புறநானூறு .பாடல். (91). வலம்படு
வாய்வாள் ஏந்தி !
=============================
பாடியவர்:
=============================
ஔவையார்.
ஔவையார் என்னும் பெயரில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.
இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு,
அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை
ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59
எண் உள்ளன. அவற்றில்
புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப்
பாடல்கள். அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9
ஆம் நிலையில் உள்ளார் !
=============================
பாடப்பட்டோன்:
=============================
அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை (இப்பொழுது தருமபுரி என்று வழங்கப்பெறுகிறது) ஆண்ட சங்க கால மன்னர்களுள் ஒருவர். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூஉ பெயர். 'அதியமான்' என்பது 'அதியர் கோமான்' என்பதன் மரூஉ பெயர். அஞ்சி என்பது இவரது இயற்பெயர். இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர் !
=============================
திணை: பாடாண்.
துறை: வாழ்த்தியல்
=============================
=============================
பாடல் பின்னணி:
=============================
தன்னுடைய
நாட்டில், ஒருமுறை அதியமான், உயர்ந்த
மலைப்பிளவு ஒன்றில் உள்ள நெல்லி மரத்தின் இனிய கனி ஒன்றைப் பறித்துக்கொண்டு
வந்தான். அதை உண்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என அறிந்தான். தான் அதை உண்ணாது, ஒளவையாருக்கு
அதைக் கொடுத்து உண்ணச் சொன்னான் ! அவந்து
உயர்ந்த உள்ளத்தை உணர்ந்து, அவனைப் புகழ்ந்து ஒளவைப் பெருமாட்டி இயற்றிய பாடல் இது !
===============================================
வலம்படு வாய்வாள்
ஏந்தி ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடி தடக்கை,
ஆர்கலி நறவின் அதியர் கோமான்!
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும ! நீயே தொன் நிலைப்
பெருமலை விடர் அகத்து அரு மிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே.
=============================
சொற்பொருள்:
=============================
வலம்படு
வாய்வாள் ஏந்தி = வெற்றி ஈட்டித் தரும்
குறி தவறாத வாளை எடுத்து ; ஒன்னார் களம் படக் கடந்த = பகைவர்கள் போரில்
தோற்கும்படி வென்ற ; கழல் தொடி தடக்கை = வீர வளை அணிந்த பெரிய கை
; ஆர்கலி நறவின் அதியர்
கோமான் = வெள்ளம் போல் தேன் சொரியும் மலைகளின் அதியர்
தலைவனே ;
போர்
அடு திருவின் = போரிட்டு
வென்று கொண்டு வந்த ; பொலந்தார் அஞ்சி = பொன்னால் செய்யப்பட்ட மாலையை
அணிந்திருக்கும் அதியமான் நெடுமான் அஞ்சியே ; பால் புரை பிறை
நுதல் பொலிந்த சென்னி = அரை வட்ட வடிவான பிறை நெற்றியும், அழகிய தலையும்
உடையவனே ;
தொன்
நிலைப் பெருமலை விடர் அகத்து = பழமையான மலையின் பெரிய பிளவின் ; அரு மிசை கொண்ட = உச்சியில் உள்ள ; சிறியிலை நெல்லித் தீங்கனி =
சிறிய இலையையுடைய
நெல்லியின் இனிய கனி ; குறியாது ஆதல் = பெறுவதற்கு அரிது என்று கருதாது
;
நின்
அகத்து அடக்கி = உனக்குள்ளேயே அந்த உண்மையை மறைத்து வைத்துக் கொண்டு ; சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே =
உண்டு, இறப்பின்றி உயிர் வாழும் இந்த அரிய நெல்லிக் கனியை எனக்கு அளித்தாயே ;
நீலமணி மிடற்று ஒருவன் போல = நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையுடைய சிவன் போல ; மன்னுக பெரும நீயே = இவ்வுலகில் என்றென்றும் நிலைபெற்று நீ வாழ்வாயாக !
=============================
பொருளுரை:
=============================
வெற்றி ஈட்டித்
தரும் குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போரில் தோற்கும்படி
வென்ற, வீரக் கழல்களை அணிந்தவனே ! வெள்ளம்
போல் தேன் சொரியும் மலைகளின் அதியர் தலைவனே; போரிட்டு வென்று கொண்டு வந்த பொன்னால் செய்யப்பட்ட மாலையை அணிந்திருக்கும் அதியமான் நெடுமான் அஞ்சியே !
பிறை போன்ற நெற்றியும், அழகிய தலையும் உடையவனே ! பழமையான மலையின்
உச்சியில் உள்ள சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனி பெறுவதற்கு
அரிது என்று கருதாது, அதை உண்போர்க்கு இறப்பு இல்லை என்னும் உண்மையை உனக்குள்ளேயே மறைத்து வைத்துக் கொண்டு இந்த அரிய நெல்லிக் கனியை எனக்கு அளித்தாயே ! என்னே
உன் உளப்பாங்கு !
நீலமணியைப் போன்ற
கறையுள்ள கழுத்தையுடைய சிவனைப் போல நீ இவ்வுலகில் என்றென்றும் நிலைபெற்று
வாழ்வாயாக !
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)13]
(30-08-2026)
================================================

No comments:
Post a Comment