன்; மலர்தலை உலகம் = இந்த அகன்ற உலகத்தில் ;  அதனால் = அதனால்;  வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே = கைகளில் வேலுடன் பெரிய படையை வைத்திருக்கும் நாட்டின் மன்னன்தான்;  யான் உயிர் என்பது =  ; மக்களின் உயிர் தானே என்பதை; அறிகை = உணர வேண்டும் !  

==============================================

பொருளுரை

==============================================

நெல்லும் உயிர் அன்று;  நீரும் உயிர் அன்று; மக்களைப் பாதுகாக்கும் மன்னன் தான் இவ்வுலகத்திற்கு  உயிர் போன்றவன்; அதனால், இந்த அகன்ற உலகத்தில், கைகளில் வேலுடன் பெரிய படையை வைத்திருக்கும் நாட்டின் மன்னன்தான், மக்களின் உயிர் என்பதை, உணர வேண்டும் !  

  ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

“புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, கன்னி (புரட்டாசி) 12]

(29-09-2026)

================================================ 

நெல்லும் உயிர் அன்றே !