புறநானூறு .(12) பாணர்
தாமரை மலையவும் !
==============================
பாடியவர்.
==============================
நெட்டிமையார்.
நெட்டிமையார்
சங்க காலப் பெண் புலவர்களில் ஒருவர்.
நீண்ட இமைகளை உடையவர் என்ற காரணத்தால் நெட்டிமையார் எனும் பெயர்
அமைந்திருக்கலாம். இவர் பாடிய 3 பாடல்கள் சங்கத்தொகை
நூல்களில் ஒன்றான புறநானூற்றில் இடம்
பெற்றுள்ளன !
==============================
பாடப்பட்டோன்
==============================
பாண்டியன் பல்யாகசாலை
முதுகுடுமிப்
பெருவழுதி. குடுமி என்ற
இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவன் ஆவான். கடைச் சங்க காலத்திற்கு
முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப் படுகின்றது. மூத்த குடும்பன் என்பதனால் முதுகுடுமி என
அழைக்கப்பட்டான். பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப்
பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான். வழுதி என்ற
பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற
சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான் !
==============================
திணை : பாடாண்.
துறை : இயன் மொழி
==============================
==============================
பாடல் பின்னணி:
==============================
பாண்டியன்
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பழிப்பது போல் புகழ்ந்து
இயற்றிய பாடல் இது !
=======================================
பாணர் தாமரை மலையவும்,
புலவர்
பூ நுதல் யானையோடு புனை தேர் பண்ணவும்,
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி,
இன்னா ஆகப்
பிறர் மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?
==============================
பொருளுரை:
==============================
முதுகுடுமிப்
பெருவழுதியே! பாணர்களுக்குப் பொன்னால் செய்த தாமரை மாலையைச்
சூட்டுகிறாய்; புலவர்களுக்கு
ஒப்பனை செய்யப்பட்ட தேரினை அளிக்கிறாய் ; அத்துடன் பொன்னால் செய்யப்பெற்ற பட்டத்தை நெற்றியில் பூணப் பெற்ற யானையையும் பரிசாக அளிக்கிறாய். உன்னை நாடி வந்து பரிசு பெறுவோர் முகத்தில் மகிழ்ச்சி பொங்குமாறு
நீ நிரம்பவே நல்லவை செய்கிறாய்
; அள்ளி அள்ளிக் கொடுக்கிறாய் ! மறுபுறம் உன் பகை மன்னர்களுக்குத்
துன்பம் தரும் வகையில்
போரிட்டு, அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொள்கிறாயே; இது அறமான
செயல்தானா?
குறிப்பு: இது
பழித்தது போல் புகழ்ந்தது.
============================================
===============================
சொற்பொருள்:
===============================
பாணர்
= இசைப் பாவலர்களுக்கு ; தாமரை = பொற்றாமரை மலர்களை; மலையவும்
= மாலையாகச் சூட்டவும் செய்கிறாய்
; புலவர் = புலவர்களுக்கு ; பூ நுதல் = யானைகளின்
நெற்றியில் சூடும் அணிகலனான பொற்பட்டம் அணிவித்து ; யானையோடு =
யானையும் தருகிறாய் ; புனை = ஒப்பனை செய்யப்பட்ட
; தேர் = தேரினை
; பண்ணவும் = அளிக்கவும் செய்கிறாய்
; நின் = உன்னை நாடி வந்து பரிசு பெறும்
; ஆர்வலர் = பாணர், புலவர்
போன்றோர் ; முகத்தே = முகத்தில் மகிழ்ச்சி தோன்றுமாறு
; இனிய = இனியவற்றை; செய்தி = செய்யும்
நீ ;
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)11]
(28-08-2026)
================================================

No comments:
Post a Comment