விரும்பும் பதிவைத் தேடுக !

Wednesday, 2 September 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (312) ஈன்று புறந்தருதல் !

 

புறநானூறு (312) ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே !

 

=============================

பாடியோர்:

=============================

பொன்முடியார். பொன்முடியார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண்புலவர். மறக்குடியில் பிறந்தவராக குறிப்புகள் கிடைகின்றன. இவர் சேரநாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டின் வடக்குப்பக்கத்தில் பொன்முடி நல்லூர் என்னும் ஊரில் பிறந்தவர் ஆவார். இவரின் பெருமையைப் பாராட்டி அரசர் எவரேனும் பொன்முடி பரிசளித்து இருக்கலாம் என்கிறார் உ.வே.சா.  இவர் இயற்றியதாக  புறநானூற்றில் மூன்று பாடல்கள்  பாடல்கள் உள்ளன. அவை 299, 310, 312 வரிசை எண்களில் உள்ளன. இவரின் பெயரால் பொன்முடி என்ற ஊர் பெயர் உருவாகி, தற்பொழுது அது மருவி பொம்மிடி என மாறி இருக்கலாம். இவ்வூர் இப்பொழுது தருமபுரி மாவட்டத்தில் உள்ளது !

 

=============================

பாடப்பட்டோர்:

=============================

எவருமிலர்.

 

=============================

பாடலின் பின்னணி

==============================

ஒரு சிறந்த போர் வீரனை உருவாக்குவதில் யார் யாருக்குப் பங்கு இருக்கிறது என்பதை விளக்குகிறார் பொன்முடியார் இப்பாடலில் !

==============================

திணை : வாகை.

துறை : மூதில்முல்லை.

===============================

 ==============================================

புறநானூறு (312) ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே !

===============================================

 

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே,
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே,
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே,
நன்னடை  நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக் 
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே !

 

===============================================

 

 =============================

சொற்பொருள்:  

==============================

 

ஈன்று புறம் தருதல் = பெற்று, பாலூட்டி, சீராட்டி வளர்த்து விடுதல் ;  என்தலைக் கடனே =  தாயாகிய எனது முதன்மையான கடமை ஆகும்; சான்றோன் ஆக்குதல் =  நற்பண்புகளும் நல்லியல்புகளும் உடையவனாக வளர்த்தல் ; தந்தைக்குக் கடனே =  தந்தையின் கடமை ஆகும்  ; வேல் =  வடித்துக் கொடுத்தல் – போர்க்கருவியான வேலைச் செய்து கொடுத்தல் ; கொல்லற்குக் கடனே = இரும்பு வினைஞரின் (கொல்லனின்) கடமை ஆகும்.

 

நன்னடை நல்கல் =  நல்ல போர்ப் பயிற்சியை அளிக்கச் செய்வது ;   வேந்தற்குக் கடனே – வேந்தனின் கடமையாகும். ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி =  ஒளிரும் வாள் கொண்டு போர் செய்து ; களிறு எறிந்து = தன்னைக் கொல்ல வரும் யானையை வேல் கொண்டு தாக்கிக் கொன்று ;  பெயர்தல் – வெற்றியோடு மீளுதல், காளைக்குக் கடனே – இளங் காளையான ஆண்மகனின் கடமை யாகும் !

 

=============================

பொருளுரை:  

=============================

 

மகனைப் பெற்று வளர்த்து ஆளாக்குதல் எனது முதன்மையான கடமை.  அவனைக் கல்வியும், நற்பண்புகளும் நிறையப் பெற்ற சான்றோனாக ஆக்குவது அவனுடைய தந்தையின் கடமை.  அவனுக்குக் கூரிய வேலை வடித்துக் கொடுப்பது கொல்லனின் கடமை.  நல்ல போர்ப் பயிற்சியை அளிக்கச் செய்வது நாட்டை ஆளும் வேந்தனின் கடமை.  ஒளிரும் வாளை ஏந்திப் போர் செய்து பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியோடு திரும்பி வருவது அந்த இளைஞனின் கடமை !

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)16]

(02-09-2026)

================================================ 

தாயும் சேயும்

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (191) யாண்டு பலவாக நரையில !

