விரும்பும் பதிவைத் தேடுக !

Tuesday 14 December 2021

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (142) அறுகுளத்து உகுத்தும், அறுவயல் பொழிந்தும் !

 

உறுமிடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும் !

 -----------------------------------------------------------------------------------------------                               

 

ஒரு நாள் பேகன்  அரசவையிலிருந்து  புறப்பட்டு அந்தப்புரம் சென்றான்அவன் சென்ற பிறகு அரசவைப்  புலவர்களிடையே  அவனது  கொடைத் திறம்  பற்றிய  உரையாடல்  எழுந்தது.  பேகன் கொடைமடம் மிகுந்தவன் என்றனர் ஒரு சாரார்; அதைக் கேட்ட பரணர், பேகன் கொடைமடம் உள்ளவனாக இருந்தாலும், படை மடம்  இல்லாதவன் என்று கூறினார் !

 

வேண்டிய இடம், வேண்டாத இடம் என்று பாராமல் எல்லா இடங்களிலும் மழையானது பொழிகிறதுஅதுபோலவே,    பேகன் தன்னிடம் பரிசில் பெற வருபவர்களிடம் அவர் யார் எளியவரா,  இல்லையா, வறியவரா அல்லவா என்று வேறுபாடு பாராமல் எல்லோர்க்கும் வழங்குவான் !

 

இவ்வாறு கொடைமடம் கொண்ட பேகன், போர்க்களத்தில்,  புண்பட்டவர், மூப்பினால் ஏலாதவர், அகவையிற் சிறியார், புறமுதுகிட்டவர் ஆகிய யாருடனும்  போர் புரிவதில்லை. போர் விதிகளை மதியாமல் ஒழுகும் படைமடம் கொண்டவனல்லன் என்று புகழ்ந்து ஒரு பாடலை வடிக்கிறார். இதோ அந்தப் பாடல் !

-------------------------------------------------------------------------------------

புறநானூறு, பாடல்  எண்:(142)

-------------------------------------------------------------------------------------

 

அறுகுளத்  துகுத்தும்  அறுவயற்  பொழிந்தும்

உறுமிடத்  துதவா  துவர்நில  மூட்டியும்

வரையா  மரபின்  மாரி  போல

கடாஅ  யானைக்  கழற்காற்  பேகன்

கொடைமடம்  படுத  லல்லது

படைமடம்  படான்பிறர்  படைமயக்  குறினே ! 

-------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------------------------------------

 

அறுகுளத்து  உகுத்தும்,  அறுவயல்  பொழிந்தும்,

உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,

வரையா  மரபின்  மாரி  போல,

கடாஅ  யானைக்  கழற்கால்  பேகன்

கொடைமடம்  படுதல் அல்லது,

படைமடம்  படான்,  பிறர்  படை  மயக்குறினே !

-------------------------------------------------------------------------------------

பொழிப்புரை:

---------------------

நீர் தேவைப்படும் வறண்ட குளத்திலும் மழை பெய்கிறது; அகன்ற வயல் வெளிகளிலும் பெய்கிறது;  நீர் தேவைப்படாத களர் நிலத்திலும் பெய்கிறது ! எங்கு தேவை எனப் பார்த்து மழை பெய்வதில்லை !

 

அதுபோன்று, பரிசில் பெற வருபவர்கள் எளியவரா, வறியவரா, வளமானவரா என்று ஆராய்ந்து பாராமல் அனைவர்க்கும் வாரி வழங்கும்  கொடைமடம் கொண்டவன் தான் பேகன் !

 

ஆனால், மதங்கொண்ட யானைப் படைகளையும், வீரக் கழல் அணிந்த கால்களையும் உடைய பேகன், பகைவர்களின் படைகள் வந்து  களத்தில் பொருதும் போது  போர் மரபு நெறிகளை மீறமாட்டான்; அறநெறிக் கொள்கையினின்றும் தவறமாட்டான் !

 

ஆகவே அவன் கொடைமடம் கொண்டவனாக இருந்தாலும் படைமடம் கொண்டவன் அல்லன் !

--------------------------------------------------------------------------------------

சொற்பொருளுரை:

----------------------------

அறுகுளத்து = வறண்ட குளத்தில்;  உகுத்து = பெய்து ; அகல் வயல் = அகன்ற நெல் வயல் வெளிகளில் ; பொழிந்து = பெய்து ;  வரையா மரபின் = வரைமுறையின்றிப் பெய்யும் மரபுடைய ; மாரி  போல = மழையைப் போல ; கடாஅ யானை = மதங்கொண்ட யானை ; கழற்கால் = வீரக் கழல் அணிந்த கால்களை உடைய ; கொடை மடம் = வரைமுறையின்றிக் கொடுக்கும் அறியாமை ;  படைமடம் = போர்க்கள மரபுகளை மீறும் மடமை ; படான் = செய்யமாட்டான்; பிறர் படை = பகைவர்களின் படை ; மயக்குறினே = தாக்குகையில்.

-------------------------------------------------------------------------------------

 ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

”புறநானூறு” வலைப்பூ,

[தி.பி:2052, நளி (கார்த்திகை) 28]

(14-12-2021)

--------------------------------------------------------------------------------------



 

No comments:

Post a Comment