புறநானூறு பாடல் -(05) எருமை
அன்ன கருங்கல் இடை தோறும் !
பாடியவர்:
=============================
நரிவெரூஉத் தலையார். இவர் இயற்றிய பாடல் ஒன்றில் “நரிவெரூஉத்தலை” என்ற சொல் காணப்படுவதால் இவருக்கு இப்பெயர் வந்ததாக பெயர்க் காரணம் கூறப் படுகிறது. இஃதன்றி வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. இவரது இயற்பெயர் தெரியவில்லை. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல்கள் இரண்டு (5, 195). இவர் பாடல்கள் கருத்துச் செறிவு மிக்கவை!
=============================
பாடப்பட்டோன்:
=============================
சேரமான்
கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல். இம் மன்னன் இரும்பொறை மரபைச் சார்ந்தவன். இவனது இயற்
பெயர் ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை. இவன் நாட்டு எல்லை கொங்கு நாட்டில் உள்ள கருவூர் வரை இருந்தது. இவன் கருவூரில் முடிசூட்டிக் கொண்டு அங்கிருந்து
ஆட்சி புரிந்தான் !
=============================
பாடலின் பின்னணி:
=============================
இப்பாடலில்,
சேரமான் கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, குழந்தைகளை ஒரு தாய் எப்படிக் காப்பாளோ அப்படித் தன் நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்று புலவர்
நரிவெரூஉத்தலையார் அறிவுரை கூறுகிறார் !
======================================
திணை: பாடாண். (ஒருவருடைய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது)
======================================
துறை: செவியறிவுறூஉ: (பொருண் மொழிக் காஞ்சியும் ஆகும்)
செவியறிவுறூஉ. (அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அறிவுறுத்தல்) !
பொருண்மொழிக் காஞ்சி. (உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்).
===============================================
புறநானூறு – பாடல் (05)- எருமை அன்ன கருங்கல் இடைதோறும் !
================================================
எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி;
அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே.
=============================
அருஞ்சொற்பொருள்:
=============================
எருமை அன்ன = எருமையைப் போன்ற ; கருங்கல் இடைதோறும் = கரிய நிறமுடைய கருங்கற்களிடையே
;
ஆனிற் பரக்கும் = பசும் புல் தேடி அலைந்து திரியும் பசுக் கூட்டம் போல ; முன்பின்
யானைய = அங்குமிங்கும் யானைகள் திரியும்
; கானக நாடனை = காடுகள் நிறைந்த நாட்டுக்குத் தலைவனே ;
நீயோ பெரும = நீயோ
அரசன் ; நீ ஓர் ஆகலின் = நீ தவறாக எணணவில்லையென்றால்
; நின்ஒன்று மொழிவல் = உனக்கு ஒன்று சொல்வேன் ; அன்பும் அருளும்
நீக்கி = வாழ்க்கையில் அன்பையும் பரிவுணர்வையும் கைக்கொள்ளாது ; நீங்கா நிரயங் கொள்பவரொடு
= நரகத்தைப் போன்ற தவறான வாழ்க்கை வாழ்பவர்களுடன்;
ஒன்றாது = சேராது ; காவல் குழவி கொள்பவரின் = தாய் தன் குழந்தையைக் காப்பது போல ; ஓம்புமதி = உன் மக்களைக் காப்பாற்றுவாயாக; அளிதோ தானேஅது பெறல் = அத்தகைய செயல் செய்யும் வாய்ப்பைப் பெறுவது அரிது ; அருங்கு உரைத்தேன் = இந்த உயர்ந்த கருத்தை உனக்கு உரைத்திடுகின்றேன் !கருத்தை உனக்கு உரைத்திடுகின்றேன் !
=============================
பொருளுரை:
=============================
எருமை
போன்ற கருமை நிறக் கற்கள் பரவிக் கிடக்கும் இடங்களில் மேய்ந்து திரியும் பசுக்கூட்டம் போல, அங்குமிங்கும் யானைகள் திரியும் காடுகளுடைய
நாட்டுக்குத் தலைவனே! நீயோ அரசன் ! தவறாக எண்ணவில்லை என்றால் உனக்கு ஒன்று சொல்வேன் !
அன்பையும்
அருளையும் வாழ்க்கையில் கைக்கொண்டு ஒழுகாது, நரகத்தைப் போன்ற துன்ப வழிகளைச்
சிந்தையிற் கொண்டு, தவறான வாழ்க்கை வாழ்பவர்களுடன் சேராமல், தாய்
தன் குழந்தையைக் காப்பது போல் அன்போடும் அருளோடும் நீ உன் நாட்டைப் காப்பாயாக
!
அத்தகைய செயல் புரிவதற்கான வாய்ப்பைப் பெறுவது அரிது. அதுவே செய்யத்தக்க செயல்; இந்த உயர்ந்த கருத்தை உனக்கு உரைத்திடுகின்றேன் ! சிந்தையிற் கொள்வாயாக !
===============================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)10]
(27-08-2026)
================================================

No comments:
Post a Comment