 

புறநானூறு (191) யாண்டு பலவாக, நரையில ஆகுதல் !


=============================

பாடியவர் :

=============================

பிசிராந்தையார், பிசிராந்தையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் ஆவார். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் ஆறு பாடல்கள் உள்ளன. புறநானூற்றில் நான்கும், அகநானூற்றில் ஒன்றும், நற்றிணையில் ஒன்றுமாக இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நேரில் காணாமலேயே கோப்பெருஞ்சோழன் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். இந்த மதிப்பு   விரைவில்   இறுகிய   நட்பாக   மலர்ந்தது.   கோப்பெருஞ்சோழன் தன் பிள்ளைகள் மீது கொண்டிருந்த மன வருத்தத்தால், வடக்கிருந்த போது பிசிராந்தையாரும் அங்குச் சென்று அவனுடன் வடக்கிருந்து  உயிர் துறந்தார்.

=============================

பாடப்பட்டோர்:

=============================

எவருமிலர்.

==============================

திணை : பொதுவியல்

துறை : பொருண்மொழிக் காஞ்சி

====================================

பாடலின் பின்னணி: 

=====================================

தனக்கு அகவை முதிர்ந்தும் கூட, தன் தலைமுடி நரையின்றி இருப்பதற்கான  காரணங்களை  இப்பாடலில் பிசிராந்தையார் கூறுகின்றார் !

======================================


===============================================

புறநானூறு (191) யாண்டு பலவாக, நரையில ஆகுதல் !

===============================================

யாண்டு பலவாக, நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்,
யான் கண்ட அனையர், இளையரும், வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க அதன்தலை 
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே.

===============================================

===========================

சொற்பொருள்:  

============================

யாண்டு பலவாக =  நீர் பிறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன, முதுமை அடைந்துவிட்டீர்கள் ; நரை இல ஆகுதல் =  ஆனால் தலைமுடி நரைக்கவில்லை ;  யாங்கு ஆகியர் = இஃது எப்படி உங்களால் முடிந்தது;  என வினவுதிர் ஆயின் = எனக் கேட்பீர்களாயின்  ; மாண்ட என் மனைவியோடு = சிறந்த பெண்மணியான என் மனைவியோடு ;  மக்களும் நிரம்பினர் = அறிவு நிறைந்த பிள்ளைகளும் வாய்த்தனர் ; யான் கண்ட அனையர் = நான் என்ன நினைக்கிறேனோ, அவ்வாறே நினைக்கும் ; இளையரும் = பணியாட்களும் அமைந்தனர் ; வேந்தனும் = என் நாட்டு மன்னனும் ; அல்லவை  செய்யான் = பிறருக்குத்  தீங்கு  செய்யாது ; காக்க = எம்மைப் பாதுகாக்கிறான் ;  அதன்தலை – அதற்கு மேல் ; ஆன்று அவிந்து அடங்கிய = பணிவும் அடக்கமும் கொண்ட ; கொள்கைச் சான்றோர் பலர் =  உயர்ந்த கொள்கைகளின்படி வாழும் சான்றோர்கள் பலரும் ; யான் வாழும் ஊரே = வாழ்கின்ற ஊரே நான் வாழும் ஊர் ஆகும் ; நரை இல ஆகுதல் =  அதனால்  எனக்குத் தலைமுடி நரைக்கவில்லை !

=============================

பொருளுரை:  

=============================

நீர் பிறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன, முதுமை அடைந்துவிட்டீர்கள், ஆனால் தலைமுடி நரைக்கவில்லை; இஃது எப்படி உங்களால் முடிந்தது எனக் கேட்பீர்களாயின், சொல்கிறேன்; சிறந்த பெண்மணியான என் மனைவியும், அறிவு நிறைந்த பிள்ளைகளும், எனக்கு வாய்த்திருக்கிறார்கள்.  நான் என்ன நினைக்கிறேனோ அவ்வாறே நினைக்கும் பணியாட்களும் அமைந்திருக்கின்றனர்.  என் நாட்டு மன்னனும் பிறருக்குத் தீங்கு செய்யாது  எம்மைப் பாதுகாக்கிறான்.  இவற்றுடன் பணிவும் அடக்கமும் கொண்ட உயர்ந்த கொள்கைகளின்படி வாழும் சான்றோர்கள் பலரும் வாழ்கின்ற ஊரே நான் வாழும் ஊர் ஆகும். அதனால்  எனக்குத் தலைமுடி நரைக்கவில்லை !

