புறநானூறு – பாடல் (25) மீன்திகழ் விசும்பின் பாய்இருள் !
==============================
பாடியவர்:
==============================
இப்பாடலைப் பாடியவர்
கல்லாடனார். இவர் கல்லாடம் என்ற ஊரினராக இருந்திருக்கலாம் என்று
கருதப்படுகிறது. புறநானூற்றில் இவர் ஐந்து செய்யுள்கள் (23,
25, 371, 385, 391). இயற்றியது மட்டுமல்லாமல், அகநானூற்றில் ஏழு செய்யுள்களையும் (9, 83,
113, 171, 198, 209, 333) குறுந்தொகையில் இரண்டு செய்யுள்களையும் (260, 269) இயற்றியுள்ளார் !
================================
பாடப்பட்டோன்:
================================
இப்பாடலின் பாட்டுடைத்
தலைவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். பாண்டிய
நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்த மன்னர்களில் இவனும் ஒருவன்.
சிறுவதிலேயே பாண்டிய நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டப்பட்டவன்.
ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, தலையாலங்கானத்தில்
நடைபெற்ற போரில் ஏழு மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றதால்
இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான். இவன் சிறந்த அரசன்
மட்டுமல்லாமல் சிறந்த புலவனாகவும்
திகழ்ந்தான் என்பது புறநானூற்றில் அவன் இயற்றிய பாடல் எண் 72
மூலம் தெரிய வருகிறது !
=============================
பாடலின் பின்னணி:
=============================
பாண்டியன்
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனோடு போரிடுகையில் தோல்வியுற்ற சேரனும் சோழனும் இறந்தனர்; அவர்களின் படைவீரர்கள் பலரும் இறந்தனர். இறந்தவர்களின் மனைவியர் தம்
கூந்தலைக் கொய்து கைம்மை நோன்பை மேற்கொள்ளும் அவலக் காட்சியைக் கண்டதும்
நெடுஞ்செழியன் போரை நிறுத்தியதாக இப்பாடலில் கல்லாடனார் கூறுகிறார்.
=========================================
திணை: வாகை. (வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்)
========================================
துறை: அரசவாகை. (அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்)
======================================================
============================================
புறநானூறு- பாடல் (25) மீன்திகழ் விசும்பின் !
============================================
மீன்திகழ் விசும்பின்
பாய்இருள் அகல
ஈண்டுசெலல் மரபின் தன் இயல் வழாஅது
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்கு
உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,
பிணியுறு முரசம் கொண்ட காலை
நிலைதிரிபு எறியத் திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ நின்வேல்; செழிய!
முலைபொலி அகம் உருப்ப நூறி,
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்,
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர்அறல் கடுக்கும் அம்மென்
குவைஇரும் கூந்தல் கொய்தல் கண்டே.
==============================
பொருளுரை:
==============================
விண்மீன்கள்
திகழும் ஆகாயத்தில் பரவிய இருள் அகல, வெப்பத்தையும் ஒளியையும்
பொழியும் கதிரவனும்,
பேரொளி தரும் திங்களும் வந்து நிலத்தில் இறங்கியதைப் போல, சேர
சோழ மன்னர்கள் இருவரும் போர்க்களம்
புகுந்தனர். உன்னை அழிக்கப்
புகுந்த இருவரையும் போர்க்களத்தில் நிலைகலங்கச் செய்து நீ அழித்தாய்.
கொடிய அவர்களிடமிருந்து, வாரால் பிணிக்கப்பட்ட
போர்முரசுகளைக் கைப்பற்றினாய்; நின்ற நிலையிலே நின்று,
உன்னைச் சூழ்ந்த பகை வீரர்களைப் பிடித்துத் தூக்கியெறிந்தாய்
! இரு மன்னர்களை அழித்ததன்றி அவர்களின் படை வீரர்கள் அணியையும் அழித்தொழித்தாய் !
செழியனே
! இந்தப் போரில் கணவனை இழந்த மகளிர், கருமணல்
போன்று விளங்கும் தம் கூந்தலை அறுத்துக்கொண்டனர். துயரத்துடன் தம் முலைகள் பொலிந்த
மார்பகங்களில்
அடித்துக்கொண்டனர்.
அதைக்
கண்ணுற்ற நீ போரை
நிறுத்திவிட்டாய். அதனால்உன் வேல்கள் பகைவர்ளைத் தாக்க
மீண்டும் பயன்படுத்தப் படவில்லை. அதனால் அவை கூர் மழுங்கிச்
சேதமடையாமல் தப்பிவிட்டன !
அருஞ்சொற்பொருள்:
=============================
================================
மீன் திகழ் விசும்பு = விண்மீன்கள் நிறைந்த ஆகாயம்;
பாய் இருள் அகல = = சூழ்ந்த இருள் அகலுமாறு ; ஈண்டுசெலல் மரபின் = விரைந்து உலாவரும் மரபினில் ; வழாஅது = பிழையாது ; உரவுச் சினம் = வலிய வெயில் ; திருகிய = முறுகிய; உருகெழு ஞாயிறு
= அச்சமூட்டும் கதிரவன் ; நிலவுத் திகழ்
= ஒளி மிகுந்த ; மதியமொடு = நிறைமதியொடு ; நிலம் சேர்ந்தாங்கு = பூமிக்கு வந்ததைப்
போல ; உடலருந் துப்பின் = போரிடும் வலிமையோடு ; ஒன்று மொழி வேந்தரை = பாண்டியனைத் தோற்கடிப்போம்
என்று சூளுரை வஞ்சினம்) கூறிய (சேரன், சோழன் ஆகிய) இரு வேந்தர்களும் ; அணங்கரும் = இறந்துபட ; பறந்தலை
= போர்க்களம்; உணங்கல் பண்ணி = சிதறிய
தசைத் துண்டங்கள் உலர்ந்து போக வைத்தாய் ; பிணியுறு முரசம் கொண்ட காலை
= வாரால் பிணிக்கப்பட்ட போர் முரசுகளை கைப்பற்றிய போது ; திண்மடை கலங்கி = வலிமையான போர்க்கருவிகளின் மூட்டுகள்
சிதைந்து அழிந்தன ; முலைபொலி அகம் உருப்ப = பொலிவான மார்பகம்
; உருத்தல் = வெப்பமடையும் வகையில் ; நூறி = மார்பில் அடித்துக்கொண்டார்கள் ; ஒள் நுதல்
மகளிர் கைம்மை கூர = போரில் கணவரை இழந்த மகளிர் எல்லாம் கைம்மையின் அடையாளமாய்
; அவிர் அறல் கடுக்கும் = ஒளிமிகுந்த கருமணல் போன்ற குவை இரும்
கூந்தல் கொய்தல் கண்டே = தங்கள் கூந்தலை அறுத்துக்கொள்வதைக் கண்டு ; (போரை நீ
நிறுத்தியதால்) நின் வேல் சிதைதல் உய்ந்தன்று = உன்னுடைய வேல்
கூர்மை மழுங்காமல் தப்பியது !
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)09]
(26-08-2026)
================================================
.jpg)