புறநானூறு (57) வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் !
===============================
பாடியவர்:
================================
காவிரிப்பூம்
பட்டினத்துக் காரிக்கண்ணனார். இவர் புறநானூற்றில் ஐந்து
பாடல்கள் (57, 58,169,171, 353) இயற்றியது மட்டுமல்லாமல்,
அகநானூற்றில் மூன்று பாடல்களும் (107, 123, 285), குறுந்தொகையில் ஒரு பாடலும் (297) இயற்றியுள்ளார்
!
==============================
பாடப்பட்டோன்:
==============================
பாண்டியன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். இலவந்திகை என்ற சொல்லுக்கு நீர்நிலையைச்
சார்ந்த சோலை என்று பொருள். இப்பாண்டிய மன்னன் ஒரு இலவந்திகையில் இருந்த
பள்ளியறையில் இறந்ததால் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்று
அழைக்கப்பட்டான் என்று கூறுவர் !
==============================
பாடலின் பின்னணி:
==============================
ஒரு
சமயம், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
பகைவருடன் போர் செய்வதற்குச் சென்று கொண்டிருந்தான். அவனுடைய வலிமையையும் போர்
புரியும் ஆற்றலையும் நன்கு அறிந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்,
“வேந்தே, உன் வீரர்கள் பகைவர்களின் நாட்டு
வயல்களை கொள்ளை கொண்டால் கொள்ளட்டும்; வேண்டுமானால்
அவர்களின் ஊர்களுக்குத் தீ மூட்டுக; ஆனால், அவர்களின் காவல் மரங்களை வெட்டுவதைத் தவிர்ப்பாயாக.” என்று இப்பாடலில்
அவனுக்கு அறிவுறை கூறுகிறார்.
===============================
திணை: வஞ்சி. (வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின்
நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்)
================================
துறை: துணை வஞ்சி. (பிறரை வெற்றி கொள்ளத் தூதராகிச்
செய்தி அறிவித்தல் )
=================================
===============================================
புறநானூறு (57) வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் !
================================================
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற !
நின்னொன்று கூறுவது உடையேன்; என்னெனின்
நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை அவர்நாட்டு
இறங்குகதிர் கழனிநின் இளையரும் கவர்க;
நனந்தலைப் பேரூர் எரியும் நக்க;
மின்னுநிமிர்ந் தன்னநின் ஒளிறுஇலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்புநின்
நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே.
========================================
அருஞ்சொற்பொருள்:
========================================
வல்லார் = திறமையில்லாதவர் ; வல்லுநர் = திறமையுள்ளவர் ; புகழ்தலுற்றோர்க்கு = உன்னைப் புகழ்பவர்களுக்கு
; மாயோன் = மணிவண்னன் ; உரை
= சொல் ; சாலல் = மேன்மையாதல்,;
மாற = பாண்டியன் மாறனே !; இறங்கு கதிர் = வளைந்த நெற் கதிர்கள் ; கழனி = வயல்கள் ; ; இளையர் = படை வீரர்கள் ; கவர்தல் = எடுத்தல் (கொள்ளையடித்தல்) ; நனந்தலை = அகன்ற ; பேரூர்
= பெரிய ஊர்கள் ; நக்க = தீயிட்டு எரிக்க ; மின்னு நிமிர்ந்தன்ன
= மின்னல் ஒளிர்வதைப் போல ; இலங்கல் = விளங்குதல் ; நெடுவேல் = உனது நீண்ட வேல் ; ஒன்னார்
= பகைவர்; செகுத்தல்
= அழித்தல் ; என்னதூஉம் = சிறிதும் ; கடிமரம் = பகைவர் அணுகாவண்ணம்
வளர்த்துக் காக்கப்படும் காவல் மரம் ; தடிதல் = வெட்டியழித்தல்
; ஓம்புதல் = தவிர்த்தல் ; கந்து = யானை கட்டும் தறி ;
ஆற்றா = பயன்படாது.
============================================
பொருளுரை:
=============================================
திறமையற்றவர்,
திறமையுடையவர், யாராக இருந்தாலும், உன்னைப்
புகழ்வோர்க்கு அருள் புரிவதில் நீ மணிவண்ணனைப் போன்றவன்.
மாறனே! நான் உன்னிடம் ஒன்று கூறுவேன். அது என்னவென்றால், பிறர்
நாட்டின் மீது நீ படையெடுத்துச் செல்லும் பொழுது, அவர்களின் நாட்டில், விளைந்திருக்கும் நெல்
வயல்களை உன்னுடய வீரர்கள் கொள்ளையடித்தாலும் அடிக்கட்டும்;
பெரிய ஊர்களை எல்லாம் தீயால் எரித்தாலும்
எரிக்கட்டும்; உன்னுடைய நெடிய வேல், பகைவர்களை அழித்தாலும் அழிக்கட்டும்; ஆனால் அவர்களுடைய
காவல் மரங்களை வெட்டுவதை மட்டும் தவிர்த்து விடுவாயாக !
ஏனெனில், உன் யானைகளுக்கு அம்மரங்கள் கட்டுத் தறியாகும்
தகுதி அற்றவை !
(காவல் மரங்களை வெட்டினால் போர் முடிவுபெறும். ஆகவே, காவல் மரங்களை வெட்டாமல் இருந்தால், பகைவர்கள்
பணிந்து திறை (கப்பம்) கட்டுவதற்கு உடன்பட வாய்ப்புண்டு.
அதனால், புலவர், காவல் மரங்களை
வெட்டுவதைத் தவிர்த்துப் பகைவர்களுடன் சமாதானமாகப் போவதற்கு வழிவகுக்குமாறு
இப்பாடலில் பாண்டியனுக்கு மறைமுகமாக அறிவுரை கூறுகிறார்).
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)08]
(25-08-2026)
================================================
.jpg.jpeg)
No comments:
Post a Comment