விரும்பும் பதிவைத் தேடுக !

Wednesday, 22 December 2021

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (188) படைப்புப் பல படைத்து !


கோடி கோடியாய்க் குவித்து வைத்திருந்தாலும் குழந்தை  ஒன்று இல்லையேல்...... !

-----------------------------------------------------------------------------------------------                                                 

காதலும் வீரமும் மட்டுமே சங்க காலப் பாடல்களில் உள்ளுறைப் படிமமாக விளங்கின என்று சொல்லிவிட முடியாது. புலவரும் சரி, புரவலரும் சரி, வாழ்க்கையை அணு அணுவாகத் துய்த்துப் பாடினார்கள். நன்னெறியில் வாழ்வதற்கான நல்லுரைகளைப் பகர்ந்தார்கள் !


ஒரு சின்னக்குழந்தை செய்கின்ற குறும்புகளைப் பட்டியலிட்டுச்  சிறு பாடலாகத் தந்திருக்கிறார் பாண்டிய மன்னன்  அறிவுடைநம்பி !

 

குழந்தை குறுகுறுவென்று நடக்கிறதாம் ;  உணவு உண்கையில் இடையிலே வந்து தனது சின்னக்கையை நீட்டுகிறதாம்நெய்யூற்றிப் பிசைந்த சோற்றைக் கைகளில் எடுத்துத் தரையில் சிந்துகிறதாம்சிந்திய சோற்றைத் தொடுகிறதாம்;  வாயில் கவ்வுகிறதாம்கையால் பிசைகிறதாம்உடம்பெங்கும் சிதறுகிறதாம் ; இத்தனை செயல்களையும்  செய்து நம்மை  மயக்குகின்றது மழலைக் குழந்தை என்கிறார் அறிவுடை நம்பி !  மயக்கத்தைத் தருவது குழந்தை மட்டுமல்லமன்னரின் இனிய பாடலும்தான்!

-------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (188)

---------------------------

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப் பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்

குறுகுறு நடந்து சிறு கை நீட்டி,

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குற இல்லை தாம் வாழும் நாளே !

-------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-------------------

பல்வகைச்  செல்வங்களையும் பெற்றுபலரோடு சேர்ந்து அமர்ந்து உண்ணும்  பெரும் பேறு  பெற்றவராக ஒரு மனிதர் இருக்கிறார்அப்படிப்பட்ட மனிதருக்குக் குழந்தைச் செல்வம் இருந்தால் தான் வாழ்க்கை சுவைக்கும் !

 

அவர் உணவு உண்கையில்  இடையிடையே  குறுகுறுவென்று ஓடி வந்து  குறும்பு செய்யும்  குழந்தைச் செல்வம் இருந்தால்  அவர் வாழ்க்கை இன்பமயமாக இருக்கும்.  ஓடிவரும் குழந்தை  தன் சிறு கையினை நீட்டி நெய் கலந்த  சோற்றை வாங்கிஅதைத்  தரையில் இட்டும் பின் அதனைத் தொட்டும் , வாயால் கவ்வியும் கையால் பிசைந்தும் உடம்பில் சிதறியும் செய்கின்ற குறும்புச் செயல்களால் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது !  தன் குறும்புச் செயல்களால்  மனதை மயக்குகின்ற குழந்தைகள் இல்லாதவர்களுக்கு அவர்கள் வாழுகின்ற வாழ்க்கையே பயனற்றது;  அவர் வாழும் நாள்களும்  பயனற்றதாகும் !

------------------------------------------------------------------------------------

சொற்பொருள் விளக்கம்:

------------------------------------------

படைப்பு பல படைத்து = செல்வங்கள் பலவற்றையும் ஈட்டி; பலரோடு உண்ணும் = பலரோடு சேர்ந்து அமர்ந்து  உண்ணுகின்றஉடைப்பெருஞ் செல்வர் ஆயினும் = பெருஞ் செல்வத்தை உடைமையாகப் பெற்றவராக இருந்தாலும்; இடைப்பட குறுகுறு நடந்து = உணவு உண்கையில் இடையிலே குறுகுறுவென்று நடந்து வந்து;  சிறு கை நீட்டி = சின்னக் கைகளை நீட்டி; இட்டும் = சோற்றில் கைகளை இட்டும்;  தொட்டும் = பின் சோற்றை தொட்டு எடுத்தும்கவ்வியும் = வாயால் சோற்றைக் கவ்வியும்துழந்தும் = கைகளால் சோற்றினைப் பிசைந்தும்நெய்யுடை அடிசில் = நெய் கலந்த உணவினை; மெய்பட விதிர்த்தும் = உடம்பில் சிதறிவிழச் செய்தும்மயக்குறு மக்களை = குறும்புச் செயல்களால் மயக்குகின்ற குழந்தைகளை ; இல்லோர்க்கு = பெறாதவர்களுக்கு ; பயக்குறை இல்லை = பயனுள்ள வாழ்க்கை இல்லை ; தாம் வாழும் நாளே = அவர்கள் வாழுகின்ற நாளில்.

-----------------------------------------------------------------------------------

குழந்தையின் அத்துணைக் குறும்புகளையும் கண்முன்னே காண்பதுபோல்பாடலில்  படம் பிடித்துக் காட்டியுள்ள  பாண்டிய மன்னனின் புலமைக்கு முன்னால் – வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துய்க்கின்ற பண்புக்கு முன்னால் - வேறெதுவும் ஈடாக முடியாது ! வாழ்வின் பயனை எத்துணைத் துல்லியமாக நமக்கு விளக்கி இருக்கிறான் பாண்டியன் அறிவுடை நம்பி ! வாழ்க அவனது புகழ் !


ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2052, சுறவம் (தை),09]

{22-01-2021}