விரும்பும் பதிவைத் தேடுக !

Thursday, 16 December 2021

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (163) நின்னயந்து உறைநர்க்கும் !

 சுற்றத்தார்க்கும் பகிர்ந்து கொடு !

-----------------------------------------------------------------------------------------------                                   

பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் பண்டைய தமிழகத்தில் வாழ்ந்து வந்த புகழ் பெற்ற புலவர் பெருமக்களுள் ஒருவர்.  புலமையும் வறுமையும் ஒன்றையொன்று இணைபிரியாதது என்னும்  உலக வழக்குக்கு இணங்க இவரும் வறுமையில் வாடி வந்தார் !

 

தனது வறுமையிலிருந்து  மீட்சி பெற எண்ணி மன்னன் குமணனை நாடிச் சென்றார்.  குமணன் பெரும்  வள்ளலாகத் திகழ்ந்த காலம்மன்னனைக் கண்டார்தன் புலமையால் அவன் மனதை வென்றார்நிறைந்த செல்வத்துடனும்நிகரற்ற  பரிசுப் பொருள்களுடனும்  தன் இல்லத்திற்கு மீண்டார் !

 

பரிசுப் பொருள்களை வைத்துக் கொண்டுவறுமையிலிருந்து மீண்டு நலமாக வாழலாம் என்று  அவர் திட்டங்கள் தீட்டினாரா ? இல்லை ! வேறென்ன செய்தார் ?

 

மனைவியை அழைத்தார்என்ன செய்யவேண்டும் என்பதை அவரிடம் எடுத்துரைக்கின்றார். ”என் இல்லத்தின் எழில் விளக்கே !  என் வாழ்க்கைத் துணைவியே ! இதோ பார் குமணன் கொடுத்த செல்வக் குவியலை !”

 

இந்த செல்வங்களை எல்லாம் நீயே வைத்துக் கொள்ளலாகாது ! உன்னிடம் அன்பு பூண்டு  ஒழுகும் நம் அண்டை அயலாருக்கும்,   நீ யார் மீதெல்லாம் அன்பு வைத்திருக்கிறாயோ அவர்களுக்கும் பகிர்ந்து கொடு ! நன்னெறி வாழ்வைத் திண்மையுடன் பற்றி  நிற்கும் நின் உறவினர்களுக்கும் கொடு ! நம்மைப்போல் வறுமையில் வாடிபசிப் பிணிக்கு ஆட்பட்டுத் துன்பமுறும்  நம்  சுற்றத்தாருக்கும் பகிர்ந்து கொடு !”

 

நீ கேட்கையில் இல்லையென்று சொல்லாது நம் வயிற்றுப் பசிக்கு உணவுப் பொருள்களைக் கடனாகக் கொடுத்து உதவியவர்களுக்கும் பகிர்ந்து கொடு ! யாருக்கெல்லாம் தரவேண்டும் என்று  வரம்பிட்டுக் கொள்ளாமல்என்னைக் கலந்துரையாடி முடிவு செய்ய வேண்டும் என்றும் எண்ணாது , நாம் வளமாக வாழ்வதற்கு இந்தப் பொருள்கள் உதவுமே என்றும் எண்ணாதுஎல்லோர்க்கும் பகிர்ந்து கொடுப்பாயாக  !”

 

மலையெல்லாம்  கனிகளாக காட்சி தரும்  முதிரமலையின் தலைவன்மன்னன் குமணன் தந்த பெருஞ்செல்வத்தை  எல்லோர்க்கும் பகிர்ந்து கொடுப்பாயாக !”

 

இந்தக் கருத்துகளை ஒரு பாடலின் மூலம் அவர் வெளிப்படுத்துகிறார் ! இதோ அந்தப் பாடல் !

------------------------------------------------------------------------------------------------

புறநானூறு –பாடல் (163)

------------------------------------------------------------------------------------------------

 

நின் நயந்து உறைநர்க்கும்நீ நயந்து உறைநர்க்கும்

பல்மாண் கற்பின் நின் கிளைமுதலோர்க்கும்

கடும்பின் பசிதீர யாழ நின்

நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்

இன்னோர்க்கும் என்னாதுஎன்னோடும் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே

பழம்தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.

 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள் விளக்கம்:

 -----------------------------------------

நின் நயந்து = உன்னிடம் அன்பு பூண்டு ; உறைநர்க்கும் = (அண்டை அயலில்வாழ்பவர்களுக்கும்;  நீ நயந்து = நீ விரும்பி அன்பு செலுத்தி ; உறைநர்க்கும் = வாழ்ந்து வருபவர்களுக்கும்;

 

பல் மாண் = மாண்பு தவறாமல் ; கற்பின் = திண்மையுடன் நல்வழியில் நடந்துவரும்;  நின் கிளை முதலோர்க்கும் = உன்னுடைய உறவினர்களுக்கும்;

 

கடும்பின் கடும்பசி தீர = நம் சுற்றத்தாரின் பசியைப் போக்கும் வண்ணம்;  நெடுங் குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும் = உணவுப் பொருள்களான அரிசிபருப்பு போன்ற பொருள்களைக் கடனாகத் தந்து உதவியவர்களுக்கும்

 

இன்னோர்க்கும் என்னாது = இவருக்குத் தரலாமா வேண்டாவா என்று எண்ணாதுஎன்னொடும் சூழாது = என்னைக் கேட்டுச் செய்ய வேண்டும் என்றும் கருதாமல்எல்லோர்க்கும் = அனைவருக்கும்;  கொடுமதி = பகிர்ந்து கொடுப்பாக;

 

மனைகிழவோயே = என் இல்லக் கிழத்தியே;  பழம் தூங்கு = எங்கெங்கும்  கனிகள் பழுத்துக் குலுங்கும்முதிரத்துக் கிழவன் = முதிர மலையின் தலைவன்திருந்து வேல் குமணன் = கூரிய வேலைத் தாங்கிய  வீரம் பொருந்திர குமணன்நல்கிய வளனே = கொடுத்த செல்வத்தை

-------------------------------------------------------------------------------------------------

ஈத்துவக்கும் இன்பம் அறிந்த ஒரு  தமிழ்ப் புலவனின் உண்மை மொழிகள் இவை. அவர் உரைக்கின்ற ஒவ்வொரு மொழியிலும் அவரது உள்ளத்து உயர்வினையே நாம் பார்க்க முடிகிறது.  தன்னுடைய மனைவி,  தன்னிடம் கேட்டுவிட்டுத்தான் கொடுக்கவேண்டும் என்று எங்கே தயக்கம் காட்டி, கொடுக்க நினைப்பவர்களுக்குக்கூட கொடுக்காமல் இருந்துவிடுவாளோ என்பதால் முதலிலேயே சொல்லிவிடுகின்றார், “என்னோடும் சூழாது” என்று!

 

இன்பம் எது? என்பதை உணர்ந்திருந்த பண்டைய பெரியோர்களின் உயர்ந்த மாண்பை என்னென்பது?

 

கையூட்டும் ஊழலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படும் கயமையும் நிறைந்திருக்கும் தமிழகத்திலாஇத்தகு சான்றோர்களும் வாழ்ந்தார்கள் என்பது வியப்பாக இருக்கிறதல்லவா?

 

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”புறநானூறு” வலைப்பூ,

தி.பி: 2052, சிலை (மார்கழி),01]

{16-12-2021}

---------------------------------------------------------------------------------------------