புறநானூறு (187) நாடாக
ஒன்றோ, காடாக ஒன்றோ !
=============================
பாடியவர் :
=============================
ஔவையார்.
ஔவையார் என்னும் பெயரில் வெவ்வேறு காலங்களில்
வெவ்வேறு பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த ஔவையார்
சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு,
நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில்
இவரது பாடல்கள் 59
எண் உள்ளன.
============================
பாடப்பட்டோர் :
============================
எவருமிலர்.
============================
திணை : பொதுவியல்
துறை :பொருண்மொழிக் காஞ்சி
============================
பாடலின் பின்னணி:
============================
நாட்டின் இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொருத்தது என்ற கருத்தை இப்பாடலில் ஔவையார் கூறுகின்றார்.
===============================================
புறநானூறு (187) நாடாக
ஒன்றோ, காடாக ஒன்றோ !
===============================================
நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ,
அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே.
===========================
சந்தி பிரித்து எழுதிய பாடல்
===========================
நாடாக ஒன்றோ ; காடாக ஒன்றோ,
அவலாக ஒன்றோ ; மிசையாக ஒன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே !
==============================
சொற்பொருள்:
==============================
நாடாக
ஒன்றோ = நாடு என்ற ஒன்றாகவும் ; காடாக
ஒன்றோ = காடு என்ற ஒன்றாகவும் ; அவலாக
ஒன்றோ = பள்ளம் என்ற ஒன்றாகவும் ; மிசையாக
ஒன்றோ = மேடு என்ற ஒன்றாகவும் ; எவ்வழி
= இந்த நிலம் எவ்வாறு இருந்தாலும்
; ஆடவர்
= அங்கு வாழும் ஆண்கள் ; நல்லவர் = நல்லவர்களாக இருந்தால் ; நிலமே அவ்வழி = நிலமே நீயும் அவ்வழியில் ; நல்லை = நல்ல நிலமாக இருப்பாய் ;
நிலனே
வாழிய = நிலமே நீ வாழ்வாயாக !
=============================
பொருளுரை:
=============================
நிலமே
! நீ நாடாகவோ, காடாகவோ, பள்ளமாகவோ
அல்லது மேடாகவோ, எப்படி இருந்தாலும், அங்கு
வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய் ! நீ வாழ்க!
ஆடவர்கள்தானே காடாகவோ,
மேடாகவோ, பள்ளமாகவோ உள்ள நிலத்தைத் திருத்திப் பண்படுத்தி, வளப்படுத்தி வேளாண்மை செய்யத்
தக்கதாக மாற்றுகிறார்கள். ஆகையால் ஆடவர்கள் உயர்ந்த எண்ணம் படைத்த உழைப்பாளிகளாக இருந்தால்
எந்த நிலமும் நல்ல நலமாக இருக்கும் என்பதை ஔவையார் சுட்டிக் காட்டுகிறார் !
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)15]
(01-09-2026)
================================================ 
மேடும் பள்ளமும்
No comments:
Post a Comment