புறநானூறு (59) ஆரம் தாழ்ந்த அணிகிளர் !
==================================
பாடலின் பின்னணி:
==================================
பாண்டியன்
சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறனின் மாலை சூடிய மார்பையும், நீண்ட வலிய கைகளையும் பாராட்டி,
புலவர் பெருந்தலைச் சாத்தனார் இப்பாடலில் அவனை விதந்து போற்றிப்
புகழ்கிறார்.
===================================
பாடியோர்:
====================================
பெருந்தலைச்
சாத்தனார். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் பாடல் எண் 151,164,165, 205,
209, மற்றும் 294 -ஆக இடம்பெற்றுள்ளன. இவர் பெருந்தலை என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பெயரில்
பல ஊர்கள் இருப்பதால் தமிழ் நாட்டில் இவர் எந்தப் பகுதியைச்
சார்ந்தவர் என்று உறுதியாகக் கூறமுடியவில்லை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்!
இவர் புறநானூற்றில் ஆறு செய்யுள்களும்
அகநானூற்றில் இரண்டு செய்யுள்களும் (13, 224) நற்றிணையில் ஒரு செய்யுளும் (262) பாடியுள்:ளார் !
===================================
பாடப்பட்டோன்:
=====================================
கோவலன்
கொலையுண்டதைத் தொடர்ந்து மதுரை மன்னன் ஆரியப்படை கடந்த
நெடுஞ்செழியன் “யானோ அரசன்? யானே கள்வன்” என்று கூறி உயிர்
துறந்தான் !
அவன்
இறந்த பின், அவன் தம்பி வெற்றிவேற்
செழியன், மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். பல்லாண்டு
கால ஆட்சிக்குப் பிறகு வெற்றிவேற்
செழியன் சித்திரமாடம் என்ற இடத்தில் இறந்ததால், அவன் சித்திர
மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று அழைக்கப்பட்டான் !
======================================
திணை : பாடாண் திணை (ஒருவருடைய
நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
======================================
துறை: பூவை நிலை
(மனிதரைத் தேவரோடு ஒப்பிட்டுக் கூறுதல்)
=======================================
===============================================
புறநானூறு – பாடல் (59) ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பு !
================================================
ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி !
வல்லை மன்ற நீநயந் தளித்தல் !
தேற்றாய் பெரும ! பொய்யே; என்றும்
காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை நின் பகைவர்க்கு;
திங்கள் அனையை எம்ம னோர்க்கே !
===========================================
பொருளுரை
===========================================
மாலை
தவழும் எழில்மிகுந்த அகன்ற மார்பையும்,
முழங்காலைத் தொடுமளவு நீண்ட தடக்கைகளையும்
உடைய மாட்சிமைக்குரிய பாண்டிய மன்னா ! வழுதியே
!
மக்கள் அனைவரும் மகிழும்படி அவர்களுக்கு அருள் செய்வதில் மெய்யாகவே வல்லவன்
நீ ! என்றுமே பொய்யுரை புகலமாட்டாய் ! வெப்பம் கிளர்ந்து எழும் ஞாயிறைப் போன்றவன் உன் பகைவர்க்கு ! எம்போன்ற புலவர்களுக்கோ, குளிர்ந்த ஒளி தரும் திங்களைப் போன்றவன் !
================================
அருஞ்சொற்பொருள்:
================================
ஆரம் = மாலை; தாழ்ந்த = அணிந்த ; அணி = அழகு;
கிளர்தல் = மிகுதல் ; தாள் தோய் = (முழங்) கால்களைத் தொடுகின்ற
; தடக்கை = நீண்ட கை ; தகைமாண் = தகுதியும் மாண்பும் உடைய ; வழுதி
= பாண்டிய மன்னா !; வல்லை = வலிமை ; மன்ற = உறுதியாக,
தெளிவாக; நயந்து அளித்தல் = விரும்பி வழங்குதல் ; தேற்றல் = அறிவித்தல் (சொல்லுதல்); காய்தல் =
சினத்தல் ; தவிராது = நீங்காது ; கடல் ஊர்பு = கடலிலிருந்து ;
எழுதரு = எழுகின்ற; ஞாயிறு அனையை = கதிரவனைப் போன்றவனே ; நின் பகைவர்க்கு = உனது
எதிரிகளுக்கு ; திங்கள் அனையை = குளிர் ஒளியைத் தரும் நிறைமதியைப் போன்றவன் ; எம்மனோர்க்கே = எம் போன்ற புலவர் களுக்கு!
================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)07]
(24-08-2026)
================================================
No comments:
Post a Comment