விரும்பும் பதிவைத் தேடுக !

Wednesday, 26 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) -(21) புலவறை இறந்த புகழ் சால் !

 

புறநானூறு – (21) புலவரை இறந்த புகழ்சால்

 

===============================

பாடியவர்: 

===============================

 

ஐயூர் மூலங்கிழார். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் ஐயூர் மூலம் என்ற ஊரைச் சார்ந்தவராதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்பாடலில், இவர் வேங்கை மார்பனை வென்ற கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியைப் புகழ்ந்து பாடியுள்ளார். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.

 


===============================

பாடப்பட்டோன்: 

===============================

 

 

கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி. கானப்பேர் என்னும் ஊர் தற்காலத்தில் காளையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. கானப்பேர் என்ற ஊர், வேங்கை மார்பன் என்ற மன்னனால் ஆட்சிசெய்யப்பட்டு வந்தது.

அது பல அரிய அரண்களை உடைய ஊராகச் சிறந்து விளங்கியது. அந்த அரண்களையெல்லாம் கடந்து, வேங்கை மார்பனை வெற்றி கொண்டதால் இப் பாண்டிய மன்னன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்ற பெயரால் சிறப்பிக்கப் பட்டான் !

 


===============================

பாடலின் பின்னணி: 

===============================

 

கானப்பேரெயிலின் அரண்களின் சிறப்பையும், அந்த ஊருக்கு உரியவனான வேங்கை மார்பன், உக்கிரப் பெருவழுதியிடம் தோல்வியுற்ற பிறகு, தன் ஊரை மீட்பது, உலையில் காய்ச்சிய இரும்பின் மீது சொரிந்த நீரை மீட்பது போன்ற அரிய செயல் என்று எண்ணி வருந்துவதாககவும் இப்பாடலில், ஐயூர் மூலங்கிழார் கூறுகிறார்.

 


===============================================
திணை: வாகை. (வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்) 

===============================================
துறை: அரசவாகை. (அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்)

===============================================


===============================================

புறநானூறு (21) புலவரை இறந்த புகழ்சால் !

===============================================

 

புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்
நிலவரை இறந்த குண்டுகண் அகழி,
வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்,
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்;
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிதுஎன
வேங்கை மார்பன் இரங்க, வைகலும்
ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே!
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்க நின் வேலே.

===============================
அருஞ்சொற்பொருள்:

===============================


புலவரை (புல + வரை) = அறிவின் எல்லை  ; இறந்த = கடந்த; புகழ்சால் = புகழ் மிகுந்த; தோன்றல் = அரசன் ; நிலவரை = நிலத்தின் எல்லை ; குண்டு = ஆழம்; கண் = இடம்.  வான் தோய்வு அன்ன = வானளாவிய ; புரிசை = மதில்;

 

விசும்பு = ஆகாயம் ; மீன் பூத்த அன்ன = வானத்து மீன்கள் காட்சி கொடுப்பதைப் போல ;  ஞாயில் = மதிலில் உள்ள அம்பெய்தற்குரிய துளை; கதிர் நுழைகல்லா = கதிரவனின் ஒளிக் கதிர்கள் நுழையமுடியாத அளவுக்கு ; மரம்பயில் = மரங்கள் செறிந்த; கடிமிளை = காவற்காடு ; அருங் குறும்பு = அருமையான அரண்; உடுத்த = சூழ்ந்திருக்க ; கானப் பேர் எயில் = கானப் பேர் நகரத்து அரணைக் கடந்து அதைக் கைப்பற்றுவது ;  கருங்கைக் கொல்லன் = இரும்பு வினைஞன் ; செந்தீ மாட்டிய ; உலையில் காய்ச்சிய ;

 

இரும்பு உண் நீரினும் =  பழுக்கக் காய்ச்சிய இரும்பில் பட்ட நீரைப் போல ; மீட்டற்கு அரிது = மீட்பதற்கு அரிய செயல் என்று  ; இரங்க = வருந்த; வைகலும் = நாளும் ; ஆடுகொளக் குழைந்த தும்பை = வெற்றிமேல் வெற்றி பெறுவதற்காக தும்பை மலர்கள் நிறைந்த மாலைகளை அணியும் பாண்டியனே ! ; புலவர் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே = புலவர் பாடும் புறத்திணைக்குரிய துறைகளில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளைச் செயலில் செய்து முடித்த வெற்றி வேந்தனே !;

இகழுநர் இசையொடு மாய = உன்னை மதியாத பகைவர்கள் தம்முடைய புகழுடன் அழிய ; புகழொடு விளங்கிப் பூக்க நின் வேலே ! = உன் வேல் புகழுடன் விளங்கி வெற்றியுடன் பொலிவதாக !


===============================
பொருளுரை

===============================

 

பாண்டிய வேந்தே ! உக்கிரப் பெருவழுதியே ! உன்னைப் பாடும் புலவர்களின் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட புகழமைந்த அரசே! நிலத்தின் எல்லையைக் கடந்த ஆழமான பாதாளத்தில் உள்ள அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் விண்மீன்கள் பூத்ததுபோல் காட்சியளிக்கும் அம்பு எய்தும் துளைகளும், கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாதவாறு மரங்கள் செறிந்த காவற் காடுகளும், அணுகுதற்கரிய சிற்றரண்களும் உடையது கானப்பேர். அத்தகைய அரண்களை யுடைய கானப்பேரை நீ வெற்ரிகொண்டாய் ! அதை உன்னிடமிருந்து மீட்பது, வலிய கையையுடைய கொல்லன், எரியும் தீயில் காய்ச்சிய இரும்பில் சொரியப்பட்ட நீரை மீட்பது எவ்வளவு அரிதோ அதைவிட அரிது என்று வேங்கை மார்பன் வருந்த, நாள்தோறும் வெற்றிமேல் வெற்றி பெறுவதற்காக தும்பை மலர்கள் நிறைந்த மாலைகளை அணிபவனே! பாண்டியனே !

 

புலவர் பாடும் புறத்திணைக்குரிய துறைகளில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளைச் செயலில் செய்து முடித்த வெற்றி வேந்தனே! உன்னை மதியாத பகைவர்கள் தம்முடைய புகழுடன் அழிய, உன் வேல் புகழுடன் விளங்கி வெற்றியுடன் பொலிவதாக !

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)09]

(26-08-2026)

================================================