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)16]

(02-09-2026)

================================================ 


 

 

 

 

Tuesday, 1 September 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (187) நாடா கொன்றோ, காடா !


புறநானூறு (187) நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ !

=============================

 பாடியவர் :

=============================

ஔவையார்.  ஔவையார் என்னும் பெயரில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59  எண் உள்ளன.

============================

பாடப்பட்டோர் :

============================

எவருமிலர்.

============================

திணை : பொதுவியல்

துறை  :பொருண்மொழிக் காஞ்சி

============================

பாடலின் பின்னணி:  

============================

நாட்டின் இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொருத்தது என்ற கருத்தை இப்பாடலில் ஔவையார் கூறுகின்றார்.

===============================================

புறநானூறு (187) நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ !

===============================================

நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ,
அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே.

===========================

சந்தி பிரித்து எழுதிய பாடல்

===========================

நாடாக ஒன்றோ ; காடாக ஒன்றோ,

அவலாக ஒன்றோ ; மிசையாக ஒன்றோ,

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை; வாழிய நிலனே !

==============================

சொற்பொருள்: 

==============================

நாடாக ஒன்றோ = நாடு என்ற ஒன்றாகவும் ; காடாக ஒன்றோ = காடு என்ற ஒன்றாகவும் ; அவலாக ஒன்றோ = பள்ளம் என்ற ஒன்றாகவும் ;  மிசையாக ஒன்றோ = மேடு என்ற ஒன்றாகவும் ; எவ்வழி = இந்த நிலம் எவ்வாறு இருந்தாலும் ;  ஆடவர் = அங்கு வாழும் ஆண்கள் ; நல்லவர் = நல்லவர்களாக இருந்தால் ; நிலமே அவ்வழி = நிலமே நீயும் அவ்வழியில் ; நல்லை =ல்ல நிலமாக இருப்பாய்  ;  நிலனே  வாழிய = நிலமே நீ வாழ்வாயாக !

 

=============================

பொருளுரை:  

=============================

நிலமே !  நீ நாடாகவோ, காடாகவோ, பள்ளமாகவோ அல்லது மேடாகவோ, எப்படி இருந்தாலும், அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய் !  நீ வாழ்க!

 

ஆடவர்கள்தானே காடாகவோ, மேடாகவோ, பள்ளமாகவோ உள்ள நிலத்தைத் திருத்திப் பண்படுத்தி, வளப்படுத்தி வேளாண்மை செய்யத் தக்கதாக மாற்றுகிறார்கள். ஆகையால் ஆடவர்கள் உயர்ந்த எண்ணம் படைத்த உழைப்பாளிகளாக இருந்தால் எந்த நிலமும் நல்ல நலமாக இருக்கும் என்பதை ஔவையார் சுட்டிக் காட்டுகிறார் !

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)15]

(01-09-2026)

================================================ 

மேடும் பள்ளமும்

 

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (145) மடத்தகை மாமயில் பனிக்கும் !

 

புறநானூறு (145) மடத்தகை மாமயில் பனிக்கும் !

============================

பாடியவர்:

=============================

பரணர். பரணர் என்னும் பெயர் கொண்ட பல புலவர்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்துள்ளனர். சங்ககாலத்தைச் சேர்ந்த பரணர் பாணர் குலத்தைச் சேர்ந்தவர். பாணர் என்ற சொல் மருவி பரணர் ஆனது. இவர் ஒளவையார் காலத்தைச் சேர்ந்தவர். அதியமானைப் பாடினார். சேரன் செங்குட்டுவனைப் பற்றி அதிகம் பாடினார். பரணர் பாடிய எண்பத்தி ஐந்து பாடல்கள் சங்கத்தொகைப் பாடல்களில் தொகுக்கப்பட்டுள்ளன. நக்கீரர், கபிலர், பரணர் ஆகிய மூவரையும் பழந்தமிழின் முப்பெரும் புலவர்களாக அறிஞர்கள் கருதினர்.

