விரும்பும் பதிவைத் தேடுக !

Tuesday, 25 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (46) நீயோ, புறவின் அல்லல் !

புறநானூறு – பாடல் (46) நீயோ, புறவின் அல்லல் !

 

===========================

பாடியவர்: 

===========================

 

கோவூர் கிழார். இவர் கோவூரைச் சேர்ந்தவர். இவ்வூர் சென்னை போரூரிலிருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. (குறிப்பு: ஆந்திர மாநிலத்திலும் நெல்லூர் மாவட்டத்தில் கோவூர் என்று மற்றொரு ஊர் உள்ளது). வேளாண்குடி மரபினர். இவர் புறநானூற்றில் 15 பாடல்களை (31-33, 41, 44 - 47, 68, 70, 308, 373, 382, 386, 400) பாடியிருக்கிறர். சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்ட பொழுது, “ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியேஎன்று எடுத்துக்காட்டி, அவர்களை அமைதி கொள்ள வைத்து போரைத் தடுத்தி நிறுத்தியவர் !

 

=============================

பாடப்பட்டோன்: 

=============================

 

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். கிள்ளிவளவன் வீரத்திலும் வெற்றியிலும் கொடையிலும் மிகச் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், சிறந்த தமிழ்ப் புலமை  டையனாகவும் இருந்தான் என்பது இவன் இயற்றியதாகப் பேசப்படும் புறநானூற்றில் உள்ள ஒரு பாடலிலிருந்து (பாடல் 173) தெரிகிறது.

 

============================
பாடலின் பின்னணி: 

============================

 

கிள்ளிவளவன், தன் பகைமன்னனாகிய  மலையமான் என்பவனின் புதல்வர்களை யானையின் காலின் இட்டுக் கொல்ல முயன்றான். அதைக் கண்ணுற்ற கோவூர் கிழார், சிறுவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டி, கிள்ளிவளவன் முன்  ஒரு பாடலைப் பாடினார். “ஒருபுறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே அளித்த சிபி மன்னனின்  வழித்தோன்றல் நீ. இவர்கள் யார் ? புலவர்களுக்குப் பெருமளவில் ஆதரவளித்த மன்னன் மலையமானின் புதல்வர்கள்; இவர்களைத் துன்புறுத்தாமல் விட்டுவிடு. அவ்வளவுதான் ! நான் கூற வேண்டியதைக் கூறிவிட்டேன். நீ உன் விருப்பப்படி செய்.”

 

========================================
திணை: வஞ்சி. (வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்).

=========================================
துறை: துணை வஞ்சி. (பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குத் தூதராகிச் செய்தி சொல்லுதல்)

=========================================

புறநானூறு (46) நீயோ, புறவின் அல்லல் !

=========================================

நீயோ, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்தலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கண்நோ வுடையர்
கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே.

===============================
அருஞ்சொற்பொருள்:

===============================


புறவின் = ஒரு புறாவின் ; அல்லல் = துன்பம் ; அன்றியும் = அல்லாமலும் ; பிறவும் = பிற உயிரினங்களின் ; இடுக்கண் = துன்பம்; விடுத்தோன் = களைந்த சிபி மாமன்னனின் ; மருகன் = வழித்தோன்றல் ; இவரே = இவர்களோ ; புலன் உழுது உண்மார் = அறிவை முதலீடாக வைத்து வாழும் புலவர்களின்  ; புன்கண் அஞ்சி  = வறுமையை எண்ணி அஞ்சி ; தமது பகுத்து உண்ணும் = தம்மிடம் உள்ளதை அவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து உண்கின்ற ; தண்ணிழல் வாழ்நர் = இரக்க சிந்தனை உடைய மரபில் வந்தவர்கள் ;  களிறு கண்டு அழூஉம் = முன்பு யானைகளைக் கண்டு அஞ்சி அழுதனர் ; அழாஅல் மறந்த = ஆனால் இந்த மன்றத்தைப் பார்த்தவுடன்  வியப்பால் தங்கள் அழுகையை மறந்தனர் ; மன்று = மன்றம்; மருளல் = வெருளுதல், அஞ்சுதல். புன்தலைச் சிறாஅர் = சிறிய தலையையுடைய சிறுவர்கள்;  விருந்திற் புன்கண் நோவுடையர் = முன்பு அறியாத புதிய துன்பத்தை அவர்கள் இப்பொழுது அடைந்திருக்கிறார்கள் ; கேட்டனை யாயின் = நான் உரைத்ததை நீ செவி மடுத்தது உண்மையாயின் ; நீ வேட்டது = நீ விரும்பியபடியே ; செய்ம்மே = செய்துகொள்வாயாக !

 

(நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்; இனி உன் விருப்பம் போல் செய்து கொள்வாயாக - அதாவது இந்தச் சிறுவர்களைக் கொல்ல விரும்பினால் கொல்க என்று பொருள். புலவர் அறிவுரையை மீறி மன்னன் தவறு செய்வான் என்றா நினைக்கிறீகள் ?)  


================================

பொருளுரை:

================================


நீயோ, ஒருபுறா அடைந்த துன்பம் மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களின் துன்பத்தையும் களைந்த சிபியின் வழித்தோன்றல். இவர்களோ, அறிஞர்களின் வறுமைக்கு அஞ்சித், தம்மிடத்து உள்ளவற்றைப் பகிர்ந்து உண்ணும் இரக்க குணமுள்ளவர்களின் மரபினர். இவர்கள், முன்பு யானைகளைக் கண்டு அஞ்சி அழுதனர்; இப்பொழுது இந்தச் சிறுவர்கள் இந்த மன்றத்தைப் பார்த்த வியப்பால் தங்கள் அழுகையை மறந்தனர். ஆனால், முன்பு அறியாத புதிய துன்பத்தை அவர்கள் இப்பொழுது அடைந்திருக்கிறார்கள். நான் கூறியதைக் கேட்ட பிறகு நீ உன் விருப்பப்படி செய்க !

================================================
================================

சிறப்புக் குறிப்பு: மலையமானின் புதல்வர்களைக் கொல்ல நினைக்கும் கிள்ளிவளவனிடம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறி கோவூர் கிழார் அவனை அமைதி கொள்ளச்    செய்வதால், இப்பாடல் துணை வஞ்சி என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று !
=================================

===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)08]

(25-08-2026)

================================================