விண்மீன்களுக்கு இடையே உலவரும் நிலவைப் போல யானை மீது அமர்ந்து வரும் இவன் யாரோ ?
--------------------------------------------------------------------------------------
பாடலின் பின்னணி:
--------------------------------------------------------------------------------------
பண்டைத் தமிழகத்து குறுநில மன்னன் ஒருவன் யானை மீது அமர்ந்து ஊர்ந்து வருகிறான். அவனைச் சுற்றிலும் வாளேந்திய படைவீரர்கள் சூழ்ந்து நடந்து வருகின்றனர். அந்நாட்டுக் குடிமகன் ஒருவனைப் பார்த்து வழிப்போக்கன் ஒருவன் ”இவன் யார்” என்று கேட்கிறான் ! இனி பாடலைப் படியுங்கள் !
--------------------------------------------------------------------------------------
இவனியா ரென்குவை யாயி னிவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்
மறலி யன்ன களிற்றுமிசை யோனே
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்
சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே
நோயில னாகிப் பெயர்கதி லம்ம
பழன மஞ்ஞை யுகுத்த பீலி
கழனியுழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே !
--------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
--------------------------------------------------------------------------------------
”இவன் யார்?” என்குவை ஆயின், இவனே (01)
புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய,
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின்,
மறலி அன்ன களிற்று மிசையோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,(05)
பல் மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே;
நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம !
பழன மஞ்ஞை உகுத்த பீலி (10)
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழு மீன், விளைந்த கள்ளின்,
விழு நீர் வேலி நாடு கிழவோனே ! (13)
--------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-------------------------
வரி.(01). என்குவை ஆயின் = என்று கேட்பீராயின் ;
வரி(02). புலிநிறம் = புலித்தோல் ; கவசம் = போர்வீரன் மார்பில் அணியுஅணியும் பாதுகாப்பு சட்டை ; பூம்பொறி சிதைய = அழகிய தோலில் (ஆங்காங்கே துளை ஏற்பட்டுச்) சிதைவு ஏற்பட ;
வரி.(03).எய் கணை = எந்த அம்பு ; கிழித்த = துளைத்த ; பகட்டு எழில் மார்பின் = வலிய அழகிய மார்பின் ;
வரி.(04). மறலி அன்ன = எமன் போன்ற; களிற்று மிசையோனே = யானை மேல் அமர்ந்திருப்பவன் ;
வரி.(05). களிறே = யானை ; முந்நீர் = கடல் ; வழங்கு நாவாய் போலவும் = செல்லும் மரக்கலம் போலவும்;
வரி.(06). பல் மீன் நாப்பண் = விண்மீன் கூட்டத்தின் நடுவில் ; திங்கள் போலவும் = அம்புலி போலவும் ;
வரி.(07). சுறவினத்து அன்ன = சுறா மீன் கூட்டத்தை போல ; வாளோர் மொய்ப்ப = வாள் ஏந்திய படை வீரர்கள் சூழ்ந்து வர ;
வரி.(08). மரீஇயோர் அறியாது = பின்தொடர்ந்து வரும் பாகர்கள் அறியாமலேயே ; மைந்து பட்டன்றே = யானை மதம் கொண்டது ;
வரி.(09). நோய் இலன் ஆகி = நலமுடன் ; பெயர்கதில் = திரும்பி வர வேண்டும் ; அம்ம = அசைச்சொல்.
வரி.(10). பழன மஞ்ஞை உகுத்த பீலி = வயல்களில் மேயும் மயில்கள் உதிர்த்த தோகை ;
வரி.(11). கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் = உழவர்கள் நெல் அரியுடன் சேர்த்து எடுத்துச் செல்வர்;
வரி.(12). கொழு மீன் = கொழுத்த மீன் ; விளைந்த கள்ளின் = முதிர்ந்த கள்ளின் ;
வரி.(13). விழு நீர் = நீர்வளம் மிக்க ஊர் ; நாடு கிழவோனே = நாட்டின் தலைவனே !
-------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-----------------------
”இவன் யார்” என்று கேட்கிறாயா ? அம்புகளால் துளைக்கப்பட்டு ஆங்காங்கே புள்ளி புள்ளியாகச் சிதைந்து காணப்படும் புலித்தோலால் ஆகிய கவசத்தை இவன் தன் மார்பில் அணிந்து கொண்டு கூற்றுவன் போல யானை மீது வந்துகொண்டிருக்கிறான். அந்த யானை வருவது, கடலில் ஒரு மரக்கலம் வருவதைப் போலவும், பல் விண்மீன்களுக்கு நடுவே உலா வரும் நிலவைப் போலவும் காட்சியளிக்கிறது !
அந்த யானையைச் சுற்றிலும் சுறா மீன்கள் கூட்டம் போல் வாளேந்திய படைவீரர்கள் சூழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இடையே நடந்துவரும் யானைப் பாகர்கள் அறியாமலேயே அந்த யானைக்கு மதம் பிடித்துச் சினத்துடன் காணப்படுகிறது. இத்தகைய அடலேற்றின் நாட்டில், வயல்களில் மயில்கள் உதிர்த்த தோகையை உழவர்கள் நெல் அறுத்த அரியுடன் சேர்த்து அள்ளிச் செல்வார்கள் !
இவன் நாட்டில் கொழுத்த மீனும் முதிர்ந்து பக்குவப்பட்ட கள்ளும் எங்கும் கிடைக்கும். நீர்வளம் மிக்கதால் நிலவளம் மிகுந்த நாட்டுக்குத் இவன் தலைவனாகத் திகழ்கிறான். மதம் கொண்ட யானை மீது ஊர்ந்துவரும் இவன் இன்னல்கள் ஏதுமின்றி நலமுடன் திரும்பிச் செல்வானாக !
--------------------------------------------------------------------------------------
காலக் கண்ணாடி:
-----------------------------------
இப்பாடலிலிருந்து நாம் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது !
(02) மக்களின் முதன்மை உணவாக மீனும், கள்ளும் இருந்தமை இப்பாடல் வாயிலாக அறிய முடிகிறது. கள் என்பது உடல் வலிமைக்காக அருந்தும் நீராளமாகவே இருந்திருக்கிறது; வெறிமைக்காக அஃது அருந்தப்படவில்லை என்பது மன்னனே கள் அருந்தினான் என்பதிலிருந்து உறுதியாகிறது !
புறநானூறு பண்டைய தமிழகத்தின் வளத்தையும் மாண்பையும் உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது இப்பாடல் மூலம் உறுதிப்படுகிறது !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 22]
{05-05-2022}
-------------------------------------------------------------------------------------