தாயே ! தங்கள் மகன்
எங்கு சென்றிருக்கிறான் ?
------------------------------------------------------------------------------------------------
பாடலின் பின்னணி:
------------------------------------
தாய் ஒருத்தியிடம் உன்
மகன் எங்கே என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அந்தத்
தாய், கேட்டவர் திகைக்கும் வண்ணம் மறுமொழி கூறுகிறாள்
! காவற்பெண்டு என்னும் பெண்பாற் புலவர் இயற்றிய அந்தப் பாடலைக் காணுங்கள்
!
--------------------------------------------------------------------------------------
புறநானூறு பாடல் எண்:
(86)
--------------------------------------------------------------------------------------
சிற்றில் நற்றூண் பற்றிநின் மகன்
யாண்டு ளனோவென வினவுதி; என்மகன்
யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும்
புலிசேர்ந் துபோகிய கல்லளை போல,
ஈன்ற வயிறோ விதுவே;
தோன்றுவான் மாதோ போர்க்களத் தானே !
--------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
--------------------------------------------------------------------------------------
சிற்றில் நல் தூண் பற்றி “நின் மகன்
யாண்டு உளன்”
என வினவுதி; என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவான் மாதோ போர்க் களத்தானே !
--------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-------------------------
வரி.(01). சிற்றில் = இந்தச் சிறிய வீட்டின் ; நல் தூண் பற்றி = வலிமையான தூணைக் கைகளால் பற்றிக் கொண்டு
நிற்கும் தாங்கள் ; நின் மகன் = உன்னுடைய
மகன்;
வரி.(02). யாண்டு உளனோ = எங்கிருக்கிறான் ; என வினவுதி = எனக் கேட்கிறீர்கள் ; என் மகன் = என்னுடைய மகன் ;
வரி.(03). யாண்டு உளன் = எங்கு இருக்கிறான் ; ஆயினும் அறியேன் = என்பதை நான் அறியேன் ; ஓரும் = இது ஒரு அசைச் சொல், இதற்குப்
பொருள் பார்க்க வேண்டியதில்லை.
வரி.(04). புலி சேர்ந்து போகிய = புலி தங்கியிருந்துவிட்டுச் செல்லும்
; கல் அளை போல ; மலைக் குகையைப் போல ;
வரி.(5). ஈன்ற வயிறோ இதுவே = மகனைப் பெற்ற வயிறு இங்கே இருக்கிறது ;
வரி.(06). தோன்றுவான் மாதோ போர்க்களத்தானே = (ஆனால்) அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும் !
--------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------
இந்தச் சிறிய வீட்டின் வலிமையான தூணைப் பற்றிக் கொண்டு , “உன் மகன் எங்கே இருக்கிறான்” எனக் கேட்கிறீர்கள். என் மகன் எங்கே இருக்கிறான் என்பதை யான் அறியேன். புலி குகையை விட்டுக் கிளம்பிய பின் அது எங்கு சென்றுள்ளது என்பதை யாரும் அறிய முடிவதில்லை !
அதுபோல அவனை
ஈன்ற வயிறோ இங்கே இருக்கிறது; அவன் எங்கு சென்றுள்ளான் என்பதை
யான் அறியேன். ஆனால் அவன் போர்க்களத்தில் தான் இருப்பான்.
அவனைக் காண விரும்பின் போர்க்களத்திற்குச் சென்று காண்பீராக
!
-------------------------------------------------------------------------------------
------------------------------
இப்பாடலிலிருந்து நாம் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள
முடிகிறது !
(01)பண்டைத் தமிழகத்தில் தூண்களுடன் கூடிய குடியிருப்பு இல்லங்கள் கட்டப்பட்டு
இருந்திருக்கின்றன என்பது இப்பாடல் மூலம் தெரியவருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே
தமிழன் கட்டடக் கலையில் சிறந்து விளங்கியிருக்கிறான் !
(02)தம் பிள்ளைகளை போர்க்களத்துக்கு அனுப்புவதற்கு பண்டைய தமிழகத்
தாய்மார்கள் அச்சப்பட்டதில்லை என்பதும் வீரம் மிக்கவர்களாக அவர்கள் விளங்கியிருக்கிறார்கள்
என்பதும் இப்பாடல் மூலம் விளங்குகிறது !
புறநானூறு என்பது பண்டைய தமிழகத்தின் வளத்தையும் மாண்பையும்
உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது இப்பாடல் மூலம் உறுதிப்படுகிறது !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”புறநானூறு”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, மேழம் (சித்திரை)21]
{04-05-2022}
-------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment