விரும்பும் பதிவைத் தேடுக !

Wednesday, 26 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (08) வையம் காவலர் வழிமொழிந்து !

 

புறநானூறு – பாடல் (08). வையம் காவலர் வழிமொழிந்து

================================ 

பாடியவர்: 

================================

 

கபிலர்.  இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த திருவாதவூரில் பிறந்தவர், இவர் புறநானூற்றில் 28 பாடல்களையும் கலித்தொகையில் காணப்படும் குறிஞ்சிக் கலி எனப்படும் 29 செய்யுள்களையும் இயற்றியுள்ளார். கபிலர் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்கள்  இருந்ததாகத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர் !


================================
பாடப்பட்டோன்: 

================================

 

சேரமான் கடுங்கோ வாழியாதன். இவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும் அழைக்கப்பட்டான். பதிற்றுப்பத்தில், “ பொறையன் பெருந்தேவி ஈன்ற மகன்” என்று கூறப்படுவதிலிருந்து இவன் அந்துவஞ் சேரல் இரும்பொறைக்கும் பொறையன் பெருந்தேவிக்கும் மகனாகப் பிறந்தவன் என்பது தெரிய வருகிறது. இவன் 25 ஆண்டு காலம் சேர நாட்டை வெகு சிறப்பாக ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது !

================================
பாடலின் பின்னணி: 

================================

 

கதிரவனோடு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை ஒப்பிட்டு, கதிரவன் சேரமானுக்கு இணையானவன் இல்லை என்று இப்பாடலில் கபிலர் கூறுகிறார் !

 

===================================================

திணை: பாடாண். (ஒருவருடைய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது).

===================================================
துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆகும்.
(இயன் மொழி = இயல்பைக் கூறுதல்
பூவை நிலை = மனிதரைத் தேவரோடு உவமித்தல்)
===================================================


===============================================

புறநானூறு – பாடல் (08) வையம் காவலர் வழிமொழிந்து !

===============================================

 

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ, வீங்குசெலல் மண்டிலம்!
பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.

 

===============================
அருஞ்சொற்பொருள்:

===============================

வையம் = இவ்வுலகில் ; காவலர் = ஆளும் அரசர்கள் பலரும் ; சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை = சேரமன்னன் செல்வக் கடுங்கோவை ; வழிமொழிந்து ஒழுக = வழிபட்டு நிற்கையில் ; போகம் = இன்பம் வேண்டி பொதுச்சொல் பொறாஅது = இந்த உலகம் அனைவருக்கும் சொந்தமானது என்னும் கருத்தைப் பொறுத்துக்கொள்ளாமல் ;  இடம் சிறிது = தன்னுடைய நாடு சிறியது ; என்னும் ஊக்கம் துரப்ப = என்னும் எண்ணத்தால் முடுக்கப் பெற்று ;

 

ஒடுங்கா உள்ளத்து = பிற நாடுகளையும் போரிட்டுக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்னும் பெரு விருப்பத்தையும்  ; ஓம்பா ஈகைக் கடந்து = வறியவர்க்கு வரையாது கொடுக்கும் ஈகைக் குணத்தையும் ; அடு தானைச் சேரலாதனை = பகைவரைப் போரிட்டு  வெல்லும் பெரும்படையையும்  வைத்திருக்கும்   ; சேரலாதனை = மன்னன் சேரலாதனை ; வீங்கு செலல் மண்டிலம் = இரவு பகலென  ஓடிக்கொண்டே இருக்கும் கதிரவனே;

 

பொழுது என வரைதி = உனக்குப் பகல் இரவு என்ற எல்லை உண்டு;   புறக்கொடுத்து இறத்தி = பகல் முடிந்ததும் புறமுதுகிட்டு ஓடுவாய்; மாறி வருதி = இரவு பகல் என மாறி மாறி வருவாய்; மலைமறைந்து ஒளித்தி = மலைகளில் மறைந்து விடுவாய்; அகல்இரு விசும்பினானும் = அகன்ற, பெரிய ஆகாயத்தில் ;  பகல் விளங் குதியால் பல்கதிர் விரித்தே = பகலில் மட்டும் பல கதிர்களை விரித்து விளங்கும் நீ ; யாங்கனம் ஒத்தியோ = எவ்வாறு அவனுக்கு  ஒப்புமை உடையவன் ஆவாய் ?  .

 

===============================

பொருளுரை: 

===============================

 

வட்டவடிவமான பெரிய பாதையில் செல்லும் கதிரவனே!

உலகைக் காக்கும் மன்னர்கள் பலரும் வழிபட்டு நடக்க, இன்பத்தை விரும்பி, இவ்வுலகு அனைவருக்கும் பொது என்ற சொல் பொறுக்காமல், தன் நாடு சிறியது என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, தன் நாட்டை விரிவாக்க வேண்டும் என்னும் ஊக்கம் மிகு  உள்ளத்தையும், குறையாத ஈகையையும் பகைவரை வெல்லும் படையையும் உடையவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் !

 

உனக்குப் பகல் இரவு என்ற எல்லை வரையறை உண்டு; பகல் முடிந்ததும் புறமுதுகிட்டு ஓடுவிடுவாய்; காலையில் எழுவதும் மாலையில் மறைவதுமாய் மாறி மாறி வருவாய்; மலைகளில் மறைந்து விடுவாய்; அகன்ற, பெரிய ஆகாயத்தில் பகலில் மட்டும் பல கதிர்களை விரித்து விளங்கும் நீ த்தகைய குறைபாடுகளை உடைய நீ - எவ்வாறு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு நிகராவாய் ?

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)09]

(26-08-2026)

================================================

                                                   


No comments:

Post a Comment