 ============================

பாடப்பட்டோன்

=============================

வையாவிக் கோப்பெரும் பேகன்.  மயில் உடுத்திக் கொள்ளாது, போர்த்திக் கொள்ளாது எனத் தெரிந்திருந்தும், தான் குளிரில் நடுங்கும்போது போர்த்தியிருந்த மேலாடையை  ஆடும் மயிலுக்குக் குளிரில் அது நடுங்குவதாக எண்ணிப் போர்த்தி விட்டவன் வையாவிக் கோப்பெரும் பேகன். எமக்கு இப் பரிசில்களை வழங்கிய எம் அரசன் அவன். சிறிதோ, பெரிதோ, எந்த அளவாயினும் ஈதல்தான் பெரிது எனச் செயல்படுபவன் !

=============================

திணை : பெருந்திணை

துறை  : குறுங்கலி

=============================

பாடலின்  பின்னணி:  

=============================

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பேகன் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்துக்கொண்டு, தன் மனைவியைப் பிரிந்திருந்தான்.  அந்த நேரத்தில் பரணர் பேகனிடம் சென்று பாடினார்.  அவருக்குப் பேகன் பரிசில் அளிக்க முன்வந்தான்.  அதைக் கண்ட பரணர், “நான் பசியால் இங்கு வரவில்லை.  எனக்குப் போற்றிப் பாதுகாக்க சுற்றத்தார் யாருமில்லை.   நான் வேண்டும் பரிசு, நீ இன்று இரவே சென்று உன் மனைவியின் துயரத்தைத் தீர்ப்பது தான்” என்று கூறுகின்றார்.

===============================================

புறநானூறு (145) மடத்தகை மாமயில் பனிக்கும் !

===============================================

மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்

படாஅம்  ஈத்த கெடாஅ நல்லிசை

கடாஅ யானைக் கலிமான் பேக !

பசித்தும் வாரோம், பாரமும் இலமே;

களங்கனியன்ன கருங்கோட்டுச் சீறியாழ் 

நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி,

அறம் செய்தீமோ, அருள் வெய்யோய்என,

இஃது யாம் இரந்த பரிசில்: அஃது, இருளின்

இன மணி நெடுந்தேர் ஏறி,

இன்னாது உறைவி அரும் படர் களைமே !

===============================================

=========================

சொற்பொருள்:   

=========================

மடத்தகை மாமயில் = தோகை விரித்து ஆடிக் கொண்டிருக்கும் அழகிய வண்ணமயில் ; பனிக்கும் என்று அருளி = குளிரால் நடுங்கும் என்று எண்ணிப் பரிவு கொண்டு ; படாஅம்  ஈத்த கெடாஅ நல்லிசை =  போர்வை கொடுத்த  கெடாத நற்புகழ் ஈட்டியுள்ள ;   கடாஅ யானைக் கலிமான் பேக  =  மத வெறி கொண்ட யானைப் படையும் வீறு கொண்ட  குதிரைப் படையும் வைத்திருக்கும் பேகனே !

 

பசித்தும் வாரோம், பாரமும் இலமே =  யாம் பசிக்கொடுமை தாளாமல் உன்னிடம் வரவில்லை, தாளமுடியாத குடும்பச் சுமையும் எனக்கு இல்லை ;  களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறி யாழ் =  களாப் பழத்தைப் போன்ற கரிய நிறத் தண்டை உடைய சிறிய யாழின் ;  நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி = இசையின் தன்மை தெரிந்து வாழ்வோர்  தலையை அசைத்துச் சுவைத்துக் கொண்டாடும்படி ;  அறம் செய்தீமோ = அறத்தை செய்வாயாக !

