புறநானூறு.பாடல்( 83) அடி புனை தொடு கழல் !
==============================
பாடியவர்:
==============================
பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். நக்கண்ணையார் பெருங்கோழி நாய்கனுக்கு மகளாக, திருச்சியின் ஒரு பகுதியாக இன்று விளங்கும் உறையூரில் பிறந்தார். சோழ நாட்டுத் தலைநகர்களுள் ஒன்றான உறையூருக்கு கோழி என்ற பெயரும் உண்டு. நாய்கன் என்பது கடல் வாணிகம் செய்யும் இனத்தார் வைத்துக் கொள்ளும் பெயர். நக்கண்ணையார் புறநானூற்றில் 83, 84, 85 ஆகிய இலக்கங்கள் உடைய பாடல்களும், அகநானூற்றில் 252 - ஆவது பாடலும், நற்றிணையில் 19- ஆவது பாடலும் என மொத்தம் ஆறு பாடல்கள் பாடியுள்ளார்!
பாடப்பட்டோன்:
===============================
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
இவர் சங்க காலத்து முற்காலச் சோழ மன்னர்களுள்
மிக முகாமையான, வீரம் செறிந்த ஒரு பேரரசன்
ஆவார். இவருடைய
பெயரில் உள்ள “போர்வை’ என்பது திருச்சி – கருவூர் வழித்தடத்திலுள்ள “பெட்டவாத்தலை”
என்னும் ஊரின் பழைய பெயர். இந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு கிள்ளி ஆண்டு வந்ததால் இவருக்கு
சோழன் “போர்வை”க்கோப் பெருநற்கிள்ளி
என்று பெயர் வழங்கலாயிற்று !
சங்க இலக்கியமான புறநானூற்றில்
இவரைப் பற்றியும், இவருடைய அஞ்சாத போர்த்திறன்
,அற்றும் மற்போர் திறமையைப் பற்றியும் பல பாடல்கள் விரிவாகப் பேசுகின்றன !
=============================
திணை: கைக்கிளை.
துறை: பழிச்சுதல்.
=============================
=============================
பாடலின் பின்னணி:
=============================
இளம் பருவத்தில் இருக்கும்
சோழ மன்னன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி மீது ஒருதலைக் காதல் கொள்கின்றார் ஓர்
இளம் பெண் புலவர். தன் காதல் தனது தாய்க்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சுவதைப்
பற்றியும், தான் காதலில் துடிப்பதை அறியாமல்
ஆட்சி புரிய உகந்தவன் யார் என்ற கருத்து மோதலில் ஊர் இரண்டுபட்டு நிற்பது பற்றியும்
சொல்லி தான் துடிப்பது
போல இவ்வூரும் துடி துடிக்கட்டும் என்று ஆற்றாமையில், இந்தப் பாடலை எழுதியுள்ளார்
!
==================================================
புறநானூறு.பாடல்( 83) அடி புனை தொடு கழல் !
==================================================
அடி புனை தொடு கழல் மை
அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே,
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே,
என் போல் பெரு விதுப்புறுக, என்றும்
ஒரு பால் படாஅது ஆகி
இரு பாற்பட்ட இம் மையல் ஊரே.
==============================
பொருளுரை:
==============================
உறையூர் மக்களில்
ஒரு சாரார், தம்மைப் “போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி” ஆள வேண்டும் என நினைக்கிறார்கள். மற்றொரு
சாரார் ஆளுகின்ற “தித்தன்” ஆட்சியை விரும்புகின்றனர். ஊர்
இரண்டுபட்டுக் கிடக்கிறது !
சோழன் “போர்வைக் கோப்பெரு
நற்கிள்ளி” கால்களில் வீரக்கழல் அணிந்து இருக்கின்றான். அவன்
முகத்தில் கருந்தாடி இப்போதுதான் அரும்புகிறது. அவன் மீது (ஒருதலைக்) காதலால்
என் உடல் இளைத்து கைகளில் அணிந்துள்ள வளையல் கழன்று நழுவுகிறது
!
இப்படிக் கழன்றோடுவதை என் தாய் பார்த்துவிடக் கூடாதே என்று என் மனம் அஞ்சுகிறது. வளைகள் கழலாமல் இருக்க நான் அவன் தோளைத் தழுவிவிடலாம். ஆனால் மக்கள் கூடியுள்ள ஊரவையில் அதனைச் செய்ய என் நாணம் தடுக்கிறது !
என் மனமோ காதலில் துடிதுடித்துத் தடுமாறுகிறது. ஆனால் என் காதலை அறியாதிருக்கும் இந்த ஊர் ”கிள்ளி” ஆட்சியா, “தித்தன்” ஆட்சியா என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது ! தடுமாறட்டும் ! துடிதுடிக்கட்டும் !
=============================
சொற்பொருள்:
=============================
அடி புனை தொடு கழல் = வீரக்கழல் அணிந்த கால்கள் ; மை அணல் காளைக்கு = கருநிறத் தாடியையுடைய இளைஞன் மேல் கொண்ட காதலால் ; என் தொடி கழித்திடுதல் = அவனை நினத்து உடல் இளைத்ததால், என்னுடைய வளையல்கள் என் கையிலிருந்து கழல்கின்றன. ; யான் யாய் அஞ்சுவலே = என் காதல் என் தாய்க்கு தெரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்; அடு தோள் முயங்கல் = பகைவர்களைக் கொல்லும் அவனுடைய வலிய தோள்களைத் தழுவ விரும்புகிறேன் ; அவை நாணுவலே = ஆனால் அவையின் முன் அவனைத் தழுவதற்கு நாணுகின்றேன் ;
என்றும்
ஒரு பால் படாஅது ஆகி = ஒரு பக்கமும் சாராது ; இரு பாற்பட்ட = இரு பக்கமும் ஆதரவு தந்து உள்ள ; இம் மையல் ஊரே = முடிவெடுக்க முடியாமல் மயங்குகிறது இந்த ஊர் ! என் போல் பெரு
விதுப்புறுக = காதலில் துடிதுடிக்கும் என்னைப் போல் இந்த
ஊரும் மயங்கித் துடி துடிக்கட்டும் ! என்னைப் போன்று பெரியதாக
நடுங்கத்தில் ஆழட்டும் !
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)12]
(29-08-2026)
================================================
