புறநானூறு ( 95)
இவ்வே பீலி அணிந்து !
=============================
ஔவையார். ஔவையார் என்னும் பெயரில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு
பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த ஔவையார் சங்ககாலப் புலவர்.
எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 எண் உள்ளன.
அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26
அகத்திணைப் பாடல்கள். அதிக பாடல்களைப் பாடிய
புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார் !
============================
அதியமான் நெடுமான் அஞ்சி.
அதியமான் நெடுமான் அஞ்சி
தகடூரை (இப்பொழுது தர்மபுரி என வழங்கப்படுகிறது) ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவன். அதியர் என்போர்
சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர்
கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூஉ பெயர். 'அதியமான்'
என்பது 'அதியர் கோமான்' என்பதன்
மரூஉ பெயர்.
அஞ்சி என்பது இவனது இயற்பெயர்.[1] இவன்
ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு
தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப்
பெயர் !
==========================================
திணை: பாடாண்.
துறை : வாள்மங்கலம்.ள் மங்கலம்
===========================================
=============================
தொண்டை
நாட்டை ஆண்டு வந்த குறுநில மன்னன், தொண்டைமான். இவன் தகடூரை ஆண்ட அதியமான் மீது பகைமை கொண்டான். அதன் விளைவாக
அதியமானோடு போர் புரிய எண்ணினான். அதை அறிந்த அதியமான் ஔவையாரை அவனிடம் தூதுவராக அனுப்பினான். தொண்டைமான் தன் படைப் பெருமையை ஒளவையாருக்குக் காட்ட விரும்பித் தன் படைக்கலக் கிடங்குக்கு அவரை அழைத்துச் சென்றான். அவன் உள்நோக்கத்தை
அறிந்த ஔவையார் தொண்டைமானிடம் என்ன சொன்னார் என்பதே இப்பாடலின்
உட்பொருள் !
===================================================
புறநானூறு ( 95)
இவ்வே பீலி அணிந்து !
===================================================
இவ்வே பீலி அணிந்து
மாலை சூட்டிக்
கண் திரள் நோன் காழ்
திருத்தி நெய் அணிந்து
கடி உடை வியன் நகர், அவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து
கொல் துறைக் குற்றில மாதோ ---என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந்நுதி வேலே.
=============================
=============================
இவ்வே
= இவை ; (வேல்கள், போர்க்கருவிகள்) , பீலி
அணிந்து = மயில் இறகு போர்த்தப்பட்டு
; மாலை சூட்டி = பூமாலை சூடப்பட்டு; கண் திரள் = உடல் பகுதி திரண்ட ; நோன்காழ் =
வலிமையான காம்பு ; திருத்தி = அழகு
செய்து; நெய்
அணிந்து = நெய் பூசப்பட்டு; கடி உடை= காவல் உடைய ; வியன் நகர் = பெரிய வீடு ; (அரண்மனை,)
அவ்வே
அவ்வே = அவையே அவையே ; பகைவர் குத்தி = பகைவரைக் குத்தி ; கோடு = வேலின் பக்கம் ; நுதி
சிதைந்து = நுனி
சிதைந்து ; கொல் துறை = கொல்லனின் பட்டறை ; குற்றில
= சிறிய இடத்தில்
; மாதோ = மாது, ஓ அசைநிலைகள் ; என்றும்
= எப்பொழுதும்
; உண்டாயின் = உண்டு என்றால் ; பதம்
கொடுத்து = உணவு
கொடுத்து ;
இல்லாயின் = இல்லை என்றால் ; உடன் உண்ணும் = உடன் சேர்ந்து உண்ணும் ; இல்லோர் = இல்லாதவர்களின் ; ஒக்கல் ; சுற்றம் ; தலைவன் = தலைவன் ; அண்ணல் = தலைமையுடையவன்; எம் கோமான் = எங்கள் மன்னன் ; வைந்நுதி = கூர்மையான நுனி ; வேலே = வேற்படை ; (வேல்கள்)
=============================
இங்கே
இருக்கும் போர்க்கருவிகள் அனைத்தும் மயில் இறகு போர்த்தப்பட்டு,
பூமாலை சூடப்பட்டுத் திரண்ட வலிமையான கைப்பிடிகள் அழகுற செய்யப்பட்டு,
நெய் பூசப்பட்டு, பயன்படுத்தப் படாமல், அரண்மனையில்
ஓரு பகுதியான கருவிகள் கிடங்கில் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன !
ஆனால் அதியமான்
அரண்மனைக் கிடங்கில் இருந்த வேலும், வாள் போன்ற ஏனைய போர்க்கருவிகளும்
பகைவருடன் அடிக்கடிப் போரிட்டு வெல்லப் பயன்படுத்தப் படுபவதால்,
அவற்றின் தலையும், நுனியும்,
முகமும் மழுங்கிச் சிதைந்து,
சீர் செய்வதற்காக அவ்வப்போது கொல்லனின் பணிக் களரிக்கு அனுப்பி
வைக்கப்பட்டு அங்குக் கொட்டிக் கிடக்கின்றன !
செல்வமும்,
உணவும் நிறைந்திருக்கும் பொழுது எல்லோருக்கும் உணவளித்த பின் உணவு
உண்பவன் எங்கள் மன்னன். நாட்டின் செல்வ
நிலை தளர்ச்சி அடையும் போது அரண்மனை உணவை அனைவருக்கும் பங்கிட்டுத்
தந்து அவர்களுடன் சேர்ந்து உண்பவனும் எங்கள் மன்னன் தான், வறியவர்களின்
சுற்றத்திற்குத் உதவுகின்ற தலைவனும்
எங்கள் மன்னன்தான் !
எம் மன்னனே எம் அன்பிற்குரிய தலைவன். கூரிய
வேலும் அவனே !
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)14]
(31-08-2026)
================================================

No comments:
Post a Comment