 

இருளின் இன மணி நெடுந்தேர் ஏறி = இந்த இரவிலேயே நிறைந்த மணிகள் தொங்கும் பெரிய தேரில் நீ ஏறிச் சென்று ; இன்னாது உறைவி அரும் படர் களைமே = துயரத்துடன் வாழும் உன் மனைவியின் பெரும் துன்பத்தைக் களைவாயாக  ;  அருள் வெய்யோய் = அருளை விரும்புபவனே ! ; இஃது யாம் இரந்த பரிசில் = இதுவே யாம் உன்னிடம் கேட்கும் பரிசில் ;

=========================

பொருளுரை:  

==========================

தோகை விரித்து ஆடிக் கொண்டிருக்கும் அழகிய வண்ணமயில் குளிரால் நடுங்கும் என்று எண்ணிப் பரிவு கொண்டு, அதன்மேல் போர்வையைப் போர்த்தி அழியாப் புகழ் கொண்டவனே !  மத வெறி கொண்ட யானைப் படையும் வீறு கொண்ட  குதிரைப் படையும் வைத்திருக்கும் பேகனே !

 

யாம் பசிக்கொடுமை தாளாமல் உன்னிடம் வரவில்லை, தாளமுடியாத குடும்பச் சுமையும் எமக்கு இல்லை. களாப் பழத்தைப் போன்ற கரிய நிறத் தண்டை உடைய சிறிய யாழ் இசையின் தன்மை தெரிந்து வாழ்வோர்,  தலையை அசைத்து, சுவைத்துக்  கொண்டாடும்படி, நீ செய்யப்போகும் அறம் அமையட்டும் !

 

அருளை விரும்புபவனே ! இந்த இரவிலேயே மணிகள் தொங்கும் பெரிய தேரில் நீ ஏறிச் சென்று துயரத்துடன் வாழும் உன் மனைவியின் பெரும் துன்பத்தைக் களைவாயாக ! இதுவே யாம் உன்னிடம் கேட்கும் பரிசில் !

  ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)15]

(01-09-2026)

================================================ 

மயிலுக்குப் போர்வை தந்த பேகன்.

 

 

 

 

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (107) பாரி பாரி என்று பல ஏத்தி!

புறநானூறு (107) பாரி பாரி, என்று பல ஏத்தி!

=============================

பாடியவர் :

=============================

கபிலர். கபிலர் சங்க காலத்துத் தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப்  பாடல்களுள் மிக அதிக எண்ணிக்கையில் பாடல்களை இயற்றியவர். சங்க காலப் புலவர் கபிலரின் காலம் கி.மு 3-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலமாகும். இவர் இயற்றிய பாடல்களுள் மிகச்சிறந்து விளங்குவது பத்துப்பாட்டிலுள்ள குறிஞ்சிப் பாட்டு ஆகும். இதில் குறிஞ்சி நிலத்தில் பூத்துக் கிடந்த 99 பூக்களையும்,  சிறப்பாகப் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூவையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார் !

 

=============================

பாடப்பட்டோன்:

=============================

வேள் பாரி. வேள்பாரி அல்லது பாரி, பறம்பு மலையைத் தலைமை இடமாய்க் கொண்டு ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னர் ஆவார். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்புநாடு முந்நூறு (300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது “பிரான்மலை” என்று அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து  மதுரை செல்லும் வழியில் கொட்டாம்பட்டியிலிருந்து விலகிச் செல்லும் சாலையில் கிழக்கு நோக்கிச் சென்றால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை !

 

=============================

திணை:  பாடாண்

துறைஇயன் மொழி

=============================

 

=============================

பாடல் பின்னணி:  

=============================

பாரியின் கொடைச் சிறப்பைக்கூற, கபிலர் இயற்றிய பாடல் இது.

==============================

 

 

================================================

புறநானூறு (107) பாரி பாரி, என்று பல ஏத்தி !

================================================

பாரி  பாரி’ என்று பல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர்  செந்நாப் புலவர்,
பாரி ஒருவனும் அல்லன்,
மாரியும்  உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே.

