விரும்பும் பதிவைத் தேடுக !

Tuesday, 25 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (48) கோதை மார்பிற் கோதை யானும் !

 

புறநானூறு – பாடல். (48). கோதை மார்பிற் கோதை யானும் !

=============================

பாடியவர்: 

=============================

 

இப்பாடலைப் பாடியவர் பொய்கையார்.  இவருடைய ஊர் தொண்டி என்பது இப்பாடலின் வரிகளிலிருந்து தெரிகிறது. புறநானூற்றில் இவர் பாடிய இரண்டு பாடல்களும் (48, 49). சேரமான் கோக்கோதை மார்பனைப் பற்றிப் பாடப்பட்டவையாகும். நற்றிணையில் இவர் 18 – ஆம் பாடலைப் பாடியுள்ளார்.

==============================
பாடப்பட்டோன்: 

==============================

 

பாடப்பட்டோன் சேரமான் கோக்கோதை மார்பன். கோதை மார்பன் என்பது இவன் இயற்பெயர் என்றும்,  தொண்டி என்னும் ஊரைத் தலைநகரமாகக் கொண்டு தன் நாட்டை ஆட்சி செய்தான் என்றும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார் !

 


கோக்கோதை மார்பன், சேரன் செங்குட்டுவனின் மகன் என்றும் இவன் குட்டுவன் கோதை, கோதை மார்பன், மாக்கோதை மார்பன், கடுமான் கோதை, செங்கோல் குட்டுவன், கடும்பகட்டியானை நெடுந்தேர்க் குட்டுவன், வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன் முதலிய பெயர்களாலும் அழைக்கப் பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் !

==============================

பாடலின் பின்னணி: 

==============================

 

சேரன் கோக்கோதை மார்பனிடம் சென்று அவனைப் பாடிப் பரிசில் பெற்ற புலவர் பொய்கையார், வேறொரு புலவரை அவனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது !
====================================

திணை: பாடாண். (ஒருவருடைய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது)

=====================================
துறை: புலவர் ஆற்றுப்படை. (புலவன் ஒருவன் இரவலனாக வந்த மற்றொரு புலவனை நோக்கித் தன் தலைவனிடத்தே செல்லுமாறு ஆற்றுப்படுத்தல்)
======================================

===============================================

புறநானூறு – பாடல். (48). கோதை மார்பிற் கோதை !

================================================

கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி;
அஃதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்;
அன்னோர் படர்தி ஆயின் நீயும்
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
அமர்மேம் படூஉங் காலை நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.

=============================

அருஞ்சொற்பொருள்:

==============================

கோதை = சேரன் ; மார்பின் கோதை  = மார்பில் அணிந்த பூமாலை ; கோதையை = சேர மன்னனை ; புணர்ந்தோர் = அவையில் கூடியுள்ள மகளிர்  அணிந்த  ; கோதையானும் = மலர் மாலைகளாலும் ; மாக்கழி = பெரிய ; உப்பங்கழி ; மலர்ந்த நெய்தலானும் = மலர்ந்திருக்கும் நெய்தல் மலர்களாலும் ; கள் = தேன் ; நாறும்மே = மணக்கும் ; கானல் = கடற்கரைச் சோலை நிறைந்த  ; அம் தொண்டி அஃது எம் ஊரே = அழகிய தொண்டி நகரம் தான் எனது ஊர் ; ; அவன் எம் இறைவன் = அந்நகரை ஆள்பவன் எம் தலைவனாகிய கோதை ; அன்னோர்  படர்தியாயின்  = அவனைக் காண்பதற்குச் நீ செல்வாயாயின் ; நீயும் எம்மும் உள்ளுமோ =  என்னை நினைவிற் கொள்வாயா ; முதுவாய் இரவல = தேர்ந்த  வாய்மையுடைய இரவலராகிய புலவரே ;  அமர் மேம்படூஉங்காலை = சேரன் கோதை போரில் வெற்றி அடைகையில்  ; புகழ் மேம்படுநனை = அவன் புகழைப் பாராட்டிப் பாடுபவனை  ; கண்டனம் = கண்டேன் ; எனவே = என்று அவனிடம் சொல்வாயா?
=============================

பொருளுரை

=============================

 

சேரன் கோக்கோதை மார்பில் அணிந்த மாலையாலும், அந்தக் கோதையைக் கூடிய மகளிர் அணிந்த மாலைகளாலும், பெரிய உப்பங்கழிகளில் மலர்ந்த நெய்தல் மலர்களாலும் தேன்மணம் கமழும் கடற்கரைச் சோலைகளை உடையது தொண்டி நகரம். அது என்னுடைய ஊர். அவ்வூரில் உள்ள சேரன் கோக்கோதை மார்பன் என் அரசன். முதிய வாய்மையுடைய இரவலனே! அத்தன்மையுடைய தொண்டி நகரத்திற்கு நீ சென்றால், என்னை நினைவில் கொள்வாயா? ”நீ போரில் வெற்றி அடையும்பொழுது உன் புகழைப் பாராட்டிப் பாடுபவனைக் கண்டேன்” என்று சேரன் கோக்கோதை மார்பனிடம் கூறுவாயாக !

===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)08]

(25-08-2026)

================================================

                                                         


   


 


No comments:

Post a Comment