===============================================


=============================

சொற்பொருள்:   

==============================

பாரி பாரி = பாரி பாரி ; என்று பல ஏத்தி = என்று அவனது பல செயல்களைச் சொல்லி  வாழ்த்தி ; ஒருவர்ப் புகழ்வர் = ஒருவனையே பலரும் புகழ்கின்றனர்;  செந்நாப் புலவர் = தமிழில் புலமை மிக்க வல்லமை சான்ற புலவர்கள் ;  ஈண்டு = இங்கே ; உலகு = இந்த உலகத்தை;  புரப்பதுவே  = பாதுகாப்பதற்கு ; பாரி = வேள் பாரி;  ஒருவனும் அல்லன் = ஒருவன் மட்டும் இல்லை ;  மாரியும் உண்டு =  வானின்று பொழிகின்ற மழையும் உண்டு ;

 

=============================

பொருளுரை:   

=============================

தமிழில் புலமை மிக்க வல்லமை சான்ற புலவர்கள் எல்லாம் “பாரி என்னும் ஒருவனைப் பற்றியே, அவனது  கொடைத் திறச் செயல்களைச் சொல்லி  வாழ்த்திப் புகழ்கின்றனர்; ஆனால் இந்த உலகைத் தனது கொடைத் திறத்தால் பாதுகாக்க,  இங்கே பாரி ஒருவன் மட்டும் இல்லை, வானின்று பொழியும் மழையும் உண்டு என்பதை அறியுங்கள் !

 

இப்பாடலில் கபிலர் பாரியைத் தாழ்த்திப் பேசவில்லை. கைம்மாறு கருதாமல் உலக மக்களுக்கு நீர் வளத்தை அளித்து, அவர்களைப் பாதுகாப்பது மழை. அதைப் போல் கைம்மாறு கருதாமல் புலவர்க்கும் வறியோர்க்கும் அள்ளி அள்ளிக் கொடுத்து அவர்களைக் பாதுகாத்து வரும் பரிவுள்ளம் கொண்டவன் பாரி என்று அவனைப் புகழ்கிறார் ! ஒருவரைத் தாழ்த்துவது போல் தொடங்கி உயர்த்திப் பேசுவது வஞ்சப்புகழ்ச்சி எனப்படும். அந்த உத்தியைத் தான் கபிலர் இங்கு கையாள்கிறார் !

 ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)15]

(01-09-2026)

================================================ 

பிரான்மலை எனப்படும் பறம்பு மலை

 


Monday, 31 August 2026

புறநானூறு (வை.வேதரெத்தினம் உரை) (95) இவ்வே பீலி அணிந்து !

 

புறநானூறு ( 95) இவ்வே பீலி அணிந்து !

 

=============================

 பாடியவர் :

 =============================

 

ஔவையார்ஔவையார் என்னும் பெயரில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59  எண் உள்ளன. அவற்றில்  புறத்திணைப் பாடல்கள் 33.  ஏனைய  26 அகத்திணைப் பாடல்கள். அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார் !

 

 

============================

 பாடப்பட்டோன் :

 ============================

 

அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமான் நெடுமான் அஞ்சி  தகடூரை (இப்பொழுது தர்மபுரி என வழங்கப்படுகிறது) ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவன். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூ பெயர். 'அதியமான்' என்பது 'அதியர் கோமான்' என்பதன் மரூ பெயர்.  அஞ்சி என்பது இவது இயற்பெயர்.[1] இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு  தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர் !

 

==========================================

 திணைபாடாண்.

 

துறை : வாள்மங்கலம்.ள் மங்கலம்

===========================================

 


=============================

 பாடலின் பின்னணி:

 =============================

 

தொண்டை நாட்டை ஆண்டு வந்த குறுநில மன்னன், தொண்டைமான்.  இவன் தகடூரை ஆண்ட அதியமான் மீது பகைமை கொண்டான்.  அதன் விளைவாக அதியமானோடு போர் புரிய எண்ணினான். அதை அறிந்த அதியமான் ஔவையாரை அவனிடம் தூதுவராக அனுப்பினான். தொண்டைமான் தன் படைப் பெருமையை ஒளவையாருக்குக் காட்ட விரும்பித் தன் படைக்கலக் கிடங்குக்கு அவரை அழைத்துச் சென்றான்.  அவன் உள்நோக்கத்தை அறிந்த ஔவையார் தொண்டைமானிடம் என்ன சொன்னார் என்பதே இப்பாடலின் உட்பொருள் !

 

===================================================

புறநானூறு ( 95) இவ்வே பீலி அணிந்து !

===================================================

 

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண் திரள் நோன் காழ்  திருத்தி நெய் அணிந்து
கடி உடை வியன் நகர், அவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து
கொல் துறைக் குற்றில மாதோ ---என்றும் 
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந்நுதி வேலே.

 

=============================

 சொற்பொருள்:  

 =============================

 

இவ்வே = இவை ;  (வேல்கள், போர்க்கருவிகள்) , பீலி அணிந்து = மயில் இறகு போர்த்தப்பட்டு ; மாலை சூட்டி = பூமாலை சூடப்பட்டு; கண் திரள் = உடல் பகுதி திரண்ட ; நோன்காழ் = வலிமையான காம்பு ; திருத்தி = அழகு செய்து; நெய் அணிந்து = நெய் பூசப்பட்டு;  கடி உடை=   காவல் உடைய ; வியன் நகர் =   பெரிய வீடு ; (அரண்மனை,)

 

அவ்வே அவ்வே = அவையே அவையே ;  பகைவர் குத்தி = பகைவரைக் குத்தி ; கோடு =  வேலின் பக்கம் ; நுதி சிதைந்து =  நுனி சிதைந்து ; கொல் துறை =  கொல்லனின் பட்டறை ; குற்றில =  சிறிய இடத்தில் ; மாதோ  = மாது, ஓ அசைநிலைகள் ; என்றும்  = எப்பொழுதும் ; உண்டாயின் =  உண்டு என்றால் ; பதம் கொடுத்து =  உணவு கொடுத்து ;

 

இல்லாயின் =  இல்லை என்றால் ;  உடன் உண்ணும்  = உடன் சேர்ந்து உண்ணும் ; இல்லோர் =  இல்லாதவர்களின் ; ஒக்கல் ; சுற்றம் ; தலைவன் =  தலைவன் ; அண்ணல் = தலைமையுடையவன்;  எம் கோமான் =   எங்கள் மன்னன் ; வைந்நுதி  = கூர்மையான நுனி ; வேலே = வேற்படை ; (வேல்கள்)

=============================

 பொருளுரை:   

 =============================

 

இங்கே இருக்கும் போர்க்கருவிகள் அனைத்தும் மயில் இறகு போர்த்தப்பட்டு, பூமாலை சூடப்பட்டுத் திரண்ட வலிமையான கைப்பிடிகள் அழகுற செய்யப்பட்டு,  நெய் பூசப்பட்டு,  பயன்படுத்தப் படாமல், அரண்மனையில் ஓரு பகுதியான  கருவிகள் கிடங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன !

 

ஆனால் அதியமான்  அரண்மனைக் கிடங்கில்  இருந்த வேலும், வாள் போன்ற ஏனைய போர்க்கருவிகளும் பகைவருடன் அடிக்கடிப் போரிட்டு வெல்லப் பயன்படுத்தப் படுபவதால்,  அவற்றின் தலையும், நுனியும், முகமும் மழுங்கிச் சிதைந்து, சீர் செய்வதற்காக   அவ்வப்போது கொல்லனின் பணிக் களரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்குக் கொட்டிக் கிடக்கின்றன !

 

செல்வமும், உணவும் நிறைந்திருக்கும் பொழுது எல்லோருக்கும் உணவளித்த பின் உணவு உண்பவன் எங்கள் மன்னன். நாட்டின்  செல்வ நிலை தளர்ச்சி அடையும் போது அரண்மனை உணவை அனைவருக்கும் பங்கிட்டுத் தந்து  அவர்களுடன் சேர்ந்து உண்பவனும் எங்கள் மன்னன் தான், வறியவர்களின் சுற்றத்திற்குத் உதவுகின்ற தலைவனும் எங்கள் மன்னன்தான் !

 

எம்    மன்னனே     எம்  அன்பிற்குரிய        தலைவன்.     கூரிய    

வேலும்   அவனே !

 

  ===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புறநானூறு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு; 2057, மடங்கல் (ஆவணி)14]

(31-08-2026)

================================================ 

அதியமானின் வேல்களைத் திருத்தும் கொல்லுப் பட்டறை